September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

பதினைந்து நிமிட ஜாவலின் எறிதல்


டாக்டர் ஜி. ராமானுஜம்


’வருங்காலத்தில் எல்லாருமே 15 நிமிடங்கள்தான் புகழோடு இருப்பார்கள்’ என ஆண்டி வார்ஹால் என்பவர் கூறினார். அதாவது எந்த ஒரு காலத்திலும் ஒருவர் நீடித்த காலத்துக்குப் புகழ்வெளிச்சத்தில் இருந்து கொண்டே இருக்க முடியாது. மக்களின் நினைவுத் திறன் மிகக் குறைவானதே. ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்படும். எல்லோரும் அதைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். அப்போது வேறு ஒரு சம்பவம் நடைபெறும். உடனே இதை டிஸ்சார்ஜ் செய்து அந்த சம்பவத்தை அட்மிட் செய்து பார்ப்பார்கள்.


வரதட்சணைக் கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டால் அதைப் பற்றியே பலரும் பேசுவார்கள். மிக மிகத் தீவிரமாக இப்பிரச்சனையைத் தீர்த்தே ஆக வேண்டும் எனத் துடிப்பார்கள். அடுத்த நாளே பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற செய்தி பரவினால் டம்ளரையும் ஸ்பூனையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். அமெரிக்காவில் ‘ஸ்பெல் பீ’ என ஒரு போட்டி நடக்கும். அதில் ஒரு இந்தியப் பெண் வெற்றி பெற்றுவிட்டால் உடனே எல்.கே.ஜி. படிக்கும் தங்கள் குழந்தைக்கு ராக்ஷஸ ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி, என்சைக்ளோபீடியா என்றெல்லாம் வாங்கிக் குவித்துத் தள்ளுவார்கள். அடுத்த வாரம் சூப்பர் சிங்கரில் ஒரு குழந்தை வெற்றி பெற்றால் உடனே தம்பூரா வாங்கிக் கொடுத்துப் பிஞ்சுக் குழந்தையைப் பி.சுசீலாவாக நினைத்து ‘மன்னவன் வந்தானடி பாடு’ எனப் படுத்துவார்கள்.


விளையாட்டிலும் அப்படித்தான். ஒரு நாள் பாட்மிண்டனில் பி.வி.சிந்து பட்டம் வாங்கினால் எல்லோரும் காற்றில் கையை வீசிக் கொண்டிருப்பார்கள். அடுத்த நாள் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடந்தால் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் கால்பந்தாக்கி உதைத்து மகிழ்வார்கள்.


இப்போது ஒலிம்பிக் சீஸன். அதிலும் வராது வந்த மாமணியாக நீரஜ் சோப்ரா தங்கம் வென்றால் சும்மா இருப்போமா?
பல காலமாகக் கல்யாணமாக இருந்தாலும், ஒலிம்பிக்காக இருந்தாலும் இந்தியாவுக்கு பெண்கள்தான் தங்கம் கொண்டு வர வேண்டும் என்று பலரும் நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களைத் தவிடுபொடி ஆக்கினார் தங்கமகன் நீரஜ்!! உடனே எல்லோரின் பார்வையும் ஜாவலின் எறிதல் மேல் பதினைந்து நிமிடங்களுக்கு விழுந்தது.
பலரும் பதிவுகள் போட ஆரம்பித்தனர்.படம் வரைய ஆரம்பித்தனர். கவிதைகள் எழுதினார்கள்.
//ஆவலினால் காத்திருந்த அத்தனை இந்தியரும்ஜாவலினால் ஈட்டினார் பொன்!!//
என்றெல்லாம் குறள் வெண்பாக்கள் எல்லாம் எழுதினர் ( எழுதியவர் அடியேன்தான்).
விஜயகாந்த், ஜாக்கிசான் நடித்த திரைப்படங்களை எல்லாம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது யாரையாவது நான்கு மிதி மிதிக்கத் தோன்றும். அது போல் ஜாவலின் போட்டியில் ஒருவர் ஜெயித்த உடன் ஆரம்பிப்பார்கள் கையில் கிடைக்கும் எதையாவது எறிய ஆரம்பிப்பார்கள்
ஸ்போர்ட்ஸ் கடையில் இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்கக் கூடும்.


என்னண்ணே ! வரிசையா ஒட்டடைக் கம்புகளா வாங்கி இறக்கியிருக்கீங்க? ஒட்டடைக் கம்பும் விக்கப் போறீங்களா??
டேய்! இது ஒட்டடைக் கம்பு இல்லைடா! ஜாவலின். இன்னும் ஒரு மாசம் ஆர்வமா வந்து வாங்கிட்டுப் போவாங்க. அப்பறம்தான் ஒட்டடைக் கம்பா மாத்திருவாங்க!!”
வழக்கமாகக் கிரவுண்டில் ஓடுவேன். சில நாட்கள் ஜாக்கிரதையா மெல்ல ஓடறேன். நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதைப் பாத்துட்டு ப்ராக்டிஸ் பண்றேன்னு யாராவது ஏதாவதொரு குச்சியை ஈட்டியாகப் பாவித்து வெறித்தனமா எறிஞ்சுட்டா..? அதனால் ‘பின்’விளைவுகள் எதுவும் ஏற்பட்டு ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தில் வரும் விவேக் மாதிரி ஆகிடக்கூடாதே என்பதால் தான்…
பெற்றோர்கள் எல்லாம் ஆர்வமாக ஜாவலின் எறிதல் வகுப்புகள் முன் நின்று கொண்டிருப்பார்கள், வெற்றிவேல் வீரவேல் எனக் குச்சிகளைத் தூக்கிக் கொண்டு. இன்னும் சிலர் ஆன்லைனில் ஜாவலின் கற்றுத்தரும் வகுப்புகள் ஆரம்பித்திருப்பார்கள். இவையெல்லாம் தவறே அல்ல. வெறும் ஆர்வக் கோளாறாக இல்லாமல் உள்ளார்ந்த தீவிர முயற்சிகளாக இருந்தால் சரிதான்.
கமல்ஹாஸன் படங்களில் ஆள் மாறாட்டக் காமெடி சிறப்பாக இருக்கும். ..மைக்கேல் மதன காமராஜன் போல.


அவ்வை சண்முகியில் டெல்லி கணேஷ் ஜெமினியிடம் “மதம் மாறினா பேர்தான் மாறும். ஆளுமா மாறுவாங்க” என நாகேஷைக் காட்டிக் கேட்பார். அதுபோல் நீரஜ் சோப்ராவிற்குப் பதில் வேறொருவர் படத்தைப் போட்டுக் கமல்ஹாஸன் ட்விட்டரில் வாழ்த்தி விட்டார். ‘மெடல் ஜெயித்த பிறகு ஆளே மாறிட்டே’ என நீரஜ் சோப்ராவின் நண்பர்கள் அவரைக் கிண்டல் செய்யலாம்..பின் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். நாமும் இதுபோல் தவறு செய்பவர்கள்தான். இருந்தாலும் சிரிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் சிரிப்போமே! யார் தவறாக இருந்தால் என்ன?


நீரஜ் சோப்ராவின் பதினைந்து நிமிடம் முடிவதற்குள் ஒரு கட்டுரை எழுதிவிட்டேன். நீங்கள் இதைப் படிக்கும்போது ‘ஆமாம்ல? நீரஜ் சோப்ரான்னு ஒருத்தர் ரொம்ப நாள் முன்னாடி லாங்க் ஜம்போ, போல்ட் வால்டிலோ மெடல் வாங்கினார்ல?’ என ஆச்சர்யப்பட்டால் கட்டாயம் பதினைந்து நிமிடங்கள் ஆகி இருக்கும்..


(9443321004 – [email protected] )

Spread the love