May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பறிபோகும் கல்வி உரிமைகள்..!

ஒன்றிய அரசின் தவறான கல்விக் கொள்கையினால் நாடெங்கிலும் மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிபோகின்றன. மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வினைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்திடவும் நுழைவுத் தேர்வுகள் விரைவில் வரவிருக்கின்றன. பள்ளி இறுதித் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் அல்லாமல் தேசிய நுழைவுத்தேர்வு வழி அனுமதி என்பதே பெரும்பகுதி மாணவர்களை வடிகட்டுவதற்கான ஏற்பாடுதான். நுழைவுத் தேர்வுகள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாகவும், நகர்ப்புற மேட்டுக்குடி மாணவர்களுக்கு நல்வாய்ப்பாகவும் இருப்பதை தரவுகள் தெளிவாக்கியுள்ளன. இருப்பினும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை நீக்கிட பாஜக அரசு முன்வர மறுக்கிறது. பட்டப் படிப்பை நான்காண்டுகளாக உயர்த்துவதும் பல மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்டும் முயற்சியே.
ஏழாண்டுகளாக பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்த அளவில் இருப்பது கவலையளிக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிப் படிப்புகளை இடையில் நிறுத்தி வேலைக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவில் கூடியிருக்கிறது. இதைக் கணக்கில் கொள்ளாமல் 2022 பட்ஜெட்டில் தேசிய நிகர வருமானத்தில் 3 சதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கியிருப்பது கல்விப் பரவலுக்கு ஒன்றிய அரசு ஆதரவாக இல்லை என்பதையே காட்டுகிறது. ஆர்எஸ்எஸ்ஸின் பிற்போக்குக் கொள்கைகளை கல்வியில் திணிப்பது கல்விச் சூழலை மிகவும் பாதிக்கும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். உயர்கல்வி நிலையங்களின் தலைமைப் பொறுப்புகள், ஆளுநர்கள், துணைவேந்தர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளவர்களுக்கே வழங்கப்படுகிறது. இஸ்லாமிய மாணவிகள் தலையில் ஹிஜாப் அணிந்துவர சங்பரிவாரத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது கல்வி வளாகங்களிலிருந்து விரட்டுவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியே. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் கூட்டுவது, மாணவர்களின் படைப்பாற்றலை அதிகரிக்க முன்னுரிமை அளிப்பது, கல்வியில் மதவாதத்தை புகுத்தாமல் தரமான, மதச்சார்பற்ற, ஜனநாயகக் கல்வியை உறுதிசெய்வது, கல்வி வளாகங்களில் சாதி மதப் பாகுபாடுகளுக்கு இடங்கொடுக்காமல் மாணவர்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பது, கல்விக் கட்டணங்களை உயர்த்தாமலிருப்பது போன்ற நடவடிக்கைகளே இந்தியக் கல்வியை காப்பாற்றிட உதவிடும். -ஆசிரியர் குழு

Spread the love