September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நோபல் விருதுகள்

முனைவர் ச.சீ. இராஜகோபாலன்


ஆண்டுதோறும் தவறாது வழங்கப்படும் விருதுகளில் தலையானது நோபல் பரிசாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில் மட்டுமே விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. லெனின் பெயரில் வழங்கப்பட்டு வந்த சர்வதேச அமைதிப் பரிசு சோவியத் ஒன்றியம் சிதறுண்ட பின் நின்றுவிட்டது. அது போலவே லெனினோடு தோளோடு தோள் நின்று போராடியவரும் தலை சிறந்த கல்வியாளருமாகிய க்ருப்ஸ்காயா பெயரில் யுனெஸ்கோ வழங்கி வந்த கல்வி விருதும் சோவியத் ஒன்றியம் மறைந்ததும் வழங்கப்படுவதில்லை. ரொக்கப் பரிசை சோவியத் ஒன்றியம் வழங்கிவந்தது. காந்தியடிகள் பெயரில் சர்வதேச அமைதி விருதுவினை வழங்கிவந்த இந்திய அரசும் ஏனோ தானோ வென்று விருது வழங்க அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குச் சேர்த்து ஒன்றாக விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். விருதுக் குழுத் தலைவர் நாட்டின் பிரதமர்.


பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது ஆட்சியாளர்கள் சார்பாக இருந்தவர்களுக்கு, ஆட்சிக்கு எதிராகச் செல்லாதிருப்பதைத் தடுக்கவும் விருதுகள் பயன்படுத்தப்பட்டன. தாகூர், சி.வி.இராமன் போன்றோர் சாதனைகளுக்காகப் பெற்றனர். விடுதலைப் போரின் பொழுது பட்டத்தைத் துறக்கவும் தயங்காதவர்கள். ஜாலியன்வாலா படுகொலைக்குப் பின்னர் தாகூர் போன்ற பலரும் தம் பட்டங்களைத் திருப்பித் தந்தனர். விடுதலைக்குப் பின் பட்டங்கள் வழங்கப்படாது என்று எடுத்திருந்த தம் நிலைப்பாட்டைக் காங்கிரஸ் துறந்தது வியப்பிற்குரியது. இராஜாஜி, இராதாகிருஷ்ணன், இராமன் ஆகியோர்க்கு மிக உயரிய விருதுவான பாரதரத்னா வழங்கப்பட்டது. இத்தகு விருதுகளைத் தவிர நல்லாசிரியர் விருது போன்றவை புதிதாக உருவாக்கப்பட்டது.
நோபல் விருதுகள் போற்றுதற்குரியதாகக் கருதப்படுகின்றது. அதிலும் அரசியல் உண்டு. ஐந்து முறை அமைதி பரிசிற்கு காந்தியடிகளின் பெயர் முன்மொழியப்பட்டும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொள்ளாதிருக்க அவருக்கு வழங்கப்படவில்லை. அதனால் அவ்விருது மதிப்பிழந்தது எனலாம். இதுகாறும் ஏழு இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள். தாகூரின் படைப்பான கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு அவருக்கு 1913- ஆம் ஆண்டிற்கான நோபல் விருது கிடைக்க உதவியது. அவரே மொழிபெயர்த்து ஆங்கிலக் கவிஞர் டபிள்யு.பி. யேட்ஸின் முகவுரையுடன் வெளிவந்தது ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி அக்கறை கொள்ளாததால் பல உன்னதப் படைப்புகளும் உலக அளவில்அறியப்படவில்லை. அவருக்குப் பின் 1930-யில் சி.வி.இராமனுக்கு இயற்பியலுக்கான விருது அளிக்கப்பட்டது. அவரது கண்டுபிடிப்பிற்கான செலவு ரூ 100 கூட இல்லை என்றறியும் பொழுது வியப்பு மேலிடுகின்றது. பின்னர் அல்பேனியாவில் பிறந்து இந்தியக் குடியுரிமை வழங்கப்பெற்ற அன்னை தெரெசாவிற்கு உலக அமைதிக்கான பரிசு 1979-ஆம் ஆண்டில் வழங்கப் பெற்றது.1998-யில் அமெர்த்யா சென்னும், 2014-ஆம் ஆண்டில் கைலாஷ் சத்யார்த்தியும் நோபல் பரிசு பெற்ற இந்தியக் குடிமகன்கள், இந்தியாவில் பிறந்து அன்னிய நாட்டுக் குடிமக்களான ஹர்கோவிந்த் கொரானா(1968), எஸ்.சந்திரசேகர்(1983), வெங்கி இராமகிருஷ்ணன்(2009), அபிஜித் பானெர்ஜி(2019) ஆகியோர் நோபல் பரிசு பெற்றமைக்கு நாம் பெருமிதம் கொள்கின்றோம். ஆனால் தாம் இந்திய வம்சாவளியினர் என்று சிறிதும் அவர்கள் பெருமைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆம், அவர்கள் வளர்ச்சிக்கு உதவியது தாம் குடியேறிய மேலைநாடுகளே என்று உறுதியாக நம்புகின்றனர். ரொனால்ட் ராஸ்(1902), ருத்யார்ட் கிப்லிங்(1907), தலாய் லாமா(1989) ஆகியோர் இந்தியாவில் பணியாற்றுகையில் நோபல் விருது வழங்கப் பெற்ற அன்னிய நாட்டார். இந்த ஆண்டு மொத்தமாக 13 பேர் நோபல் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


(044-23620551 – [email protected])

Spread the love