September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புத்தகக் கூட்டை பிய்த்துப் பறக்கும் பட்டாம்பூச்சி


கலகல வகுப்பறை சிவா


ஊடரங்கு தளர்த்தப்பட்டு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டாவது நேரடியாகப் பாடங்களை நடத்திவிட வேண்டும் என்ற ஆசிரியர்களின்ஆர்வம், குழந்தைகளின் படிப்பு என்ன ஆகும் என்ற பெற்றோரின் கவலை சுமையாக அழுத்துகிறது. குழந்தைகளுக்கு தீய பழக்கங்கள் ஏற்பட்டு, செல்போன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, குழந்தைத் தொழிலாளர்களாக ஆகி, குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளது என்ற அக்கறையான குரல்கள் எழுகின்றன.


என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு எளிய விடையாக ஆன்லைன் கல்வியும் கல்வித் தொலைக்காட்சியுமே சொல்லப்படுகின்றன. சென்ற கல்வியாண்டில் அடிப்படைக்கல்வி, விளையாட்டு, கலைகள், கதை, வாசிப்பு என்று குழந்தைகளை நேரில் சந்தித்த வீதி வகுப்பறைகள் இப்போது புத்துணர்வோடு மலர்ந்துள்ளன. இணைய வழிக்கல்வியே தீர்வு என்று பேசும் சில ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள் இணைய இணைப்புடன் செல்பேசி அல்லது கையடக்கக் கணினியை அனைத்து மாணவர்களுக்கும் அரசு வழங்க வேண்டும். இணையத்தினால் தீமைகள் அதிகம் என்பதால் பாடங்களைப் பதிவேற்றித் தந்துவிடலாம் என்கின்றனர். குழந்தைகள் மீது அக்கறை கொண்டவர்கள் பகுதிநேரமாக குழந்தைகள் பள்ளிக்கு வரலாம்..வந்ததும் பாடங்களை நடத்தாமல் கதை, கலைகள், விளையாட்டு என்று உளவியல் ரீதியாக அவர்களை அணுகவேண்டும் என்கிறார்கள்.


என்ன செய்யலாம்? கல்வியில் மாற்றுகளைப் பயன்படுத்திப் பார்க்கும் காலத்தில் இருக்கிறோம். பாடப்புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்வதே நமது கல்விமுறை என்ற பழமைக்கு மாற்றுகளைத் தேடவேண்டியது அவசியம். சூழலுக்கு ஏற்ற வழிமுறைகளைச் சிந்திக்க வேண்டும். வகுப்பறைகளுக்குள் வருவதில்தான் மாணவர்களுக்குச் சிக்கல் என்றால் மாணவர்களைத் தேடி வகுப்பறைகள் செல்லலாம்.


இன்றைய வகுப்பறை குறித்து இப்படியெல்லாம் யோசிக்கலாம். குழந்தைகள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு இடத்திற்கு தனித்தனியாகக் குழந்தைகள் வருதல், அனைவரும் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவி, போதிய இடைவெளியுடன் ஓர் ஆசிரியரைச் சுற்றி பத்து குழந்தைகள் அமர்தல்.


பாடல், உடற்பயிற்சி, நாடகம், பேச்சு, வாசிப்பு, ஓவியம், எளிய அறிவியல் பரிசோதனைகள், கணிதப் புதிர்கள், கதை, கலைப்பொருள் செய்தல், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, உரையாடல், வாழ்வியல் திறன்கள் என்று ஒருமணி நேரம் கலகலப்பான வகுப்பறை. வீட்டில் செய்யவேண்டிய ஹோம்ஒர்க், வாசிக்க கதைப்புத்தகம் இரண்டையும் ஆசிரியரிடம் குழந்தைகள் வாங்கிக் கொண்டு, வந்தது போலவே தனித்தனியாக வீட்டிற்குத் திரும்புதல்.


மாற்றங்களின் தொடக்கமாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளைத் தொடங்கலாம். முறையாகப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக்கூட்டி பெற்றோருடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். பதினைந்து பேருக்கு மிகாத அளவு குழந்தைகள் போதிய இடைவெளியுடன் ஒரு மணி நேரம் இருக்கும்படியான சமுதாயக் கூடங்கள், கலையரங்குகள், திறந்தவெளி இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து, வீதி வகுப்பறை, சுட்டி வகுப்பறை, கலகல வகுப்பறை, தேடல் அரங்கம் என்று ஏதாவது ஒரு பெயரும் வைத்துக் கொள்ளலாம். பெற்றோர்களைக் கொண்ட மேற்பார்வைக்குழு ஒன்றையும் அமைக்கலாம்.


ஆசிரியர் கற்கும் காலம், இது ஆசிரியர் கற்க ஏற்ற காலம். கொரோனா தொற்று தடுப்பு முறைகள், உளவியல் பயிற்சி, குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டிய அனைத்துத் திறன்கள் பற்றிய பயிற்சிகள் ஆகியவற்றை வல்லுனர்கள் மூலம் பெறுதல், இதற்கு கல்வித் தொலைக்காட்சி பேருதவியாக இருக்கும். நடைமுறைச் சிக்கல்களை இணையவழிக் கூட்டங்கள் வழியே கலந்துரையாடிச் சீர் செய்யலாம்.
அரசுப்பள்ளிகளே மக்கள் பள்ளிகள் என்று அனைவரும் உணரவும் அரசுப்பள்ளிகள் மீது சமூகம் கூறும் பல்வேறு குறைகளை நிறைகளாக ஆக்கவும் இச்செயல்பாடு உதவும். முடியும், முடியாது என்று வாதம் செய்துகொண்டே இருக்காமல் அறிவியலின் கரம் பற்றி பாடப்புத்தகக் கூட்டை பிய்த்துப் பறக்கும் பட்டாம் பூச்சியாக கல்வியையும் குழந்தைகளையும் சிறகடிக்க வைக்க ஏற்ற காலம் இது


([email protected])

Spread the love