June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புத்தக அறிமுகம்

நரக மாளிகை
ஆசிரியர் : சுதீஷ் மின்னி.. வெளியீடு -பரிசல் பதிப்பகம்.. விலை- ரூ.150
புத்தகம் பெற கைபேசி எண்கள் – 73737 37742/ 91 93828 53646


நரக மாளிகை என்பது ஆர்எஸ்எஸ்-தான். தனது ஐந்து வயது முதல் 25 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ்-ஸில் வேலை செய்து அதன் ஃபாசிச, மனித விரோத செயல்பாடுகளால் வெறுப்புற்று அந்த அமைப்பை விட்டு விலகிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுதீஷ் மின்னியின் அனுபவப் பதிவுதான் இந்தப் புத்தகம்.


முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான கொலைவெறி வன்மம், வன்முறை ரீதியான உடற்பயிற்சிகள், பொய்யும், கட்டுக்கதைகளும் நிறைந்த புனையப்பட்ட அரசியல் வரலாறும் மத போதனைகளுமே ஷாகா வகுப்புகளிலும் ஆர்எஸ்எஸ் பயிற்சிகளிலும் சொல்லித் தரப்படுகின்றன. இன்று பாகிஸ்தான் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை வளர்ப்பதுதான் அதன் பிரதான அஜெண்டா.


வேத கணிதம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்களில் நுழைந்து மாணவர்கள் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ்-ஸில் கார்ப்பரேட்டுகள், முதலாளிகள், ஓய்வுபெற்ற இ.ஆ.ப. மற்றும் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் என பலரும் செயல்படுவதை ஆசிரியர் தெரிவிக்கிறார். புத்தர், அசோகர், காந்தி மண்ணில் வெறுப்பின் தத்துவம் இந்த அளவுக்கு வேர் பரப்பியுள்ளது.


ஆர்எஸ்எஸ்-ஸின் ஜனநாயக விரோத செயல்பாடுகள், மதவெறிக் கலவரங்கள், கொடூரமான கொலைகள், கொள்ளைகள், சாதியம், குஜராத் இனப்படுகொலையில் ஆர்எஸ்எஸ்-காரர்களின் மோசமான பாலியல் செயல்பாடுகள், பொருளாதார மோசடிகளைக் கண்டு மனம் வெதும்பி ஆர்எஸ்எஸ்-ஸை விட்டு விலகுகிறார் சுதீஷ். ஆர்எஸ்எஸ்-ஸின் பரம எதிரி எதுவோ அதுவே மனிதநேய இயக்கமாக இருக்க முடியும் என்று சிபிஐ (எம்)கட்சியில் சேருகிறார்.


ஆர்எஸ்எஸ்-ஸுக்கு பல துணை அமைப்புகள் உள்ளன. ஆர்எஸ்எஸ் ராமன் என்றால் ராமனின் கட்டளை களை நிறைவேற்றும் அனுமன்களாக ஆர்எஸ்எஸ்-ஸின் துணை அமைப்பு கள் உள்ளன. பாஜக ஆர்எஸ்எஸ்-ஸின் அரசியல் முகம். பிற துணை அமைப்புகள் கல்வி நிறுவனங்கள், ஆதிவாசி பகுதிகள், கோவில்கள் என சகலவற்றிலும் புகுந்து இந்துத்துவ அரசியலை பரப்பி வருகின்றன. அவர்களின் ஒரே நிகழ்ச்சி நிரல் மதவெறியைப் பரப்புவது மட்டுமே.


ஜனசங்கம் என்ற பெயரில் இயங்கி வந்தபோது 1952-ல் இந்திய நாடாளுமன்றத்தில் வெறும் மூன்றே இடங்களைப் பெற்றிருந்தனர். இன்றோ பாஜகவிற்கு 301 எம்பி-க்களை பெற முடிந்திருக்கிறது. வெறுப்பைப் பரப்புதல் அவ்வளவு எளிதாக ஆகியிருக்கிறது. எவ்வாறு ஆர்எஸ்எஸ்-ஸை எதிர் கொள்வது என்பது பற்றி இடதுசாரி களும் மைய அரசியல் செயல்பாட்டாளர் களும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தை இந்தப் புத்தகம் மனதில் ஆழமாக உறைக்கும்படி சொல்கிறது.
குறுகிய காலத்தில் கேரளத்தில் 17 பதிப்புகள் கண்டு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. நரக மாளிகை. மலையாளத்திலிருந்து தமிழில் கே சதாசிவம் மொழி பெயர்த்துள்ளார். அவர் நமது நன்றிக்குரியவர்.

என்.கதிரேசன் (9944451754)

Spread the love