June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புதிய ஆசிரியன்

புதிய ஆசிரியன் இதழ் சில அரசு நூலகங்களில்…
கடந்த 2010-ம் ஆண்டில் புதிய ஆசிரியன் இதழ் தமிழ்நாடு மாவட்ட நூலகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டது. உடனே பல்வேறு மாவட்ட நூலகங்களை அணுகி பேசினோம். ஆனால் எந்த மாவட்ட நூலகமும் நமக்கு உரிய பதில்களைத் தரவில்லை. அப்படியே விட்டுவிட்டோம்.
அண்மையில் திமுக ஆட்சி வந்த பிறகு மீண்டும் முயற்சி செய்து பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. பொது நூலக இயக்குநரைச் சந்திப்பதென முடிவு செய்தோம்.
பிப்ரவரி 26 அன்று பள்ளிப் பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஜெ. கிருஷ்ணமூர்த்தி என்னுடன் வந்து இயக்குநர் திரு. இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் புதிய ஆசிரியன் இதழ் சார்பாக ஒரு விண்ணப்பம் கொடுத்தேன். கன்னிமாரா நூலகத்திற்கும் பரிசீலனைக் குழுவிற்கும் புதிய ஆசிரியன் இதழ்களை அனுப்புமாறு வழி காட்டினார்.
இதற்கிடையில் திண்டுக்கல் தோழர் ஆர். மனோகரன் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திரு. திண்டுக்கல் லியோனி அவர்களிடம் பேசி அவரிடமும் ஒரு விண்ணப்பம் அளிக்குமாறு கூறினார். மார்ச் 3 அன்று திரு. லியோனி அவர்களைச் சந்தித்து ஒரு விண்ணப்பம் கொடுத்தேன்.
தோழர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.மனோகரன் இருவருக்கும் நன்றி.
பரிசீலனைக் குழு புதிய ஆசிரியன் இதழை 2022-23 ஆண்டுக்கு தேர்ந்தெடுத்துள்ளது. பின்னர் பொது நூலக இயக்ககத்திலிருந்து பல விவரங்களைக் கேட்டார்கள். கொடுத்தோம். தற்போது 32 மாவட்ட நூலக அதிகாரிகளின் தொடர்பு முகவரிகளை அனுப்பியிருக்கிறார்கள்.
ஆனால் கீழ்க்கண்ட 7 நூலகங்களிலிருந்து மொத்தம் 137 பிரதிகளுக்கு மட்டுமே நமக்கு ஆணை கிடைத்திருக்கிறது : சென்னை-18.. செங்கல்பட்டு-13.. கோவை-27.. சேலம்-41.. குமரி-22.. திருவண்ணாமலை-8.. திருவாரூர்-8.
மற்ற மாவட்ட நூலக இயக்குநர்களிடம் தொடர்பு கொண்டால் நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதால் புதிய ஆசிரியன் இதழுக்கு ஆணை அனுப்பவில்லை என்கிறார்கள்.
இதற்கு தமிழக அரசுதான் தீர்வு காண வேண்டும். பரிசீலனைக் குழு தேர்ந்தெடுக்கும் அனைத்து இதழ்களுக்கும் குறைந்தபட்சம் இவ்வளவு பிரதிகளுக்கு ஆணை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையை அரசு கொணர்ந்தால் என்ன?
-கே.ராஜு, ஆசிரியர், புதிய ஆசிரியன்

Spread the love