May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பிரியதர்ஷினியைக் கொண்டாடுவோம் !

பிரியதர்ஷினி வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ( திருவாரூர் மாவட்டம்) 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா விடுமுறை முடிந்து அனைத்துப் பிள்ளைகளும் தோழிகளுடன் நேரத்தை பகிர்ந்துகொள்ளப் போகும் உற்சாகத்துடன் பள்ளி செல்லத் தொடங்கினார்கள். இவர் மட்டும் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்கு செல்வதை கவனிக்க தொடங்கினார். தன்னுடைய தோழி சுவேதாவுடன் அதுபற்றி கலந்துரையாடுகிறார்.அண்ணனிடமும், ஆசிரியரிடமும் தகவலைச் சொல்லி என்ன செய்வது என்று கேட்கிறார்.
மாணவர்களிடம் பேசு என்று அவர்கள் சொன்னதன் அடிப்படையில் முதலில் அந்த மாணவர்கள் பயிலும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் பேசுகிறார்கள்.
ஆசிரியர்கள் தாங்கள் அழைத்தும் வராத நிலையை தெரிவிக்கின்றனர். பின்பு மற்ற மாணவர்களிடம் குழந்தைத் தொழிலாளர் சட்டம் பற்றி எடுத்துரைக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர், அந்தப் பிள்ளைகள், அவர்கள் வேலை செய்யும் இடம் என்று மாறிமாறிச் சென்று கல்வியே ஆயுதம் என்பதையும், குழந்தைத் தொழிலாளர் சட்டம் பற்றியும் எடுத்துக் கூறி மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.
நாலு வரிகளில் இதை எளிதாக எழுதிவிடலாம். ஆனால் இந்த பிள்ளைகள் மேற்கொண்ட தொடர்முயற்சியை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.
ஆண் பிள்ளைகளின் கேலி, கிண்டல், பெரியவர்களின் சலிப்பான சொற்களைத் தாண்டி மீண்டும் பதினேழு 17 பிள்ளைகளையும் பள்ளிக்குள் அனுப்பியுள்ளார்கள்.
அதிலும் பிரியதர்ஷினியின் சலிப்பில்லா உழைப்பின் விளைவு இது. இன்னும் அவர்கள் தொடர்ந்து பள்ளியிலிருந்து விடுபடாமல் இருக்கிறாரா என்பதைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.
இவருடன் பள்ளியின் நூலகப் பொறுப்பை மிகவும் ஆர்வமுடன், அக்கறையுடன் கவனித்து வரும் தேவதர்ஷினியுடன் சேர்ந்து ‘சமக்ர சிட்சா’ மாநில திட்ட இயக்குனர் திரு.சுதன் இ.ஆ.ப. அவர்களையும், இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலரும், நூலகத்துறை இயக்குனருமான திரு.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்களையும் சந்தித்தோம்.
இருவரும் பிள்ளைகளிடம் ஏறத்தாழ அரைமணி நேரம் கேள்விகள் கேட்டு உரையாடல் நிகழ்த்தினர். மாநில திட்ட இயக்குனர் அவர்கள் பிரியதர்ஷினியை வியந்து, மனதார வாழ்த்தினார்.
இது போன்ற சமூகப் பொறுப்புள்ள நீங்கள் கல்வித்துறையில் உயர் பொறுப்புகளைப் பெற வேண்டும் என்றும், இவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்றும் ஊக்கப்படுத்தினார். இளம்பகவத் அவர்களும் உரையாடல் வழி வெளிவந்த தெளிவான அவர்களின் சிந்தனையை வெகுவாகப் பாராட்டினார். தேவதர்ஷினி நூலகப் பொறுப்பை எப்படியெல்லாம் கவனித்து வருகிறார் என்று கேட்டறிந்த இயக்குனர் இதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு அனைத்துப் பள்ளிகளிலும் மாணவரையும் நூலகப் பொறுப்பில் ஒருவராகச் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளார்.
கல்வித்துறையில் பல பெருமைமிகு சீர்திருத்தங்களை கொண்டு வர ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் இருவரின் அன்பான வாழ்த்துக்களும் பிள்ளைகளின் செயல்பாடுகளுக்கான வினையூக்கி. இருவருக்கும் ‘இருளும், ஒளியும்’ என்ற தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களின் புத்தகத்தை பரிசளித்து விடை பெற்று வந்தனர்.
சந்திப்புக்கு நேரம் பெற்றுத்தந்த பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, ஜெயராமன் அவர்களுக்கு அன்பும், நன்றியும்.
நேற்று மாலை முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பிரியதர்ஷினிக்கு பொன்னாடை போர்த்தி புத்தகம் பரிசளித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஒவ்வொரு சந்திப்பும் பிள்ளைகளுக்கு தொடர்ந்து செயல்படும் வலிமையை தந்து கொண்டே இருக்கிறது.
இது போன்ற சமூக அக்கறை உள்ள பிள்ளைகளை உருவாக்குவதை விட வேறு என்ன மகிழ்வை ஆசிரியராக அடைந்து விடப்போகிறோம்!
முகநூலில் புவனா கோபாலன்
பதிவை நமக்கு அனுப்பியவர் .. கி. ரமேஷ் (94446 76766)

Spread the love