September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புல்டோசர் அரசியலை நிறுத்துங்கள்!

ஜனநாயகத்தின் வெற்றி சிறுபான்மைச் சமூகத்தின் பாதுகாப்பில் உள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மைச் சமூகம் பதட்டத்திலேயே வாழ்கிறது. ராம நவமி ஊர்வலம் என்று சொல்லி குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் கலவரங்களைத் தூண்டியுள்ளது சங் பரிவாரம். ஆனால் பழியை முஸ்லிம்கள் மேல் சுமத்திவிட்டு, காவல்துறையினர் புல்டோசர் கொண்டு இஸ்லாமிய மக்களின் குடியிருப்பு களையும், கடைகளையும் இடித்து வாழ்வாதாரங்களைச் சூறையாடியுள்ளனர். உச்சநீதிமன்றம் தலையிட்டுத் தடுத்த பின்னரும் டில்லி ஜஹாங்கீர்புரியில் புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஒன்றிய உள்துறை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் டில்லி காவல்துறை. ஆக்கிரமிப்புகளே இடிக்கப்பட்டன என்ற காவல்துறையின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆக்கிரமிப்புகள் என்றால் அவற்றை நீக்கச் சொல்லி முறையான முன்னறிவிப்பு கொடுக்காமல் எவ்வாறு புல்டோசர்களைக் களம் இறக்கலாம் என்று மிகச் சரியான நெற்றியடிக் கேள்வி கேட்டுள்ளது. “முடைடiபே ய ரெவவநசகடல ரனேநச ய உhயசiடிவ’ள றாநநட” என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல் தெருவோரக் கடைகளை அப்புறப்படுத்த புல்டோசர் எனும் ராட்சஸ இயந்திரங்களா! அதிர்ச்சி அளிக்கும் விதமாய் கர்நாடக அரசும் கலகம் விளைவித்தால் புல்டோசர் தாக்குதல் நடத்துவோம் என்று சிறுபான்மைச் சமூகத்தினரை எச்சரித்துள்ளது. இது போக, இதுவரை ராமர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தியவர்கள் இப்போது அனுமன் பக்கம் திரும்பியுள்ளார்கள். நாட்டின் நான்கு திசைகளிலும் அனுமனுக்கு 108 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைப்போம் என்று பிரதமர் மோடி அறிவிக்கிறார். இந்தியாவில் சிறுபான்மை மக்களைக் குறிவைத்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் இந்தியப் பொருட்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும், அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் பிரச்சனை உருவாகும், இந்தியாவை உலகளவில் நம்பகத்தன்மையற்ற நாடாக்கி விடும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கிறார். ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவது எளிதல்ல. அப்படி வாங்கும்போதும் காவல்துறை அந்த தீர்ப்பையும் காலில் போட்டு மிதிக்கிறது. ராமர் கோவில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து, முத்தலாக் தடைச்சட்டம், குடியுரிமைச் சட்டம் வரிசையில் இன்று வெறுப்பு அரசியலின் சின்னமாய் புல்டோசர் மாறியுள்ளது.
-ஆசிரியர் குழு

Spread the love