August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நிறப்பிரிகை 6 : காலம் கடத்தலும் கடந்து நிற்றலும்

எஸ்.வி. வேணுகோபாலன்,


தாம்பரம் புறநகர் ரயில் நிலையத்தில் இறங்கி அவசர அவசரமாக நானும் தோழர் அசோகனும் ஓடோடிப் போய் ஏறியது திருச்சிக்குப் போகும் பாயிண்ட் டு பாயிண்ட்-உணவகம் நில்லாப் பேருந்து. திருச்சிக்கு இரண்டு டிக்கெட் எடுத்துவிட்டோம். ஆனால் போக வேண்டியது திருச்சிக்கு அல்ல-மதுராந்தகம் கடந்து ஒரு சிற்றூர்! நாங்கள் இறங்க வேண்டிய இடத்தை மெதுவாக நடத்துனரிடம் சொன்னோம். ‘அங்கெல்லாம் நிறுத்த முடியாது, உங்களை யார் இதில் ஏறச் சொன்னது, எத்தனை சாதா பேருந்து போகுது, அதுல போக வேண்டியதுதானே..” என்று கடிந்து கொண்டார்.
செங்கல்பட்டு பைபாஸ் எல்லாம் கடந்து பேருந்து வேகமாகப் போய்க் கொண்டிருக்க, மெல்ல ஓட்டுநர் அருகே போய் கெஞ்சிக் கேட்க ஆரம்பித்தோம். அவர் மேலும் எரிந்து விழுந்தார். எப்படியோ ஒரு வழியாக மன்றாடி, இடையே கொஞ்சம் குரலுயர்த்தி, அப்புறம் சமாதானப்படுத்தி அவரை நிறுத்த வைத்து, எங்களுக்கே பரிச்சயம் அற்ற ஒரு சிற்றூரில் இறங்கி சாலையிலேயே நடக்க ஆரம்பித்தோம். இடது பக்கம் இறக்கத்தில் வரிசையாக அமைந்திருந்த பழங்காலத்து வீடுகளைக் கடக்கையில் இடையே குறுக்கிட்ட சந்து வழியாகத் தெரிந்த ஒரு தெருவில் சவ ஊர்வலம் கடந்ததைப் பார்த்தோம். உடனே வேகமாக அந்த இடத்தைச் சென்றடைந்து, அவர்களோடு இணைந்து நடந்து இடுகாட்டைச் சென்றடைந்தோம்.
வங்கியில் ஓட்டுநராகப் பணியாற்றி மறைந்த தோழர் சண்முகத்திற்கு சங்கத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத்திவிட்டு, அவர் மனைவி மற்றும் உறவினர்களுக்கு எங்கள் ஆறுதல் சொல்லி விடைபெற்று, நெடுஞ்சாலைக்கு உடனே திரும்பி, சென்னை செல்லும் பேருந்திற்காகக் காத்திருக்கலானோம்.
15 ஆண்டுகளுக்கு மேலாக அறிந்த ஒரு மனிதர் எங்கோ பிறந்து, எங்கெங்கோ வேலை பார்த்து, எங்கோ மரித்துக் கடைசியில் இங்கே வந்து புதையுண்டு போனார் என்று அசோகன் வருத்தத்தோடு சொன்னார். எப்படியோ அடித்துப் பிடித்து நாங்கள் அந்த ஊரைக் கண்டடைந்து அவர் முகத்தைப் பார்த்தது இன்று நினைத்தாலும் வியக்க வைக்கிறது.
அசோகன் என் வாழ்வில் மறக்க முடியாத அன்புத் தோழன். வங்கி ஊழியர் தொழிற்சங்க தளத்தில் அசாத்திய பங்களிப்பு. யாரும் கேளாமல் உதவுவது, அழைக்காவிட்டாலும் போய் நின்று வாழ்த்துவது, உடல் நலக்குறைவு என்றறிந்தால் ஓடோடிப் போய் உறுதுணையாக நிற்பது போன்ற மிக அரிதான பண்புநலன்களின் உருவகம் அசோகன். இப்படி அதிரடியாக எத்தனையோ உள்ளூர் வெளியூர் ஓட்டங்கள்-மருத்துவ மனைகளில், திருமண மண்டபங்களில், காவல் நிலையங்களில் தேவைப்படும் நேரத்தில் போய் நிற்கும் அன்பின் வெளிப்பாடுகள், கடைசி நேர சாகசங்கள் அவரோடும், மற்றவர்களோடும் கொட்டிக் கிடக்கின்றன-தொழிற்சங்க வாழ்க்கையின் பக்கங்களில்! இப்படியாகத் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனுபவங்கள் கொண்ட மனிதர்கள் உண்டு!
மாண்டிஸோரி பள்ளிகளில் எழுத்துகளைக் கண் வழி மட்டுமின்றிக் கைவிரல்களின் வழி முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகின்றனர். திடப் பொருள், திரவப் பொருள் கீழே சிந்தாமல் பாத்திரம் மாற்றிக் கொட்டுவது ஒரு பயிற்சி. வடிவங்களைப் பார்த்து ஏறுவரிசையிலும் இறங்குவரிசையிலும் அடுக்கி வைத்தல் மற்றொரு பயிற்சி. உருண்டையான பொருளை எந்த வளையத்தில் உட்செலுத்த முடியும், எதில் முடியாது என்பதைப் பிள்ளைகள் இளம் வயதிலேயே கற்றுணர்வார்கள்.
சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் பார்வையால் இடைவெளியை அளந்து யாருக்கும் பாதகமின்றி முந்திச் செல்வதையும், சிலர் பிசகி ஓட்டி இடித்து விழுவதையும் நிறைய காண்கிறோம். இந்த நேரத்திற்குள் இது சாத்தியம் என்ற தெளிவு பெற்றிருப்பவர்கள் துணிந்து எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கின்றனர். வேறு சிலர் தயக்கத்திலேயே பாதி நேரத்தைப் போக்கி, இப்படியும் அப்படியும் திண்டாடுகின்றனர். ‘சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு, அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்’ எனும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்பாடல் வரிகள் (நாடோடி மன்னன்), முயற்சிகளே மேற்கொள்ளாத தன்மையைத்தான் இடித்துப் பேசுகிறது. விழிப்போடும் துடிப்போடும் நம்பிக்கையோடும் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் சாத்தியமுள்ள விஷயங்களைத் தட்டாமல் முயன்று பார்க்கின்றனர். அர்ப்பணிப்பு மிக்க மனிதர்கள் அடுத்தவர்களுக்காக என்று வரும்போது கால நேரத்தைக் கணக்கில் கொள்வதில்லை, குறுகிய காலத்திற்குள் சென்றடைய வேண்டும் என்றாலும் சரி, கூடுதல் பொழுது செலவழிக்க நேர்ந்தாலும் சரி !
(94452 59691 – [email protected])

Spread the love