September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நொறுங்கிய குடியரசு

16 மாதங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா நாளை ஒய்வு பெறுகிறார். எந்த தலைமை நீதிபதிக்கும் இல்லாத பெருமை ரமணாவுக்கு உண்டு. தலைமை நீதிபதியாக இருந்த இந்த 16 மாதத்தில் எந்த ஒரு முக்கிய வழக்கையும் விசாரித்து அவர் தீர்ப்பு வழங்கவே இல்லை.  

1. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து 16/08/2019-ல் வழக்கு தொடரப்பட்டது. ஏறத்தாழ இரண்டரை வருடமாக அந்த வழக்கை விசாரிக்க இன்னும் அரசியல் சாசன அமர்வு கூட உருவாக்கப்படவில்லை.  

2. தேர்தல் பத்திரங்களுக்கு ( Electoral Bonds) எதிராக தொடரப்பட்ட வழக்கு. இதை எதிர்த்து 5/04/2019-ல் உச்சநீதிமன்றத்தில் முதல் விசாரணை நடந்தது. இந்த வழக்கின் மீது கடந்த 3 ஆண்டுகளில் 8 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. இந்த வழக்கு 1,816 நாட்கள் நிலுவையில் உள்ளது.  

3. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் – தனி மனிதனின் சுதந்திரத்தை பறிக்கும் இந்த சட்டத்தால் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். பத்திரிகையாளர் சித்திக் காப்பான் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 21 மாதங்களாக சிறையில் இருக்கிறார். 9/9/2019-ல்  உச்சநீதிமன்றத்தில் UAPA சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 35 மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முறை மட்டுமே விசாரணை நடந்திருக்கிறது. இச்சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் பிணை கிடைக்கவில்லை. அதில் உமர் கலித்தும் ஒருவர். 

4.10% இட ஒதுக்கீடு வழக்கு-

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி இதை எதிர்த்து 12/03/2019-ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,323 நாட்களாக நிலுவையில் இருக்கும் இவ்வழக்கில் இதுவரை 6 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. EWS ஒதுக்கீடு மூலம் முற்பட்ட வகுப்பினருக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்த போட்டித்தேர்வுகளில் OBC வகுப்பினரை விட கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு மாபெரும் சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவ் வழக்கை விசாரிக்க இன்னும் அரசியல்சாசன அமர்வு உருவாக்கப்படவில்லை. 

5. குடியுரிமை திருத்தச் சட்டம்-18/12/2019-ல் CAA சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 987 நாட்கள் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் இதுவரை 2 முறை மட்டுமே விசாரணை நடந்துள்ளது. 31 மாதங்களாக இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே இல்லை.  

இது தவிர பல முக்கிய வழக்குகள் பல மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.16 மாதங்கள் தலைமை நீதிபதியாக இருந்த ரமணா அமர்வு முன் எவ்வளவு முக்கியமான வழக்கை விசாரிக்க சொன்னாலும் அவர் Will see, We will take it up,I will list soon என்றுதான் இத்தனை மாதங்களாக கூறிவந்தார். ரமணா அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துக் கூட தீர்ப்பு வழங்கியிருக்கலாம். ஆனால் அவர் அதைக் கூட செய்யவில்லை. ஒரு முக்கிய வழக்கில் கூட தீர்ப்பு வழங்காமல் 16 மாதங்கள் காலத்தை கடத்தியிருக்கிறார். உச்சநீதிமன்றம் தன் வரலாற்றில் என்.வி.ரமணாவை போல் ஒரு தலைமை நீதிபதியை பெற்றதில்லை.  

நொறுங்கிய குடியரசு என்ற தன்னுடைய புத்தகத்தில் ” இந்தியாவின் நீதிமன்றங்களில் ஏழைகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அருந்ததி ராய் எழுதியிருப்பார். அந்த கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. Delayed justice is denied justice. தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி.  

– விஜய் 

Spread the love