May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நூல் அறிமுகம்
இன்றைய சூழலில் கல்வி

ஆசிரியர்: உமா மகேஸ்வரி
வெளியீடு: சுவடு பதிப்பகம், சேலையூர், சென்னை- 73 விலை: ரூ.300/-
9551065500, 9791916936
அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியராகத் தமிழகத்தில் வெற்றிநடை போடும் உமா மகேஸ்வரி தன்னுடைய கல்வித்துறை அனுபவங்களைத் தொகுத்து நூல் வடிவில் கொணர்ந்துள்ளார்.
பள்ளிக்கல்வியின் பண்புகளாகிய கற்றல், கற்பித்தல், தேர்வு முறைகள், மாற்றுக்கல்வி முறைகள் என பள்ளிக்கல்வியின் அனைத்து அம்சங்களையும் உமா இந்நூலில் அலசியிருக்கிறார் என்று தன்னுடைய வாழ்த்துரையில் மேனாள் துணைவேந்தர் ஜவகர் நேசன் பாராட்டுகிறார். உமா மகேஸ்வரி பள்ளிக் கல்வி குறித்த பரந்துபட்ட பிரச்சனைகளை இந்நூலில் விவாதித்துள்ளார் என்று தன்னுடைய அணிந்துரையில் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் சீ. ஹோசிமின் திலகர் குறிப்பிடுகிறார்.
சுவடு இதழில் வெளிவந்த பெரும்பான்மையான கட்டுரைகளுடன் புதிய ஆசிரியன், நமது மண்வாசம், அறம் இணைய இதழ் ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையும் சேர்த்து மொத்தம் 36 கட்டுரைகளை இத்தொகுப்பில் காண்கிறோம்.
‘தேர்வுக்கு மாற்று’ கட்டுரையில், தேர்வுமுறை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது.. தேர்வுகள் குழந்தைகள் மீது அதிகப்படியான அழுத்தத்தைத் தருவதுடன் மனப்பாட முறையை வலுவாக்குகிறது.. தேர்வுகளை முற்றிலும் அகற்றிவிடாமல் தேர்வுக்கான மாற்றையும் உருவாக்கிட வேண்டும் என்கிறார் உமா மகேஸ்வரி. பள்ளிக்கல்வித் துறையில் நடக்கும் பயங்கர ஊழல்கள் குறித்தும் துணிச்சலுடன் பேசுகிறார். உயர்மட்டத்திலிருந்து கீழ் நிலைவரை கமிஷன் அடிப்படையில் நிதிகள் நீர்த்துப்போய் கல்வி கலங்கிக் கொண்டு களங்கமாகி நிற்கிறது. மக்கள் வரிப் பணத்தில் கல்வித்துறையில் ஒரு மறைமுக சாம்ராஜ்யம் நடப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். பள்ளிக் கல்வியைச் சீர்திருத்துவதற்கு இருபது அம்சத் திட்டம் ஒன்றையும் முன்மொழிகிறார். அரசுப் பள்ளிகள்தான் மக்கள் பள்ளிகள் என்று ஆதாரங்களுடன்நிரூபிக்கிறார். மழலையர் பள்ளிகளை முறையாகக் கட்டமைக்காவிட்டால், இனி அரசுப் பள்ளிகளே இல்லாமல் போய்விடும் என்று கள நிலவரங்கள் சொல்கின்றன என்று உறுதியுடன் கூறுகிறார். இன்றைய கல்வித் துறையில் நிலவும் சீர்கேடுகளைச் சரிப்படுத்தும் ஒரே ஆயுதம் பள்ளி மேலாண்மைக் குழுவே என்று நம்புகிறார். கல்வி மேலாண்மைக் குழுவின் வரையறைகள், கடமைகள் குறித்தும் ‘நமது கல்வி நமது உரிமை’ கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார்.
உமா மகேஸ்வரியின் இந்நூலினை ஆசிரியர்கள்,கல்வித்துறை அதிகாரிகள், பெற்றோர்கள் என்று கல்வித்துறை சார்ந்தஅனைவரும்படித்துப் பயனடைந்திட வேண்டும். சமூகச் செயற்பாட்டாளராக களத்தில் இருப்ப தால்தான் அறச்சீற்றம் மேலிட உமா மகேஸ்வரியால் இதுபோன்ற நூலினை எழுதிட முடிந்துள்ளது. உமா மகேஸ்வரி தொடர்ந்து கல்வி குறித்த விவாதங் களை நடத்திட புதிய ஆசிரியன் இதழ் வாழ்த்துகிறது.

  • பெ.விஜயகுமார்
Spread the love