September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பா.ஜ.க. வெல்ல முடியாத கட்சி அல்ல!

மதுக்கூர் இராமலிங்கம்
உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
இது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என பாஜகவினர் கூறத் துவங்கினர். ஆனால் அதற்குப் பின்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. மேற்குவங்கம், பீகார், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக அல்லாத கட்சிகளே வெற்றிபெற்றுள்ளன.
பீகாரில் ஒரு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் பாலிகங்கே தொகுதியில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாய்ரா ஷா ஹலீம் 30,971 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். பாஜக 13,174 வாக்குகள் மட்டுமே பெறமுடிந்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இனி திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையில்தான் போட்டி என்று பாஜகவினர் கூறிவந்த நிலையில், இந்த முடிவு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது.
மேற்கு வங்கம் அசன்சால் மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றுள்ளார். பாஜக வெல்ல முடியாத கட்சி அல்ல. மதச்சார்பற்ற கட்சிகள் முயன்றால் பாஜகவை பின்னுக்குத்தள்ள முடியும் என்பதையே இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
ஆளுநர் அளித்த தேநீர் விருந்து புறக்கணிப்பு
தமிழகத்தில் ஆளுநர் ரவியின் அடாவடி அதிகரித்து வரும் பின்னணியில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதன் முதலில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து திமுகவின் தோழமைக் கட்சிகள் அடுத்தடுத்து புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்ட நிலையில் திமுக அரசும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.
அதிமுக, பாஜக உள்ளிட்ட சில கட்சிகளே மிக்சர், டீ சாப்பிட்டு ஆளுநர் விருந்தை சிறப்பித்தனர். பாஜக தலைவர் அண்ணாமலை டீச் செலவு மிச்சம் என கூற, விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ், எங்களுக்கு டீசல் செலவு மிச்சம் என பதிலடி கொடுத்தார். மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் கொடுக்கும் விருந்துச் செலவும் மாநில அரசின் தலையில்தான் விடியும் என்று ஒரு போடுபோட வார்த்தை விருந்து களைகட்டியது.
இந்நிலையில், தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்பதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டதாக அலறியது பாஜக. ஆளுநரின் வாகனம் தாக்கப்படவில்லை என்று முதல்வரும் காவல்துறை தலைவரும் விளக்கமளித்த பிறகும் அவர்கள் ஓயவில்லை.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் ஏப்ரல் 25, 26 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் கலந்து கொண்டார். ஆனால் மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை. அதைப் பற்றி ஆளுநர் அலட்டிக் கொள்ளவில்லை.
ஏப்ரல் 25 அன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள 13 மாநிலப் பல்கலைக்கழகங்களில் இனி துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை ஆளுநரிடம் இருந்த இந்த அதிகாரம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. வரம்பு மீறி ஆடினால் இப்படித்தான் நடக்கும் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்வது எப்போது?
அலுவல் மொழி குறித்த சர்ச்சை
மீண்டும் இந்தியாவின் அலுவல் மொழி குறித்த சர்ச்சை முன்னுக்கு வந்துள்ளது. இனி இந்திதான் அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்பு மொழி என்று பற்றவைத்தார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அனைத்து மாநிலங்களும் அந்நிய மொழியான ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்திய மொழியான இந்தியையே பயன்படுத்த வேண்டும் என்று அவர் அறிவித்தார். இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமும் தொடர்பு மொழியாக இருக்கும் என்று முன்னாள் பிரதமர் நேரு அளித்த உறுதிமொழி என்னாயிற்று எனக்கேட்டால் அதை நேருவிடம்தான் கேட்க வேண்டும் என்பதுபோல பாஜகவினர் இந்தித் திணிப்பில் பிடிவாதம் காட்டுகின்றனர்.
இந்தி மூலம்தான் இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த முடியும் என்றும் அமித் ஷா கூறுகிறார். ஒற்றை மொழித் திணிப்பின் மூலம் ஒருமைப்பாடு வலுப்படாது… மாறாக அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஒன்றிய ஆட்சி மொழிகள் ஆக்குவதன் மூலம்தான் ஒருமைப்பாடு வலிமை பெறும். இது ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல.. நன்கு தெரியும். ஆனால் அவர்களுடைய நோக்கம் ஒன்றுபடுத்துவது அல்ல. மொழியால், மதத்தால், இனத்தால், பண்பாட்டால் மக்களை பிளவுபடுத்துவதே ஆகும். பிரிந்த ஆடுகளைத்தான் வேட்டையாட முடியும் என்ற ஓநாயின் சித்தாந்தம் இது.
மக்கள் மீது மற்றுமொரு துல்லியத் தாக்குதல்
வெல்லம், அப்பளம் உட்பட 143 அத்தியாவசியப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி மேலும் கடுமையாக உயரப் போகிறது.
இலங்கையில் உள்நாட்டு நெருக்கடி
அண்டை நாடான இலங்கையில் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி முற்றியுள்ளது. பிரதமர், ஜனாதிபதி, நிதியமைச்சர் என அனைத்து அதிகாரமும் ராஜபக்சே சகோதரர்களிடமே உள்ளது. இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீதியில் இறங்கி ராஜபக்சேக்கள் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். சிங்களம், தமிழ் இரண்டு மொழிகளிலும் எதிர்ப்பு முழக்கம் எழுகிறது. தமிழர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி தொடர்ந்து இலங்கையில் ஆட்சியைப் பிடித்து வந்தவர்கள் இப்போது பொருளாதார நெருக்கடியில் கதிகலங்கி நிற்கிறார்கள். அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் விண்ணைத் தொடுகிறது. வாழவழியின்றி இலங்கை மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இந்தியாவுக்குள் தப்பி ஓடி வருகிறார்கள். அப்படி ஓடிவரும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு.
மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சிக்கு வருவது, அதன்பிறகு பன்னாட்டு முதலாளிகளுக்கு நடைபாவாடை விரித்து நன்றி விசுவாசம் காட்டுவது என்று செயல்படும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இலங்கை ஒரு எச்சரிக்கை
(94422 02726 – [email protected])

Spread the love