September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நிறப்பிரிகை 8 வாழ்க்கைப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு …

எஸ்.வி. வேணுகோபாலன்

சிரித்த முகத்தோடு வரவேற்றார் அந்த எளிய உணவகத்தின் உரிமையாளர் திரு ராஜேந்திரன். நேரம் தப்பிய நேரத்தில் மதிய உணவுக்காகத் தேடிக் கொண்டிருக்கையில் கண்ணில் தட்டுப்பட்ட ஒரே எளிய சைவ உணவகமாக அண்மைப் பயணத்தில் முத்துப்பேட்டையில் அங்கே போய்ச் சேர்ந்திருந்தோம். அடுத்த பத்து நிமிடங்கள் அவர் இலையிலிட்ட அன்னத்தை விடவும் அவரது அன்பான பேச்சு மொழியை அதிகம் அருந்தி மகிழ்ந்த நேரமது. பார்த்துப் பார்த்து.. கேட்டுக் கேட்டு, பதார்த்தங்கள் ஒவ்வொன்றின் அருமை, பெருமையெல்லாம் சொல்லி அவர் பரிமாறியது வெறும் உணவு அல்ல, ரசனை மிக்க வாழ்க்கை அனுபவத் துளி.
வீட்டுச் சமையல் சாப்பாடு அய்யா, கொஞ்சமாக வைப்பேன், கேளுங்கள் தருவேன், இலையில் மிஞ்சப்படாது' என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அன்றாடம் ஒரு தொகையல், வற்றல் குழம்பிலும், அன்றாடம் ஒரு தினுசு என்று சளைக்காமல் சொல்லிக் கொண்டே இருந்ததில் அவரது சொந்தப் பெருமை பேசுவதுபோல் துளியும் பிரதிபலிக்கவில்லை. ஒரு நாள் வருகை தருவோரும் நல்ல உணவை ரசித்து ருசித்து அருந்திவிட்டு உற்சாகமாகப் போகவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்த உரையாடல் அது. சாப்பிட்டவாறே அவரது இருக்கைக்குப் பின் நான்கைந்து தினசரி காலண்டர்கள், அத்தனையிலும் ஆகஸ்ட் 15 பளிச்சிடுமாறு தேதிகள் சரியாகக் கிழிக்கப்பட்டு இருந்ததைப் பாராட்டினால்,அய்யா உங்கள் இடப்புறச் சுவரில் பாருங்கள்’ என்றார். கேட்டால், அதிர்ந்து போவீர்கள். மொத்தம் 30 காலண்டர்கள்..அத்தனையிலும் தேதி ஆகஸ்ட் 15, திருத்தமாக! எதற்கு இத்தனை என்று கேட்டால், நாங்களா வாங்குறோம், கடைக்காரர்கள் அன்பாகக் கொடுத்தது, ஆனால், அன்றாடம் காலையில் முதல் வேலை தேதி கிழிப்பது... முதல் நாள் இரவு 11.59 வரைக்கும் கடையில் இருந்தாலும் கூட மறுநாளைய வேலை மிச்சமாகட்டும் என்று கிழிக்க மாட்டேன். காலையில் முதல் வேலை அது' என்றார். காலண்டர்களை விட்டுவிடுவோம். மேசைக் கண்ணாடியின் கீழ் அவர் சேகரிப்பில் மின்னிய பழைய இந்திய மற்றும் அயல் நாட்டு கரன்சி நோட்டுகள், கறிவேப்பிலை தொகையல், மோர் மிளகாய் இவையெல்லாவற்றையும் விட, அவரது சுவாரசியமான பழகும் தன்மை, நாவில் நின்று ருசிக்கும் ஸ்ட்ராங் காஃபி போல் நெஞ்சில் ஒட்டிக் கொண்டுவிட்டது. வாழ்க்கையில் இப்படியான மனிதர்களை, இன்னும் கொண்டாட்டமான ரசிகர்களை எங்கேனும் சந்திக்கத்தான் செய்கிறோம். பாட்ஷா படத்தில் பேருந்து நடத்துநராக, டிராஃபிக் போலீஸ்காரராக, ஓட்டல் பணியாளராக ...நாயகியின் பார்வையில் படுவோர் எல்லோரும் அவரது கண்களுக்கு ரஜினியாகவே காட்சி அளிப்பதுபோல், வர்த்தக உறவை மீறி இயல்பான அன்பை வெளிப்படுத்தும் மனிதர்களின் அறிமுகம் இன்பம் பயப்பது. மறைந்த எழுத்தாளர் காஸ்யபன் அவர்கள் சென்னை வந்த ஒரு சமயத்தில் பேராசிரியர் கே ராஜூ அவர்கள் இல்லத்தில் வைத்து அன்பர்கள் சங்கமம் ஒன்றை நடத்திக் களித்து விடைபெற்றுத் திரும்புகையில் கவிஞர் சுந்தர்ஜி, டாக்டர் ஜி.ராமானுஜம் இவர்களோடு அசோக் பில்லர் அருகே ஓர் ஓட்டலில் சென்று அமர்ந்தோம். எங்களுக்கு காஃபி கோப்பைகள் ஏந்திவந்த பணியாளர், சுந்தர்ஜி கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துவிட்டு, அந்த எழுத்துகளோடு தமக்குள்ள பரிச்சயத்தை ஓர் இளம் புன்னகையோடு பகிர்ந்துகொண்டு சட்டென்று அடுத்த மேசைக்கு நகர்ந்த கணத்தை மறக்க முடியாது. குவிகம் இலக்கிய அமைப்பின் இணைய வழி நேர் காணலில் கடந்த மாதம் கவிஞர் ராகவன் மதுவந்தி அவர்களோடு உரையாடும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. அடுத்தவர் படைப்புகளைக் கொண்டாடும் ரசனை மிக்க மனிதர்! அவரதுஆளுக்கொரு வானம்’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஓடியாடி ஏறி இறங்கி / அபாரமான கோணங்களில் / மும்முரமாய்ப் புகைப்படம் / எடுத்தவரை நிறுத்தி வைத்து / ஒரு படம் எடுத்துக் கொள்ளத் / தோன்றாமலே போய்விட்டது' என்கிற அழகான எளிய கவிதை கணையாழியில் வந்தது. வாசகர்களுக்கு அது பல்வேறு நினைவுகளைக் கிளர்த்தும்.உங்கள் திருமணத்திற்குப் புகைப்படம் எடுத்தவரை நினைவிருக்கிறதா?’ என்று கேட்டேன். `ஆம், நினைவுக்கு வருகிறது, அந்தப் புகைப்படக் கலைஞர் ஒரு பெண்’ என்றார் அவர்.
(நிறங்கள் இன்னும் விரியும் )
(94452 59691 – [email protected])

Spread the love