September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

புதிய ஆசிரியனோடு கட்டுண்டிருக்கிறார்கள்!

‘சுருக்கம்தான் அறிவின் ஆன்மா’ என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. அந்த சுருக்கம்தான் புதிய ஆசிரியனின் வெற்றிக்குக் காரணமாய் விளங்குகிறது. அது ஒரு கையடக்க இதழ்தான். ஆனால் அதில்தான் எவ்வளவு சிறப்பம்சங்கள்! இதழின் வெற்றிக்குக் காரணம் ஆசிரியர் குழுவின் கடின உழைப்புதான். எவ்வளவு பெரிய எழுத்தாளுமைகளை இதழோடு கட்டிப் போட்டிருக்கிறார்கள்! இல்லை; எழுத்தாளர்களும், கல்வியாளர்களும், திறனாய்வாளர்களும் தாங்களாகவே விரும்பி புதிய ஆசிரியனோடு கட்டுண்டிருக்கிறார்கள் எனச் சொல்வதுதான் பொருத்தமானது.
சோழ நாகராஜனின் நுண்ணியமான விமர்சனப் பார்வையில் திரைப்படம் திரைப்பாடமாக மாறுகிறது. விவேக், எஸ்.பி.ஜனநாதன், ஜி..ராமனாதன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சத்யஜித்ரே ஆகியோர் குறித்த கட்டுரைகள் அனைத்தும் ஆய்வுக் கட்டுரைகளே! ராஜகுரு பதில்களில் எனக்கு எங்கள் மூட்டாவின் முன்னாள் தலைவர் கே.ராஜுவின் குரல் தெளிவாகக் கேட்கிறது. நாட்டு நடப்புகள் குறித்து என்னே பரந்துபட்ட அறிவு! ‘இந்தப் பாராளுமன்றக் கட்டடத்தை வந்த விலைக்கு விற்றுவிடலாம்’ என்கிற பதிலில் அவரது நகைச்சுவை உணர்வு வெளிப்படுகிறது தலையங்கம் ஒரு நிறைவான பகுதி. எடுத்துக் கொண்ட பொருளின் அத்தனை அம்சங்களையும் சுருக்கமாக தெளிவாக எடுத்துரைக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமா, வேளாண் சட்டங்களா, ஜனநாயக உரிமை மறுப்பா.. எதுவென்றாலும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறார் மதுக்கூர் இராமலிங்கம். எடப்பாடியார் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதற்குக் காரணம் ‘தனது பதவிப் பயிரைக் காத்துக் கொள்ள அவருக்குள்ள ஆர்வம்தான்’ எனும் அவர் கூற்று சுவைமிக்கது. உறவுகள் பற்றிய தொடர் கட்டுரையில் வேணுகோபாலன் திரைப்படங்கள், இலக்கியக் காட்சிகள் ஆகியவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகள் காட்டி அமர்க்களப்படுத்துகிறார். கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் அய்யாவின் பங்களிப்பு புதிய ஆசிரியனின் மிகப் பெரிய சொத்து. அவர்களின் சுயசரிதம் நமக்குக் கிட்டுமானால் அது அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு பாடநூலாகும்.
பிறருக்குப் போதிப்பதைக் கடைப்பிடிக்காதவர்கள் பட்டியலில் முதலிடத்தை மதத் தலைவர்களும், இரண்டாம் இடத்தை மருத்துவர்களும் வசப்படுத்துகிறார்கள் என்று டாக்டர் ராமானுஜம் சொல்லுமிடத்தில் அவரது குறிக்கோள் நகைச்சுவை மட்டுமல்ல என்பது புரிகிறது. நெல்லைச் சீமையின் எழுத்தாளர்கள் பேரா.பொன்னுராஜ், நாறும்பூநாதன் ஆகியோர் மற்றும் பலரின் பங்களிப்பு இதழுக்குப் பெருமை சேர்க்கிறது. சமூக நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாம் ஒவ்வொரு மாதமும் போட்டுக் கொள்ள வேண்டிய தடுப்பூசி புதிய ஆசிரியன் என்று கூறி நிறைவு செய்கிறேன்.

பேரா.கே.சேவியர் அமல்ராஜ் (MUTA),
செல்: 9443995439
( ஜூலை 15 அன்று நடந்த இணையவழிக் கூட்டத்தில் பேசியதன் சுருக்கம்)

Spread the love