September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பலரது வாழ்வைச் சிதைக்கும் உபா சட்டம்

கடலூர் சுகுமாரன்
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (ருடேயறகரட ஹஉவiஎவைநைள ஞசநஎநவேiடிn ஹஉவ-ருஹஞஹ) என்றதொரு கடுமையான சட்டம் பலரது வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறது. அந்த சட்டத்தின் கீழ் ஜாமீன் குறித்த ஒரு நீதிமன்றத்தின் முடிவு, நடைமுறையிலே அந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஆகவே மாறிவிடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
மார்ச் 24 அன்று தில்லியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் உமர் காலித்திற்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. டெல்லி கலவர வழக்குகள் என பொதுவாக அழைக்கப்படும் ஒன்றில்தான் இவ்வாறு ஜாமீன் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2020 அன்று தில்லியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கிய வன்முறையின் பின்னணியில் இருந்த சதிகாரர்களில் உமர் காலித்தும் ஒருவர் என்பது காவல்துறையின் வழக்கு. இதற்காக அவருடன் பலரையும் இணைத்து 1967 உபா சட்டத்தின்கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஏதும் நடைபெறாமலே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 500 நாட்களுக்கும் மேலாக அவர் சிறையில்தான் இருக்கிறார். வழக்கின் மீது நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை.
இந்த கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை தனது புலன் விசாரணையை நடத்திய விதத்தில் இருந்த குளறுபடிகள் குறித்து நிறையவே எழுதப்பட்டாயிற்று. குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-க்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட ஆர்வலர்களில் குறிப்பிட்ட சிலரைக் குறிவைத்து வழக்குகள் போடப்பட்டன. அவர்களுடைய பேச்சுக்கள் வன்முறையையும் பதற்றத்தையும் தூண்டியதாக புகார்கள் கூறப்பட்டன. இதற்கு சற்றும் குறையாத ஒரு தீவிரமான பிரச்சினையாக உமர் காலித்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது. அது இந்தியாவின் குற்றவியல் நீதி நிர்வாக அமைப்பு எவ்வாறு உடைந்து நொறுங்கி உள்ளது என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும்.
முதலில் கீழ்க்கண்ட சில உண்மைகளை ஆராய்வோம்.
ஜாமீன் மனு ஜூலை 2021-ல் தாக்கல் ஆகிறது. பல மணிநேர விசாரணைகள் ஒத்திவைப்புகளுக்குப் பிறகு ஜாமீன் மறுப்பு உத்தரவு வருகிறது. இதற்குள் 8 மாதங்கள் கடந்துவிடுகின்றன. ஜாமீன் விண்ணப்பத்தை ஏற்பதா, நிராகரிப்பதா என்று முடிவு செய்வதற்குக் கூட ஏன் இவ்வளவு காலதாமதம்? ஏன் இவ்வளவு விசாரணைகள்? ஒத்தி வைப்புகள்?
குற்றவியல் சட்டத்தின் நோக்கம்:
குற்றம் இன்னும் நிறுவப்படாத சூழ்நிலையில் ஒரு தனி நபருக்கு எதிரான விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது அவர்களின் சுதந்திரம் எவ்விதத்திலும் மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்வது மட்டுமே ஜாமீன் வழங்குவதின் நோக்கம் ஆகும்.
சாதாரண சூழ்நிலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓட கூடியவரா.. சாட்சிகளை சிதைக்கக் கூடியவரா அல்லது மிரட்டக் கூடியவரா என்பதை நீதிமன்றங்கள் ஆராயலாம். அத்தகைய ஆபத்துக்கள் ஏதும் இல்லை என அது கருதினால் அந்த நபரின் குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன் அவர்களின் சுதந்திரத்தை மறுப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதி’ என்ற பிரபல சொல்வழக்கிற்குப் பின்னால் உள்ள அர்த்தம் இதுதான்.
இந்த இடத்தில்தான் உபா சட்டத்தின் மோசமான அம்சங்கள் குறுக்கிடுகின்றன. போலீஸ் அறிக்கையைப் பார்த்து விட்டு ஜாமீன் வழங்க நியாயமான காரணங்கள் உள்ளதாக நீதிபதி கருதினாலும் கூட அவருக்கு ஜாமீன் வழங்கும் உரிமையை உபா சட்டம் தடை செய்கிறது. அதாவது குற்றவியல் விசாரணையின் கூறுகளை ஜாமீன் விசாரணை என்ற கட்டத்திலேயே புகுத்தி விடுகிறது. குற்றவியல் நீதி அமைப்பில் ஒரு பெரிய சிக்கலை இது ஏற்படுத்துகிறது. குற்றவாளியா இல்லையா என்பது முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வாதங்கள் முடிந்த பிறகுதான் தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக ஜாமீன் கேட்கும் நிலையிலேயே குற்றத்தை உறுதி செய்வது, நீதி விசாரணை குறித்த அத்தியாவசிய நடைமுறைகளை முடக்கிப் போடுவதாகும்…அல்லது குறுக்கு வழிகளில் சென்று குற்றத்தை உறுதி செய்வதாகும்.
போலீஸ் அறிக்கையில் உள்ள அனைத்தும் உண்மை என்ற அனுமானத்தின் அடிப்படையிலும் இது நடந்து முடிகிறது. இரு தரப்பிற்கும் இடையே விவாதம் நடத்துவது , ஒரு பக்கம் விவாதம் முடிந்த பிறகு அதை நிறுத்தி மறுபக்கம் பெயருக்கு விவாதங்களை அனுமதிப்பது, பிறகு அது குறித்து ஒன்றும் சொல்லாமல் பிரேரணை நிறைவேற்றுவதைப் போன்றதாகும். விசாரணைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். உபா சட்டத்தின் கீழ் பெரும்பாலும் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் ஜாமீன் மீதான நீதிமன்றத்தின் முடிவு நடைமுறையில் வழக்கின் மீதான முடிவாக மாறும் ஆபத்தில் போய் முடிகிறது. இறுதியில் குறைவான எண்ணிக்கையிலேயே தண்டனைகள் வழங்கப்படுவதை நோக்கும்போது, ஜாமீன் மறுக்கப்படுவதால் நிறைய நிரபராதிகள் தண்டனையை நடைமுறையில் அனுபவிக்க நேரிடுகிறது.
நிரபராதிகள் தண்டிக்கப்படுவதைத் தடுக்க குற்றவியல் நீதி அமைப்பை சீர்திருத்தியே ஆக வேண்டும். ஆனால் அந்தப் பணி பல ஆண்டுகளாக தள்ளிப் போடப்பட்டு வருகிறது. உபா சட்டம் பல தனி நபர்களின் வாழ்க்கையில் அழிவை ஏற்படுத்துவதைக் குறைக்க அத்தகைய பணியை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ஜாமீன் வழங்குவதற்கான தடைகளைக் குறைப்பது அல்லது அதற்குரிய விதிமுறைகளைத் தளர்த்துவது, போலீஸ் தரப்பு குற்றச்சாட்டுகளை ஒரு கடுமையான மறு ஆய்வுக்கு உட்படுத்துவது போன்றவற்றிலிருந்து இந்த பணியைத் தொடங்கலாம்.
நம்முடைய நீதித்துறைக்கு அதற்கான உறுதியும் விருப்பமும் உள்ளதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
(94437 [email protected])
(2022 ஏப்ரல் 7 ஆங்கில இந்து இதழில் கவுதம் பாட்டியா எழுதிய கட்டுரையின் சுருக்கம்)

Spread the love