September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நிறப்பிரிகை 4
உள்ளத்தோடு உரையாடுதல்

எஸ்.வி. வேணுகோபாலன்
அன்பர்கள் சிலர் அடுத்தவர்களிடம் நிறைய கேட்டுக் கொண்டிருப்பார்கள். துருவித் துருவிக் கூடக் கேட்பார்கள். ஆனால் தாங்கள் எதுவும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். வேறு சிலர், தாங்கள் அறிந்த விஷயங்களை யார் கேட்டாலும் சொல்லிவிட்டுக் கைவீசி நடந்து போய்க் கொண்டிருப்பார்கள். வம்புக்கு அலையக்கூடாது, தவறான விஷயங்களைப் பரப்பிக் கொண்டிருக்கக் கூடாது. மற்றபடி, பொதுவான செய்திகள் பரஸ்பரம் பேசிக் கொள்ளலாம். கனமான பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடப்பதுபோல் எல்லாவற்றையும் உள்ளுக்குள் பூட்டிக் கொண்டு அலையவேண்டியதில்லை.
பகிர்தல் ஒரு பாதுகாப்பு உணர்வு என்பதுதான் சமூக ரகசியம். ஆனால், பகிர்ந்து கொள்வது பாதுகாப்பின்மை என்ற உணர்வில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு பெரிய உளவியல் சிக்கல். நம்பிப் பகிர்ந்து கொள்ள முடியாத அளவு இறுக்கம். அது முந்தைய கசப்பான அனுபவங்களின் பாடமாகவும் இருக்கக் கூடும். எதை யாரிடம் சொல்லலாம், எதுவரை போகலாம், இவரிடம் அதைச் சொன்னோமா, அடடா சொல்ல விட்டுவிட்டோமா என்பது ஓர் அவஸ்தை.
சிலர், அடுத்தவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக் கொள்வார்கள், அதிகபட்சம் ‘உம்’ கொட்டுவார்கள். தவறிக்கூட எந்தக் கருத்தும் சொல்ல மாட்டார்கள். இதுவும் ஒரு பாதுகாப்பு உணர்வு. ஒற்றைத் திசைவழி உரையாடல்கள் இப்படி நிறைய நடக்கும். மனத்தில் என்னதான் நினைக்கிறார் ஒருவர் என்பதற்கான ஸ்கேன் எந்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கும் சவால் விட்டு நிற்கக் கூடியவர்கள் இருக்கக் கூடும்.
சொல்ல வேண்டிய நல்ல அம்சங்களை வாய் திறந்து பாராட்டி அறியாதவர்கள், தேவையற்ற செய்திகளை ஏதோ கடமை ஆற்றும் பெரும் பொறுப்பில் எடுத்துச் சொல்வார்கள். சொல்லக் கூடாததைச் சொல்லக் கூடாத இடத்தில் சொல்லிவிட்டு அந்த நெருப்பு பற்றி எரியத் தொடங்கியதும் நமக்கேன் வம்பு என்று ஓசைப்படாமல் நகர்ந்து போகிறவர்களும் உண்டு. ‘எதிர் நீச்சல்’ படத்தில் ஜெயந்தியைப் பெண் பார்க்க எம் ஆர் ஆர் வாசு வரும் நேரத்தில், ஸ்ரீ காந்த், சவுகார் ஜானகி பேசிக் கொள்ளும் உரையாடல் சிலருக்கு நினைவுக்கு வரக்கூடும். சிகிச்சை எடுத்து நல்லபடி திரும்பி வந்த பெண்ணை மன நல நோயாளியாக அடையாளப்படுத்தும் வம்புப் பேச்சு அது. வலிக்கவைக்கும் காட்சி.
சிலரது அலைபேசி அழைப்பு, நேரடி வருகை புத்துணர்ச்சி ஊட்டுவதாக அமையும். நல்லெண்ணங்களின் மீது சமைக்கப்பட்ட உளம் திறந்த பேச்சு மொழி அது. அண்மையில், எழுத்தாளர் மா அரங்கநாதன் கதைகளில் பனை மரம் குறித்த எழுத்துகள் பற்றி இலக்கிய விமர்சகர் க.பஞ்சாங்கம் ஓர் அருமையான கட்டுரை எழுதி இருந்தார். ஒரு சிறுகதையில் பனை மரத்தை வெட்டத் துடிக்கும் தந்தையை, அது கூடாது என்று தடுக்கிறான் மகன். அதன் சத்தம் பிடித்திருக்கிறது என்கிறான் அவன். மரத்தின் சத்தம் என்பது அதன் பேச்சு அன்றி வேறென்ன… தந்தை நடத்தாத உரையாடலை அந்த மரம் அவனோடு நடத்தி இருக்கிறது. வீட்டை விட்டு அவனை வெளியேற்றி விடுகிறார் தந்தை. பிறகு மீள்கிறான் பல ஆண்டுகள் கழித்து, மரம் பத்திரமாக இருக்கிறது.
உரையாடல் அற்ற பெருவெளியாக வாழ்க்கை நகரும்போது அழுத்தம் மிகுந்துவிடுகிறது. கடிதங்கள் ஒரு காலத்தில் மனங்களுக்கு இடையேயான உரத்த உரையாடலாக அமைந்திருந்தன. இப்போதோ பேச்சற்றுக் கழிகின்றன பொழுதுகள். ‘என்ன பேச்சு பேசறான்’, ‘ஒரு பேச்சுக்குத் தானே சொன்னேன்’, ‘என்ன பேச்சே காணோம்’, ‘மறு பேச்சு சொல்ல முடியுமா’ போன்ற சொல்லாடல்கள் எல்லாம் கடந்த காலத்திற்குரியவை ஆகிவிடும்போல் இருக்கிறது. மனம் விட்டுப் பேசுதல் என்பது கிட்டத்தட்ட ஒரு மூச்சுப் பயிற்சி போல. ‘ஒரே சீராக மூச்சை இழுங்கள், கொஞ்சம் நிறுத்திக் கொள்ளுங்கள், இப்போது மூச்சை வெளியேற்றுங்கள்’ என்பது நுரையீரலைத் தூய்மைப்படுத்துகிறது. இரத்தத்தில் மூச்சுக் காற்று சீராகக் கலக்க வைக்கிறது. உடலின் இயக்கத்தை இலேசாக்கிக் கொடுக்கிறது. இந்தப் பயிற்சியை எல்லாத் திறப்புகளையும் அடைத்து வைத்துக் கொண்டு இருள் குடியிருக்கும் அறைக்குள் அமர்ந்து செய்யக்கூடாது. காற்றும் வெளிச்சமும் பாயும் இடத்தில் மூச்சுப் பயிற்சி நல்ல பலன்கள் அளிக்கிறது. மனவெளியை அதே போல் திறந்து வைத்துக் கொள்ளும்போது வாழ்க்கைப் பயணம் இதமாக அமைய அதிக வாய்ப்பு உண்டு.
(94452 59691 – [email protected])

Spread the love