June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதற்கு காலக்கெடு வேண்டாமா?

வேதவல்லி சுகுமாரன்
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்படுகையில் அடிப்படை உரிமைகளை அரசே மீறும்போது அது குறித்த மனுவை ஒரு மாத கால அவகாசத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டது. ஆனால் அரசியலமைப்புச்சட்டம் இறுதிப்படுத்தப்பட்டபோது அதன் வரைவறிக்கையில் அவ்வாறு இடம் பெறவில்லை. அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதம் செய்யும் தனிமனித உரிமையைப் பெறுவதற்கு குடிமக்கள் பல வழிகளில் போராட்டம் நடத்த வேண்டிய நிலையே இன்று உள்ளது.
ஆனால் ஒரு அரசு தன் அடிப்படைக் கடமையை மீறும்போது அது குறித்து எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது, பின்னர் அதை புறந்தள்ளுவது அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்துப் போகவே உதவி செய்யும். அடிப்படை உரிமை தவிர தேர்தல் முறைகேடுகள், அரசு அதிகார துஷ்பிரயோகம் என பல விவகாரங்களில் தீர்ப்பு வழங்கிட தாமதம் ஏற்படுத்துவது நீதி நிர்வாகத்தை கேள்விக்குறியாக்கும். ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்கிற பிரபல வாசகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது.
உதாரணத்திற்கு சில..

 1. ஆகஸ்ட் 5, 2019 அன்று அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீர்த்துப் போக வைக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டத்தை ரத்து செய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக அறிவித்தது ஒன்றிய அரசு. இது குறித்த வழக்கு இதுவரை விசாரணைக்கு கொண்டு வரப்படவே இல்லை. இப்படி ஒரு செயலைச் செய்திட மத்திய அரசுக்கு அரசியல் சாசனச் சட்டத்தின் மூலம் உரிமை வழங்கப்பட்டுள்ளதா? அதுவும் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் சட்டமன்றம் இல்லாத நேரத்தில் 356 ஆவது பிரிவை மத்திய அரசு பயன்படுத்த முடியுமா? வழக்கு இன்னும் விசாரணைக்காக காத்திருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக மட்டும் அல்லாமல் அரசியலமைப்பு அதிகாரங்களையும் அரசின் பொறுப்புகளையும் நிறைவேற்றுவது குறித்தும் ஆழ்ந்த கேள்விகளை இது எழுப்பியுள்ளது.
 2. அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்த மனுவும் நீண்ட காலமாக நிலுவையில்தான் உள்ளது. திட்டம் அமலுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆயிற்று. கார்ப்பரேட் முதலாளிகள் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அள்ளித் தர இத்திட்டம் வழி செய்து கொடுத்துள்ளது. தருவது யார் என்பது பரம ரகசியம். மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது பாஜகவுக்கு சாதகமாகவே நன்கொடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைமுறைகளையும், அறநெறிகளையும், நேர்மையையும் இது கேள்விக்குறியாக்குகிறது. வழக்கை முழுவதுமாக விசாரிப்பது என்பது தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வருகிறது. வழக்கு விசாரணையை தள்ளிப் போட்டுக்கொண்டே வருவது நீதிமன்றச் செயல்பாடுகளின் மீது விழும் கரும்புள்ளி அல்லவா?
 3. 2013-ல் கௌகாத்தி உயர் நீதிமன்றம் மத்திய புலனாய்வுக் கழகத்தின் சட்டப்பூர்வ அந்தஸ்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒரு தீர்ப்பை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக மனு தொடுத்தபோது இந்த தீர்ப்புக்கு தடை வழங்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு எவ்வித விசாரணைகளும் நடைபெறவில்லை.
 4. குடியுரிமை சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள் நின்றுதான் இயற்றப்பட்டதா என்பது குறித்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன .
 5. மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43.டி.5. ஜாமீன் பெற முடியாதவாறும் நீண்ட காலம் விசாரணை இல்லாமல் சிறையில் அடைத்து வைக்கவும் வழி செய்கிறது. இது குறித்து முறையான நீதிமன்ற விசாரணையும் வாதங்களும் நடைபெறவில்லை. மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது அதனை எதிர்த்து ஜனநாயக இயக்கங்கள் கூட நடத்த முடியாமல் தடுக்க இத்தகைய சட்டத்திருத்தங்கள் அரசுக்கு கைகொடுக்கின்றன. பீமா கோரேகான் வழக்கு ஓர் உதாரணம்.
  குடி மக்களின் சுதந்திரமான மூச்சுக்காற்றைப் பறித்து அரசு அவர்களைத் திணறடிக்கச் செய்யும்போது நீதிமன்றங்களும் இதுகுறித்து பாராமுகமாக இருக்கும் நிலையை என்னவென்பது?
  அரசியலமைப்புச் சட்டத்திற்கு சவால் ஏற்படுத்தும் வழக்குகளை மேலும் விரிவடைந்த அமர்வுகளுக்கு எடுத்துச் சென்று விசாரித்து உரிய தீர்ப்பு வழங்க ஆவன செய்யக்கூடியவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே. இதற்கு முன்னால் அந்தப் பதவியை வகித்த மூவரைக் காட்டிலும் தற்போதைய தலைமை நீதிபதி மிகுந்த நம்பிக்கை அளிப்பவராகத் தெரிகிறார். மேலே குறிப்பிட்ட வழக்குகளை விரைவில் விசாரித்து தீர்ப்பு வழங்கிட அவர் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதை தன் செயல்பாடுகளின் மூலம் அவர் நிரூபிக்க வேண்டும்.
  ([email protected])
  (7/12/21 ஆங்கில இந்துவில் கவுதம் பாட்டியா எழுதிய கட்டுரையின் சுருக்கம்)
Spread the love