September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பள்ளிகள் பற்றிய கள ஆய்வு

உமா

2021 – 2022 ஆம் கல்வியாண்டு துவங்கி விட்டது. தமிழகத்தின் கல்விச் சூழலில் கொரோனா அச்சத்தால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பது குறித்து நமக்கான கவலைகளைச் சொல்லில் அடக்கிவிட முடியாது. குறிப்பாக அரசுப் பள்ளிக் குழந்தைகளின் நிலைமை மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. குழந்தைகளைக் கற்றலுக்குள் கொண்டு வர ஒரு குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்கள் அன்றாடம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு தங்கள் சொந்த முயற்சியால் செயல்பட்டும் வருகின்றனர். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, அரசு வழி காட்டும் ஒரே ஆணையைத்தான் தமிழகம் முழுவதிலிருக்கும் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் காலம் காலமாக இருந்து வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக கல்வித் தொலைக்காட்சி வழியே கற்பித்தல் நடைபெறுவதாகக் கூறப்பட்டாலும் மாணவர்களின் கற்றலை உறுதி செய்ய எந்த அளவுகோலும் இல்லை. தொலைக்காட்சிவழிக் கல்வி, இணையவழிக் கல்வி உள்ளிட்ட எந்த வாய்ப்புகளுமற்ற குழந்தைகளும் நிறைந்துள்ளனர். பாடப்புத்தகங்களை வாசிக்கவும், புத்தக அறிவுக்காகவும் மட்டுமே குழந்தைகள் பள்ளிக்குள் வருவதில்லை. சகவயது நண்பர்களுடன் மனம் திறந்து பேச, மகிழ, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, நேசிக்க, சமூகத்தைக் கற்றுக்கொள்ள எனப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. வீடு என்பது குழந்தைகளுக்கு சிறையாகிவிட்டது. ஆம், அங்கு குழந்தைகளுடன் உரையாட பெற்றோர்கள் தயாராக இல்லை அல்லது அவர்களுக்கு நேரம் இல்லை. அன்றாடம் சோற்றுப் பிரச்சனைகளுக்கு வழி தேடும் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் கல்விப் பிரச்சனைகளைக் கேட்பதற்கு நேரமில்லை. கொரோனா முடக்கக் காலத்தில் கற்றலுக்கு வாய்ப்பே இல்லாத மலைப்பகுதிக் குழந்தைகள், வறுமையில் உழலும் குழந்தைகள், தொலைக்காட்சி மற்றும் இணைய வசதியற்ற குழந்தைகள் என்று வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். திருமணம் செய்து கொடுக்கப்பட்டுவிட்ட பெண் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்பட்ட குழந்தைகள், பாலியல் தொல்லைகளுக்கு உட்படும் குழந்தைகள் என ஏராளமான பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆட்பட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் கற்றல் சூழலை ஓரளவேனும் கைக்கொண்டிருக்கும் குழந்தைகள் சிலரும் ஒருபுறம் உள்ளனர். எனவே நாம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான முடிவுகளை எடுத்துவிட முடியாது என்பதால் மாற்று வழிகளைப் பல தீர்வுகளாகப் பிரித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
இந்தச் சூழலை அடிப்படையாகக் கொண்டு அவசரத் தேவையாக, சுவடு இதழும், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவும் (அ3) இணைந்து ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடலை கடந்த 09.06.2021 அன்று ஏற்பாடு செய்தோம். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழகத்தின் 30 மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து அடுத்த படிநிலையாக 16.06.2021 அன்று ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் குழந்தைகள் கல்வி குறித்த ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் என்பது பெருமைக்குரியது.


கொரோனா காலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள்:
1.மாணவர்களுக்கும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்குமிடையே மிகப்பெரிய இடைவெளி விழுந்துவருகிறது. அரசுப்பள்ளி மாணவர்களில் ஒரு பகுதியினர் கல்வியைவிட்டு விலகிச்செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

 1. உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் பயின்றுவந்த மாணவிகள் பலருக்கு திருமணம் முடித்துவைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கல்வியைத் தொடர இயலாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
  3.பாலியல் பிரச்சனைகளை இருபால் குழந்தைகளும் இந்தக் காலத்தில் பெருமளவில் எதிர்கொண்டு வருகின்றனர்.
  4.கடுமையான பொருளாதாரச் சிக்கலால், மாணவர்களின் ஒரு பகுதியினர் கிடைக்கும் வேலைக்குச் சென்றுவருகின்றனர். குறிப்பாக தொழில் நகரங்களில் ஏராளமான மாணவர்கள் வடநாட்டுத் தொழிலாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்பியுள்ளனர். இதனால் குழந்தைத் தொழிலாளர் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், மாணவர்களின் பொருளீட்டல் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் பங்களிப்பதால், அந்த மாணவர்கள் இனி கல்வியின் பக்கம் திரும்புவார்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.
  5.இருவரும் வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் மற்றும் ஒற்றைப் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் நேரத்தில் குழந்தைகளை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி வைத்துச் செல்லும் அவலநிலை நிலவுகிறது. வீட்டுச்சிறை எனும் வன்முறையைச் சந்திக்கும் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி அவர்களின் நடவடிக்கைகள் இயல்பிலிருந்து மாறுபட்டு வருகின்றன. வேலை முடித்து வீடு திரும்பும்வரை, குழந்தைகளின் நிலை குறித்த கவலையில் பெற்றோரும் கடும் உளவியல் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.
  6.குழந்தைகள் அவர்கள் வயதொத்த குழந்தைகளுடன் பழகி, விளையாடி தங்கள் உணர்வுகளைப் பகிர, வெளிப்படுத்த இயலாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 2. மாணவர்களின் ஒரு பகுதியினர் வழிகாட்ட ஆளில்லாததால், கூடா நட்பு, நெறிபிறழ் நடத்தைகளுக்கு ஆளாகியுள்ளனர். மதுப்பழக்கம், புகைபிடித்தல், போதைப் பழக்கவழக்கங்கள், சமூக விரோத செயல்பாடுகள் என தீய வழிகளை நோக்கித் திரும்பியுள்ளனர். 8.இடைநிற்றல் எண்ணிக்கை நாம் நினைத்துப் பார்க்க இயலாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மாணவர்கள் கல்வியை விட்டு வெகுதொலைவில் சென்று விட்டனர். அவர்களை மீண்டும் பள்ளிக்குள் அழைத்து வருவது பெரும் பிரச்சினையாக இருக்கப்போகிறது. 9.கொரோனா காலத்தில் மலைப்பகுதி மற்றும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலமும், நகர்ப்புறங்களில் பொருளாதாரத்திலும் சமூக நிலையிலும் பின்தங்கியுள்ள மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. 10.வகுப்பறை, கற்றல், தேர்வு என எதுவுமே இல்லாமல் எதிர்காலத்தில் கொரோனா பேட்ச் என முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சமும் கவலையும் மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் நிலவுகிறது. இந்நிலைமையிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிட என்ன செய்யலாம் என்பதையும் இக்குழு விவாதித்தது.அதனடிப்படையில் தமிழக அரசின் கல்வித்துறையிடம் பின்வரும் கோரிக்கைகளை தமிழக அரசின் கல்வித் துறையின் முன்வைத்துள்ளோம். அக்கோரிக்கைப் பட்டியலை குறித்து அடுத்த இதழில் காண்போம்.
  அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு [email protected] – 99769 86098)

படம் : Uma

Spread the love