September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புத்தகம் பேசுது இதழில் பேரா.ராஜுவின் நேர்காணல்

புத்தகம் பேசுது அக்டோபர் இதழின் அட்டையை அலங்கரிக்கிறார் பேராசிரியர் ராஜு. உள்ளே, எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் ராஜுவுடன் நடத்தும் விறுவிறுப்பான நேர்காணல் இடம் பெற்றுள்ளது. தன்னுடைய மாணவப் பருவம் தொடங்கி பணி ஓய்வுக்குப்பின் புதிய ஆசிரியன் இதழ் ஆசிரியராக இன்று ஆற்றும் பணி வரை தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ராஜு அவருக்கே உரித்தான எளிமையான முறையில் சொல்லிச் செல்கிறார். இயற்பியல் ஆசிரியராக, மூட்டா இயக்கத் தலைவராக, ராஜகுருவாக, அறிவியல் எழுத்தாளராக, இதழாசிரியராக பன்முகத் தன்மையோடு ராஜு பீடுநடை போடுவது உரையாடல் வழி சொல்லப்பட்டுள்ளது. திருவாரூரில் தொடங்கி திருச்சி, விருதுநகர், மதுரை, சென்னை என்று நகர்ந்து செல்லும் அவரின் வாழ்வு அர்த்தமுள்ள ஆக்கப் பணிகளால் நிரம்பியுள்ளது.


மூட்டா இயக்கம் கற்றுக்கொடுத்த இடதுசாரி அரசியல், தலைமைப் பண்பு, போராட்டக் களங்களில் பெற்ற அனுபவங்கள் என்று ராஜுவிடம் சொல்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. 1970-1980-90-களில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மூட்டா, ஜேஏசி, ஜாக்டீ, பேரமைப்புப் போராட்டங்கள், பள்ளத்தூர் மண்ணில் நடந்த எழுச்சி மிகு பெண்கள் கல்லூரிப் போராட்டம் பற்றியெல்லாம் பதிவு செய்துள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு தடுமாற்றங்கள் ஏதுமின்றி தனக்கான இடத்தைக் கண்டடைந்தவர். இறுதியில், சுயநிதி பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் அலுவலர்களின் அவலங்களுக்கு ஆசிரியர் சங்கங்கள் தீர்வு காணவேண்டும் என்ற வேண்டுகோளையும் வைக்கிறார். மக்கள் விரோத தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மக்களைத் திரட்டிட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார். இவ்வுரையாடல் இன்னும் சற்று விரிந்து ராஜுவின் வாழ்க்கைச் சரிதமாய் மலர்ந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். முழு நேர்காணலை இளைய தலைமுறையினர் புத்தகம் பேசுது இதழில் படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.


பேரா. பெ.விஜயகுமார்

Spread the love