September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பிரதமரின் சுதந்திர தின உரை… சொன்னதும்-சொல்லாமல் விட்டதும்!


மதுக்கூர் இராமலிங்கம்


இந்தியாவின் முதல் சுதந்திரத் திருநாள் அன்று கொடியேற்றி உரையாற்றிய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியா விழித்துக் கொள்கிறது’ என்று கூறிய வார்த்தைகள் உலகப் புகழ்பெற்றவை. நாட்டின் 75-வது சுதந்திரத் திருநாள் அன்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை காலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. விடுதலைத் திருநாள் அன்று விழித்துக் கொண்ட மக்கள் நள்ளிரவில் விழித்ததால் இன்னமும் தூக்கக் கலக்கத்திலேயே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் அவர் இந்தாண்டுக்கான சுதந்திர தின உரையை வழங்கியுள்ளார்.


சுதந்திர தினத்தின் நூறாவது ஆண்டை நிறைவு செய்வதற்கு முன் இந்தியாவை ஆற்றல் மிக்க சுதந்திர நாடாக மாற்ற உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார். ஆற்றல் மிக்க சுதந்திர நாடாக இந்தியா மாறுவதற்கு இன்னமும் 25 ஆண்டுகள் தேவை என்பதுதான் இதன் பொருள். அப்போது கொடியேற்ற வாய்ப்பு கிடைக்கும் பிரதமர்தான் அதுகுறித்து கவலைப்பட வேண்டும்.. நமக்கென்ன என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.


இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கல் பணியை நூறு சதவீதமாக்குவதற்கான பணி நடந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் சேர்த்து உலகின் மிகப் பெரிய பொதுத்துறைகளில் ஒன்றான ரயில்வேயை நூறு சதவீதம் தனியார்மயமாக்குவதற்கான பணியை மின்சார வேகத்தைவிட முனைப்பாக செய்து வருவதையும் அவர் சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்.
தேவையற்ற பல சட்டங்கள் இதுவரை நீக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

தொழிலாளர் நலனை பெருமுதலாளிகளிடம் விடும் சட்டங்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் சட்டங்கள், மோட்டார் தொழிலை அப்படியே கார்ப்பரேட்டுகளிடம் கொடுப்பதற்கான சட்டங்கள், சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் சட்டங்கள், வேளாண் துறையை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டங்கள் என நாடாளுமன்றத்தில் போதிய விவாதம் இல்லாமலேயே பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.. வேறு பல மக்கள்நலச் சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதே சுதந்திர நாளில் கொடியேற்றி உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நாடாளுமன்றத்தில் போதிய விவாதங்கள் இல்லாமல் உருவாக்கப்படும் சட்டங்களில் பல்வேறு இடைவெளிகள் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி நாடாளுமன்றத்தில் தர்க்கப்பூர்வமாக ஆற்றிய உரையை அவர் நினைவு கூர்ந்துள்ளார். பிரதமருக்கு தேவையில்லாத சட்டங்கள் என்று தோன்றிய அனைத்தும் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தேவையாக இருந்த சட்டங்கள் என்பதை பிரதமர் கூற மாட்டார்!


தேவையற்ற சட்டங்களை நீக்கி வருகிறோம் என்று பிரதமர் கூறிவரும் நிலையில் பிரிட்டிஷ் காலத்திய அடக்குமுறை, ஆள்தூக்கி சட்டங்கள் இன்னமும் தொடர்வது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அன்றைக்கு விடுதலைக்குப் போராடிய தேச பக்தர்களை நசுக்குவதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் இன்றைக்கு விடுதலை பெற்ற நாட்டில் மனித உரிமை போராளிகளை, சமூக ஆர்வலர்களை நசுக்கப் பயன்படுவது பேரவலமானது. இந்த தேவையற்ற சட்டங்களை இன்னமும் கூட தூக்கிச் சுமப்பது ஏன் என்ற கேள்விக்கு அவர் பதில் கூறாமல் கடந்து செல்லவே முயற்சிப்பார்.


நூறு லட்சம் கோடி தேசிய உள்கட்டமைப்பு மாஸ்டர் பிளானை உருவாக்கப் போவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். இந்த நூறு லட்சம் கோடி என்பது பல்வேறு திட்டங்களுக்காக என்று சொல்லி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் பிரதமரால் உச்சரிக்கப்படுகிறது. ஆனால் அந்தத் தொகை அறிவிக்கப்பட்ட எதற்கும் செலவிடப்படுவதே இல்லை. கண்ணுக்குத் தெரியாத இந்த நூறு லட்சம் கோடி ரூபாய் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. மக்களின் மறதி மேல் அவருக்கு அந்தளவு நம்பிக்கை இருக்கிறது, சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான அரசியல் உறுதி தங்களுக்கு இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இந்த இடத்தில் சீர்திருத்தம் என்று பிரதமர் கூறுவது சமூகத்தில் உள்ள பத்தாம்பசலித்தனங்களை களைவதற்கானது அல்ல, மாறாக அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பது.. சமூகநலத் திட்டங்களிலிருந்து அரசு விலகிக் கொள்வது போன்றவைதான். இதன் பின்னால் தேச நலன் இல்லை.. கார்ப்பரேட் நலன்தான் உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள். இதில் சந்தேகம் ஏதும் வேண்டாம் என்பதற்காக இந்தியாவை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யும் நோக்கில் ‘தேசிய பணமாக்கல் திட்டம்’ என்ற புதிய திட்டம் ஒன்றினைக் கொணர்ந்து எவற்றையெல்லாம் தனியாரிடம் விற்கப் போகிறோம் என்பதற்கு ஒரு நீண்ட பட்டியலையே மோடி அரசு கொடுத்துவிட்டது.


ஜம்மு-காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டின் விடுதலையைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பதற்காகக் கொணரப்பட்ட அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலமே சிதறடிக்கப்பட்டுள்ளது. அங்கே நிலவுவது மயான அமைதியே. அந்த மாநிலத்திற்கு புத்துணர்வு கொடுத்து சீரமைப்பதற்கான எந்த வாக்குறுதியையும் வழங்க பிரதமர் தயாராகயில்லை.


ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை நாளை நாடு கொண்டாடும் நிலையில் ஆகஸ்ட் 14-ம் தேதியை பிரிவினைக் கொடுமைகளை நினைவு கூரும் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார். பிரிவினைக் கொடுமைகளின்போது நடந்த கலவரங்களின் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அந்த கொடுமைகளின் ஒரு பகுதியாகவே அண்ணல் காந்தி இந்துத்துவா வெறியனான கோட்சேயின் குண்டுகளுக்கு பலியானார். ராமர் கோவில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட தினம்தான் உண்மையான சுதந்திரம் தினம் என்று பிரதமர் அந்த சமயத்தில் கூறியதை உண்மையான தேசபக்தர்கள் மறந்துவிட முடியாது.
தாய்மொழிவழிக் கல்வியின் பெருமையையும் பிரதமர் உருக உருகப் பேசியுள்ளார். ஆனால் இவர் கொண்டுவந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் என்று உதட்டளவில் சொன்னால் போதுமா?


மொத்தத்தில் சிங்காரத் தலைப்பாய் கட்டுவதிலும் ஆடை அலங்காரத்திலும் செலுத்திய அக்கறையில் ஒரு பகுதியையாவது தன்னுடைய உரையில் உண்மைகள் இடம் பெற வேண்டும் என்பதில் நாட்டின் பிரதமர் கவனம் செலுத்தியிருந்தால் நாமும் பாராட்டியிருக்கலாம்.


(94422 02726 – [email protected])

Spread the love