September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பிறவிப்பயன்?

கி.ரமேஷ்
புத்தகங்கள் பற்றி நான் ஒன்றும் புதிதாகச் சொல்லி விடப் போவதில்லை. சிறு வயதிலிருந்து நான் பெற்ற அந்த இன்பத்தைப் பரப்பி விட வேண்டுமென்ற ஆவல் எனக்கு நிறையவே உண்டு. அந்த வகையில் நான் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பது, தூண்டுவது எல்லாம் நடந்தது. ஆனால் அறுதிப் பெரும்பாலான சமயங்களில், அந்தப் புத்தகங்கள் அவர்கள் வீட்டில் தூங்கப் போய்விடும். அது படிக்கப்படவும் செய்யாது, திரும்பிக் கிடைக்கவும் செய்யாது. ஓரிரு மிக அரிதான சமயங்களில் அவை படிக்கப்படாமலேயே, புதுக்கருக்கு வாடாமல் என்னிடம் திரும்பி வந்ததும் உண்டு. ஆனாலும் என் முயற்சியை நான் கைவிடாமலேயே இருந்தேன்.
அடுத்த கட்டமாக, பாரதி புத்தகாலயம் திருமணங்களை ஒட்டி புத்தகம் கொடுப்பதைத் தொடங்கியபோது, என் நண்பர்களிடம் அதைச் செய்யுமாறு ஊக்குவித்தேன். சில நண்பர்கள் அதை ஏற்றுச் செய்தார்கள். என் வீட்டில சில சமயம் அதை முயன்றபோது வாங்கிக் கட்டிக் கொண்டது அதிகம். எப்படியோ அம்மாவை கன்வின்ஸ் செய்து ஒருமுறை என் வீட்டு கொலுவுக்கு வந்தவர்களுக்குப் புத்தகம் கொடுக்க வைத்தேன். அதையும் அவர்கள் கொடுக்க விரும்பிய பிளாஸ்டிக்கைக் கொடுக்க விடாமல் தடுத்ததால் கடுப்புடன்தான் செய்தார்கள்.
அடுத்ததாக, இன்று திருமணங்களின்போது மணமக்களுக்குப் புத்தகம் பரிசாகக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். பெற்றோருக்கு மிகவும் தேவை என்று கருதினால்தான் பணம் கொடுப்பது என்று முடிவெடுத்துக் கொண்டேன். சிறிது காலம் பிறரின் கிண்டலுக்கு ஆளானேன் என்பது உண்மைதான். ஆனால் சில பெற்றோர்கள் என்னைத் தேடிக் கண்டுபிடித்து தம் மகன்/மகள் சார்பாக நன்றி சொல்லத் தொடங்கியது எனக்கு ஊக்கமளித்தது. வெளிநாடு செல்லும் தமது மகன்/மகள் வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றும், நான் கொடுத்த புத்தகத்தை மட்டும் எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் கூறியபோது, என் மகிழ்ச்சியை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
இதற்கிடையே கும்பகோணம் பெண்கள் கல்லூரியில் மொழிப்பாட முதுநிலை மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு குறித்து உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. மொழிப்பாடத்தில் நிபுணர்களாக, முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுடன் இணைந்து உரையாற்ற, வெறும் பி.ஏ.வை ததிங்கினதோம் போட்டு முடித்த நான் எவ்வளவு பேறு பெற்றிருக்க வேண்டும்.. இந்த வாய்ப்பை அளித்த பேராசிரியர்களுக்கு என் நன்றி.
இப்படியே சென்ற போக்கில், தோழர் எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களின் பரிந்துரையில், லயோலா கல்லூரி மாணவர்களிடையே ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற தலைப்பில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. இது ஒரு படி மேலாகச் செல்ல எனக்கு வாய்ப்பளித்தது. மீண்டும் அதே எஸ்.வி.வி. பரிந்துரையில், அகரம் ஃபவுண்டேஷன் மாணவர்களுடன் புத்தக அறிமுகங்கள் செய்யும் வாய்ப்பும் வந்து சேர்ந்தது. ஆகா. என்ன ஒரு அருமையான வாய்ப்பு! கடந்த இரண்டு வாரங்களாக இதையும் செய்து வருகிறேன். அந்த மாணவர்களிடம் என் உரையாடல் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கியிருக்கும் என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. விடை இன்று காலை வந்து சேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு:
“என்னுடைய பெயர் ………. நான் பி.எஸ்சி. உயிரி தொழில்நுட்பவியல் படிக்கிறேன். புத்தக அறிமுக வகுப்பிற்குப் பிறகு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் வந்தது. எங்கள் வீட்டில் இருக்கும் புத்தகங்களை நான் சோதனை செய்து பார்த்தேன். வீட்டில் இவ்வளவு புத்தகங்கள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 14 புத்தகங்கள் கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் ஆர்வமுடன் படிக்க விரும்பிய மகாத்மா காந்தியின் சுய சரிதையான ‘சத்திய சோதனை’ புத்தகமும் எனக்குக் கிடைத்துள்ளது. எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு, புத்தகங்களின் இணைப்பை அனுப்பியிருக்கிறேன். நன்றி.”
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
(தொடர்புக்கு : 94446 76766)

Spread the love