June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பூவிரியும்,காவிரியின்..5

ஐவி. நாகராஜன்
ஒப்பந்தம் முடிய இருந்த 1974-ல் மத்தியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடந்தது. இந்நிலையில் அடுத்து வரும் தேர்தலைக் குறிவைத்து இந்திராகாந்தி காய் நகர்த்தினார். தமிழகம் வழக்குகளை வாபஸ் பெற்றால் சமரசப் பேச்சில் தீர்வை ஏற்படுத்துவதாக தமிழக எம்பிக்களிடம் அவர் கூறினார். அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவின்படி வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அடுத்த ஆண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. திமுக ஆட்சியை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அமல்படுத்தினார் இந்திரா. ஆனாலும் காவிரி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. ஆனால் பலகட்ட பேச்சுக்கள் பலனின்றிப் போயின.
இந்த நேரம் நாடு முழுக்க நதிநீர் பங்கீட்டில் பிரச்சனைகள் எழுந்தன. ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. காவிரிக்கும் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்தது மத்திய அரசு. காவிரி தீர்ப்பாயம் சில தீர்ப்புகளை வழங்கியது. அவற்றுக்கு எதிராக மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. நீதிமன்ற தலையீட்டுக்குப் பின் தண்ணீர் பகிர்வு குறித்த ஒரு இடைக்கால தீர்ப்பை தீர்ப்பாயம் வழங்கியது. அதற்கு எதிராகவும் காவிரி தனக்கே சொந்தம் என்றும் சட்டசபையில் புதிய சட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றியது. காலம் மாறியது காவிரியின் காட்சிகளும் மாறின.
பிறகு தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விலை பொருள் விவசாயிகள் பாதுகாப்பு சங்கமும் மத்திய அரசும் தொடர்ந்த வழக்கில் 1990-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமானதாகும். இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான ஜீவாதார உரிமைதான் தண்ணீருக்கான உரிமை என அரசியல் சட்டம் பிரிவு 21 வலியுறுத்துகிறது என தீர்ப்பில் குறிப்பிட்டது. தமிழக விவசாயிகளின் சார்பில் காவிரி நதிநீர் தீர்ப்பாயம் நியமிக்கக் கோரி இந்த வழக்கு 1983-ல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தனிப்பட்ட ஒரு விவசாயியாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா, ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்த சு.கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் மற்றொரு வழக்கை விவசாய சங்கத்துடன் சேர்ந்து தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 1983 முதல் 1987 மார்ச் வரை தமிழகம்,கர்நாடக, கேரளா மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் சமரசம் பேசி ஒரு முடிவை எட்ட ஒரு முயற்சி நடந்தது. இதன்படி 26 முறை கூட்டங்கள் நடந்தன. ஆனால் சமரசம் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
(தொடர்புக்கு : 9787368271 )

Spread the love