September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பாராசிட்டமாலும் பாசிப்பருப்பும்

டாக்டர் ஜி. ராமானுஜம்
மகாராசன் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சி. கவுண்டமணியும் செந்திலும் கறி வாங்க கமல்ஹாஸனின் கடைக்குச் செல்வார்கள். அவர்கள் ஒரே கோழி ஒரு கிலோவாக வேண்டும் என்பார்கள். அவர்களிடம் கமல் இரண்டு கோழிகளைக் கொடுத்து “இதுங்க ரெண்டும் ஒரே கோழிதான். இது அந்தக் கோழி சிறுசா இருக்கச் சொல்ல உரிச்சது. அது அந்தக் கோழி பெரிசா இருக்கச் சொல்ல உரிச்சது!!” என ஏமாற்றுவார். கமல் சும்மாப் பேசினாலே குழப்பும். குழப்ப வேண்டும் எனப் பேசினால்.. கேட்கணுமா? கவுண்டமணியே ஆடிப் போய்விடுவார்.
அதுபோல் ஊரடங்கு காலத்திலும் சில கூத்துக்கள் நடந்தன. சில கடைகள் சட்டத்தை மீறி நைசாகத் திறந்து வைத்திருந்தன. அவர்களிடம் கேட்டால் கமல் போல் “பாதி ஷட்டர் திறந்திருந்தா தளர்வுகள் அற்ற ஊரடங்கு; முழு ஷட்டரும் திறந்திருந்தா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு” என்றனர்.
சில வருடங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவர் ஒரு மளிகை ப்ளஸ் ஸ்டேஷனரீஸ் கடை தொடங்கினார். ஆனால் எஸ்கிமோக்களிடம் ஐஸ் விற்பது போல் விற்பனை மந்தமாக இருந்தது. அவருக்கு தெரிந்த ஒருவர் வந்து பார்த்துவிட்டு, கடை மேற்கு பார்த்து இருக்கிறது. வாஸ்து படி வாசலை வடக்கு பார்த்து வையுங்கள் என்று சொன்னார். மேற்கிலாவது மெயின்ரோடைப் பார்த்தபடி கடை இருந்தது. வெயிலுக்கு ஒதுங்கியவர்களாவது ( நம் ஊரில் மழைக்கு ஒதுங்குவது குறைவுதானே?) ஏதாவது வாங்கினர். அதை அடைத்துவிட்டு வடக்குப்பக்கம் ஒரு சின்ன தெருவில் வாசலை வைத்தார். ஐசியுவில் இருந்த விற்பனை மார்சுவரிக்கு மாற்றலாகியது. ஊரடங்கு சமயம் சில கடைகள் மெயின்கதவை அடைத்துவிட்டு சைட் வழியாக சில கடைகள் திறந்து விற்பனை செய்வதைப் பார்க்கும்போது அது நினைவுக்கு வந்தது.
சில இடங்களில் கடைகள் பூட்டியிருந்தாலும் கடைமுன் ஆட்கள் கூட்டம் இருந்தது. காரணம், சொர்க்க வாசல் போல் பக்கவாசல்கள் திறந்து விற்பனை நடந்தது.
லாக்டவுன்போது எல்லாக் கடைகளும் அடைத்திருந்தாலும் மெடிக்கல் ஷாப்புகள், ஆவின் பாலகங்கள் மட்டுமே திறந்திருந்தன. பின்னர் தள்ளுவண்டியில் பொருட்கள் வரத் தொடங்கின.
ஒருகிலோ துவரம்பருப்பு வாங்க வேண்டும் என்றால் அதை ஆவின் பாலகத்தில் வாங்க வேண்டுமா, மெடிக்கல் ஷாப்பிலா அல்லது தள்ளு வண்டியிலா எனக் குழப்பம் வந்தது.
மெடிக்கல் ஷாப்புகள் மட்டும் இந்த ஊரடங்கு காலத்தில் திறக்கலாம் என்பதால் பாசிப்பருப்பிலிருந்து பானிபூரிவரை மெடிக்கல் ஷாப்பில் விற்கத் தொடங்கினார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் ஜவுளி, நகை எல்லாம் இனி மெடிக்கல் ஷாப்பில் விற்பார்கள் போலத் தோன்றியது.
ஒரு முறை பாராசிட்டமால் மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் சென்றேன். என் முன் நின்று கொண்டு இருந்தவர் “தட்டை ரெண்டு பாக்கெட்.. முறுக்கு ரெண்டு பாக்கெட் எடுங்க!” என்றார்.
நான் மாஸ்கையும் மீறிச் சிரித்தபடி அவரிடம் “சார், இது மெடிக்கல் ஷாப்” என்றேன். அவர் என்னை முறைப்பதற்குள் மெடிக்கல் ஷாப் பெண் அவரிடம் தட்டை, முறுக்கெல்லாம் எடுத்துக் கொடுத்தார். எனக்குத் தலைசுற்றியது. சுற்றும் முற்றும் திரும்பி, கடையின் போர்டை மீண்டும் ஒரு தடவை பார்த்து, மெடிக்கல் ஷாப்தானா என உறுதி செய்து கொண்டேன். மெடிக்கல்தான்.
அதற்குள் என்னிடம் அப்பெண் “சார் என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
திக்கித் திணறி “பாராசிட்டமால் ஒரு ஸ்ட்ரிப்” என்றேன்.
” பாராசிட்டமால் எல்லாம் மெடிக்கலில் கொடுக்கக் கூடாது என ரூல்ஸ் சார்!” என்றார் அப்பெண்.
போகிற போக்கில் மெடிக்கல் ஷாப்பில் “ரெண்டு டீ. ஒண்ணு மீடியம் ஸ்ட்ராங்!! ஒண்ணு வித்தவுட்” என்றபடியே பஜ்ஜியைப் பற்களால் இழுத்தபடி தினத்தந்தியைப் புரட்டக்கூடும்.
வாழ்க்கையிலேயே ஒரு பொருளை நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் திடீரென அதற்குத் தடை, அதை விற்கக் கூடாது என அறிவிப்பு வந்தால் உடனே அதைத்தான் அனைவரும் வாங்க ஓடுவார்கள். தள்ளுவண்டியில் என்ன வந்தாலும் மக்கள் வாங்கினார்கள். அரசாங்கம் திடீரென சுரைக்காய் விற்கும் கடைகளுக்குத் தடை எனச் சொன்னால் அவசர அவசரமாக ப்ளாக்கிலாவது சுரைக்காய் வாங்கக் குவிவார்கள்.
அப்போது எனக்குத் தோன்றியது. புத்தகக் கண்காட்சி எல்லாம் வைத்து புத்தகங்களை விற்க பிரம்மப் பிரயத்தனம் செய்வதற்குப் பதிலாகப் புத்தகக் கடைகளைத் தடைசெய்து பின் ரகசியமாகத் தள்ளுவண்டிகளில் விற்றால் மக்கள் ஓரிரு புத்தகங்கள் வாங்கக்கூடும்.
அடுத்த மாதமே புதிய ஆசிரியன் இதழுக்கு மட்டுமாவது தடை பெற ஏற்பாடு செய்வோம்.
(9443321004 – [email protected] )

Spread the love