January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பள்ளிக்கூடக் கட்டிடங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா?

திருநெல்வேலி நகரின் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேனிலைப்பள்ளியில் இந்த ஆண்டு டிசம்பர் 17 அன்று சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலியாகியுள்ள செய்தி மனதைப் பதறச் செய்கிறது. மேலும் சில மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2004இல் ஜுலை 16 அன்று கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த விபத்தில் 94 குழந்தைகள் தீக்கிரையாகினர். நெருப்பைக் குற்றம் சொன்னோம். ஓலைக் கூரைதான் காரணம் என்றோம். குழந்தைகளின் பாதுகாப்பைக் கவனிக்கத் தவறிய பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் இவர்கள் யாரும் பொறுப்பாகாமல் தப்பிச் சென்றார்கள். இக்கோர விபத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன? குழந்தைகளின் பாதுகாப்புக்கு பள்ளிக்கூடம் பொறுப்பாக வேண்டாமா? பள்ளிக்கூடம் குழந்தைகளுக்கு இன்னொரு வீடல்லவா? ஆசிரியர்கள் பள்ளியில் இருக்கும் பெற்றோர்கள் இல்லையா? பள்ளிச் சூழல் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா? விபத்து நடந்தவுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிப் பேசுகிறோம். காலப்போக்கில் அதை மறந்துவிட்டு அடுத்த பிரச்சினைக்குப் போய்விடுகிறோம்.

விபத்து நடந்துள்ள பள்ளியின் கழிப்பறைச் சுவர் அஸ்திவாரமின்றி கட்டப்பட்டுள்ளதை விபத்து நடந்தபின் சொல்லி என்ன பயன்? வளாகத்தில் இருக்கும் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்த கவலை பள்ளி நிர்வாகத்திற்கு இருந்திருக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் கண்காணித்திருக்க வேண்டும். தமிழக அரசு விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், காயமடைந்த மாணவர்களின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. ஆனால் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத பள்ளிக் கட்டிடங்களைக் கொண்டுள்ள நிர்வாகங்களின் மீது கடுமையான நடவடிக்கை தேவை. அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புக்கு உரிய நிதி ஒதுக்கி புதிய வலுவான கட்டிடங்களைக் கட்டுவது அவசியம். கல்விக்கு ஆகும் செலவு வருங்காலத்திற்கான முதலீடு என்ற பார்வையுடன் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்க வேண்டும். இழந்தது போதும். இனியும் விபத்து நிகழாமல் இருக்க பாதுகாப்பை உறுதி செய்வோம். இதுபோன்ற விபத்துகளின்போது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்காமல் மாணவர்களுக்கு உதவிட ஆசிரிய, அலுவலர்களுக்குப் போதிய பயிற்சியும் அளித்திட வேண்டும். பொறுப்பின்றி இருக்கும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்திடவும் முன்வர வேண்டும்.

-ஆசிரியர் குழு

Spread the love