May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பறவைகளுக்கு நீர் வார்க்கும் அதிசய மனிதர்

சிதம்பரம் இரவிச்சந்திரன்
கொளுத்தும் வெய்யிலில் நா வறண்டு தாகம் உயிர் போகிறது என்றால் நாம் என்ன செய்வோம்? திறந்தவெளியில் கதிரவனின் கதிர்களைத் தாங்கி வாழும் பறவைகளும், விலங்குகளும் என்ன செய்யும்? கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மப்பதாடம் என்ற ஊரில் வாழ்ந்துவரும் நாராயணன் என்ற 73 வயது மனிதர் தன் சொந்த செலவில் பறவைகளுக்கு நீர் வார்க்கிறார். விலங்குகளுக்கு உணவளிக்கிறார். சூழல் போராளி, எழுத்தாளரான இவர் ஆயிரக்கணக்கான மண் கலன்களை சுற்றுவட்டாரத்தில் வாழும் கிராமங்களில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார். இதன் மூலம் அவர்கள் அந்தப் பாத்திரங்களில் நீர் ஊற்றிவைத்து பறவைகள் வெய்யிலின் கொடுமையில் இருந்து தப்பி உயிர் வாழ வழிசெய்கிறார். ‘உயிரினங்களுக்கு ஒரு மண் கலன்’ என்ற பெயரில் இந்த சேவையை நாராயணன் 2018-ம் ஆண்டு முதல் செய்துவருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் 12,000 முதல் 15,000 மண் கலன்களை தன் சொந்த செலவில் வாங்கி நாராயணன் வழங்குகிறார். கொச்சி நகராட்சியில் இருந்து நாராயணனின் இந்த மகத்தான பணிக்கு விருது கிடைத்துள்ளது. ஒரே ஒரு மண் கலனில் வைக்கப்படும் நீர் நூறு பறவைகளை வாழவைக்கும் என்று நாராயணன் கூறுகிறார். 2018-ல் மட்டும் நாராயணன் மண் கலன்கள் வாங்குவதற்காக ரூ 6இலட்சம் செலவிட்டுள்ளார். ஒரு தந்தை என்ற நிலையில் தன் மூன்று குழந்தைகளுக்குமான தன் குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றிவிட்ட பிறகு இந்த பணியை எடுத்துக் கொண்டுள்ளார்.
லாட்டரிச்சீட்டு விற்பனை செய்வதோடு, கிராமத்தில் ஒரு சிறிய உணவகத்தையும் இவர் நடத்திவருகிறார். இதற்கு முன் நாராயணன் ரூ15 இலட்சம் செலவில் தன் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 10,000 மா மற்றும் பலா மரக்கன்றுகளை வாங்கி இலவசமாக வழங்கினார். நாராயணனின் இந்த முயற்சிக்கு ஆதரவாக மப்பதாடம் கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் அவர் கொடுத்த மரக்கன்றுகளை அக்கறையுடன் வளர்த்துவருகின்றனர். பழமரங்கள் வீட்டுவாசலில் வளர்க்கப்படும்போது அவை பறவைகளுக்கும், குரங்குகளுக்கும் வாழிடமாக அமைகின்றன. உண்ண உணவையும் தருகின்றன. நாராயணனின் சேவைகள் நமக்கு முன்மாதிரியாக அமையட்டும்.
(73390 89961 – [email protected])

Spread the love