June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நிறப்பிரிகை 5

இயல்பாகவே சிறப்பாக இருப்பது
எஸ் வி வேணுகோபாலன்
இது நடந்து நாற்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும். ’அந்தப் பையன் பெயர் கூடத் தெரியலியே!’ என்று என் பாட்டி மிகவும் வருத்தப்பட்டாள். கிராமத்திலிருந்து வழக்கம்போல் அறுவடை வேலைகள் மேற்பார்வை முடித்துக் கொண்டு தாம்பரம் வந்தவள், புறநகர் ரயில் நிலையம் நோக்கிக் காலடி எடுத்து வைக்கும்போது கால் இடறியோ, மயக்கம் வந்தோ கீழே விழுந்து விட்டிருக்கிறாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரமாக அவளை மாம்பலத்தில் கொண்டு வந்து சேர்த்துச் சென்றவன் பதினைந்து வயது கடக்காதவன் என்றாள் பாட்டி. அவளது கழுத்தில் இருந்த மெலிதான தங்கச் சங்கிலி, கை மூட்டையில் இருந்த நிலக்கடலை, அரிசி, தானியங்கள் ஒன்று குறையாமல் பத்திரமாகக் கொண்டு சேர்த்துவிட்டுப் போயிருந்தான் அந்தச் சிறுவன். தங்களது கைக்காசு செலவு செய்தாவது, சாலையில் தங்களுக்குத் தட்டுப்படும் விலைமதிப்பற்ற பொருளை உரியவர்களிடம் சேர்க்கும் சில மனிதர்களைப் பற்றி நாளேடுகளில் அவ்வப்பொழுது வாசிக்கவே செய்கிறோம். இந்தப் பட்டியலில் ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகம் இடம்பெறுவதுண்டு.
இதை நேரெதிரான முறையில் பகடி செய்யும் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. வழியில் கண்டுபிடித்த பெட்டியைக் கொண்டுபோய் இருவரும் காவல் நிலையத்தில் சேர்ப்பார்கள். பெட்டியின் சொந்தக்காரரோ திறந்து பார்த்துவிட்டு, ‘கொஞ்சம் பணம் குறைகிறது’ என்பார். ‘ஏண்டா எடுத்தீங்க’ என்று அடிப்பார் அதிகாரி. ‘இதுக்குத்தான் நாமே எடுத்துக்கலாம்னு சொன்னேன், இவன்தான் இங்கே கொண்டு வந்து கொடுத்தால் பரிசு கொடுப்பாங்கன்னு சொன்னான். இவன் பேச்சை நம்பி வந்தேன் பாருங்க’ என்று சொல்லி மேலும் அடி வாங்கிக் கொள்வார் கவுண்டமணி.
வெளியே தெரியாமல் செய்யும் உதவிகள், விளம்பரத்திற்கு அப்பாற்பட்ட நற்செயல்கள், பலருக்கும் இயல்பான பண்பாக்கம். வங்கி அதிகாரி ஒருவரின் பொருளற்ற புகாரை அடுத்து முரளி என்ற கடைநிலை ஊழியர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட, தொழிற்சங்கம் தலையிட்டு உடனடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினோம். இரண்டொரு நாளில் தேநீர்க் கடையில் வைத்து சிரித்துக் கொண்டே ஒரு செய்தி சொன்னார் முரளி. அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, அவரது கிளையருகே ஓர் இளம் பெண் இரு சக்கர வாகனத்தை ஓட்டமுடியாமல் தத்தளிப்பதைப் பார்த்ததும், பக்கத்தில் தெரிந்த கடைக்கு வாகனத்தைத் தள்ளிக் கொண்டு போய் விட்டுவிட்டு, அந்தப் பெண்ணை பத்திரமாக அவர் வீட்டில் கொண்டு சேர்த்திருக்கிறார் முரளி. மறுநாள் வண்டி செப்பனிடப்பட்டதும் இவரே கொண்டு சேர்க்கும்போதுதான் வீட்டு வாசலில் பெயர்ப் பலகையை வாசித்திருக்கிறார். யாரிடமும் சொல்லாத செய்தியை அன்று தெரிவித்தார். நேரே மண்டல அலுவலகம் சென்று உயரதிகாரியின் உதவியாளர் காதில் இதைப் போட்டோம். அன்று மாலையே தற்காலிக வேலை நீக்கம் நீக்கப்பட்டுப் பின்னர் பணியில் சேர்ந்துவிட்டார் முரளி. அவர் உதவி செய்திருந்தது, உயரதிகாரியின் மகளுக்குத்தான்!
இன்னும் சுவாரசியமான இப்படியான உண்மை நிகழ்வைப் பின்னர் ஒரு புத்தகத்தில் வாசித்ததும் மறக்க முடியாதது. ஆளரவமற்ற இரவு நேரத்தில் தனியாக ஓர் இரு சக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு போகும் இளம் பெண்ணைக் கடந்து போகிறது ஒரு வாகனம். நிறுத்து நிறுத்து என்று உள்ளிருப்பவர் கத்தியும் சில மைல்கள் கடந்தபின்தான் வாகன ஓட்டி திருப்புகிறார். ஆனால், அதற்குள் அந்தப் பகுதியின் ஓர் ஆசாமி அந்தப் பெண்ணின் வாகனத்தை அருகே ஒரு கடைக்காரரை எழுப்பி மறுநாள் சரிசெய்து தரச்சொல்லி விட்டு, வேறு ஒருவரை அழைத்து இந்தப் பெண்ணை பத்திரமாக அவள் வீட்டுக்குக் கொண்டுவிட்டு வருமாறு பணிக்கிறார், ‘இந்தப் பகுதியில் இந்த மாதிரி நேரத்தில் இப்படி தனியாக வரக்கூடாது’ என்று அந்தப் பெண்ணை எச்சரித்து அனுப்பி வைக்கிறார். தள்ளி நின்று பார்த்துவிட்டுப் புறப்படும்போது வாகன ஓட்டி, ‘இப்போது முடித்துவிட்டு வரும் ஷூட்டிங்கில் நீங்கள் செய்துகொண்டிருக்கும் நிஜக்கதையின் பயங்கர ரவுடி பாத்திரம் அந்த ஆள்தான்’ என்கிறார். ‘நான் படத்தில் நடிக்கிறேன், அவர்தான் உண்மையான ஹீரோ’ என்று அந்த சுயசரிதையில் (காழ்ச்சப்பாடுகள்: கே.வி. ஷைலஜாவின் வளமான தமிழில் ‘மூன்றாம் பிறை’ ) நெகிழ்ச்சியுறச் சொல்லி இருப்பார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி.
(நிறங்கள் இன்னும் விரியும் )
(94452 59691 [email protected])

Spread the love