September 30, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நிறப்பிரிகை – 1 கரித்தலும் அங்கீகரித்தலும்

எஸ்.வி. வேணுகோபாலன்
சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் சமையல் அறையில் பாடிக் கொண்டிருக்கும் தாயிடம், ‘அம்மா நீங்க அருமையா பாடறீங்க’ என்று மகன் ஒரு கீரைக்கட்டு எடுத்து பரிசாகக் கொடுப்பான். ‘போடா’ என்று சிரித்துக் கொண்டே நகர்வாள் தாய். ஆனால், கதைப்போக்கில் பிற்பகுதியில் கோயிலில் வைத்து நடக்கும் ஒரு திருமண கொண்டாட்ட நேரத்தில்தான் நாயகனின் தந்தை உணர்கிறார், தனது மனைவிக்குப் பாடத் தெரியும் என்பதை.
பொதுவாகக் கணவர்கள் தமது மனைவியின் திறமையை உணர்ந்து கொள்ளாமல் அல்லது பெருமையாக எடுத்துக் கொள்ளாமல் போவது ஒரு பக்கம். அவளுக்கு என்ன தெரியும் என்று பொதுவெளியில் மட்டம் தட்டுவது இன்னும் கொடுமையான விஷயம். எழுத்தாளர் உஷா சுப்பிரமணியன் அவர்களது ‘உலக அழகியிடம் ஒரு ரகசியம்’ என்ற சிறுகதை அண்மையில் நவீன விருட்சம் கதைஞர்கள் நிகழ்வு ஒன்றில் எடுத்துப் பேசப்பட்டது. எண்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதை இது. ஒரு போதும் தமது மனைவியை மதியாத மனிதர் ஒருவர், குடும்ப சங்கமங்களில் கூட அவளுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பவர். அவர்களது மகள் பேரழகியாக உருவெடுக்கிறாள். உலக அழகியர் போட்டியில் முதல் பரிசு பெற்றுவிடும் வியப்பும் அவர்கள் வாழ்க்கையில் நடந்து விடுகிறது. அவளது தாயை மேடைக்கு அழைக்கிறார்கள், பேசுவதற்கு! இவளுக்கு என்ன தெரியும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார் கணவர்.
திருமணமாகிச் சில ஆண்டுகள் குழந்தைப் பேறு வாய்க்காத சூழலில், அவள் மிகவும் அவமதிப்புக்கு உள்ளான தருணத்தில், செயற்கை முறையில் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு எடுத்திருக்கின்றனர் தம்பதியினர். அவர்கள் நிறத்தில் இல்லாது, பளீர் வெண்ணிறத்தில் பிறந்த பெண் குழந்தைதான் இப்போது உலக அழகியாகி இருக்கிறாள். ‘என் கணவரின் விந்தணுக்கள் வீரியம் இன்றி இருந்ததால் பரிசோதனை வெற்றி அடையாமல் போய்க் கொண்டிருந்தது, எனவே, அந்த நேரத்தில் வேற்று மனிதர் ஒருவரது அணுக்கள் பயன்படுத்திக் கொள்ள என் விருப்பம் தெரிவித்து, டெஸ்ட் டியூபில் தரித்த கருதான் இங்கே இப்போது உலக அழகியாக மின்னிக் கொண்டிருக்கிறாள்’ என்று ஒரு பெரிய உண்மையைப் போட்டு உடைக்கிறாள் தாயானவள். அதிர்ந்து போய்ப் பார்த்துக் கொண்டிருப்பார் கணவர்.
வங்கியில் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அன்பர் ஒருவர் அண்மையில் பேசிக் கொண்டிருக்கையில், தாம் மும்பை மாநகரில் உடன் பணியாற்றிய சக அதிகாரி ஒருவரைப் பற்றி வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டார். படிப்பில் முதல் மதிப்பெண்கள், நிறைய விஷயங்கள் அறிந்தவர் என்று சொல்லப்பட்டவர். அலுவலகத்தில் மிக சாதாரணமாக ஒதுக்கப்பட்ட பணிகளே அவரிடம் ஒப்படைக்கப்படுவதை இவர் கவனித்து மிகவும் வியப்பு அடைந்திருக்கிறார். ஒரு நாள் அவரிடம், ‘திறமையான மனிதர்தானே, ஏன் சவாலான பணிகளை உங்களிடம் யாரும் கொடுப்பதும் இல்லை, நீங்கள் கேட்பதும் இல்லை’ என்று வினவியிருக்கிறார்.
உடைந்து நொறுங்கிப் போன தனது இதயத்தை அந்த மனிதர் அப்போது இவரிடம் எடுத்துக் காட்டி ஆதங்கங்களை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார். இளமைக் காலத்தில் இருந்தே இவருக்கு எதுவும் தெரியாது என மட்டம் தட்டியே பெற்றோர் வளர்த்திருக்கின்றனர். கடைக்கு அனுப்பும்போதும், பணத்தைத் தம்பியிடம் கொடுத்துவிட்டு ‘நீ அவனோடு துணைக்குப் போனால் போதும், உனக்கு ஒன்றும் தெரியாது’ என்றுதான் சொல்வார்களாம். வீட்டுக்கு வந்த மருமகளிடம் ‘இவனுக்கு ஒன்றுமே தெரியாது.. நீதான் குடும்பத்தைப் பார்த்து நடத்த வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். பிள்ளைகளாகப் பிறந்தவர்களோ, ‘எங்க அப்பாவுக்கு ஒன்றுமே தெரியாது’ என்றுதான் சொல்லித் திரிவார்களாம். அப்படியே படிந்து போய் மனம் முடமாகிப் போன வாழ்க்கை. ‘இதுவரை யாரும் என்னிடம் கேட்டது கூட இல்லை, நீங்களாவது மதித்து விசாரித்தீர்களே’ என்றாராம் அவர்.
தங்களை மெய்ப்பித்துக் கொள்ளப் போராடுவோர் ஒரு பக்கமும், தங்கள் மீது குத்தப்பட்ட தவறான முத்திரையால் மேலும் உள்ளே சுருங்கிப் போய் விடுவோர் இன்னொரு பக்கமும் இருக்கின்றனர். இழித்துப் பார்ப்பது, குறைத்து மதிப்பிடுவது, மதிப்பின்றி நடத்துவது எத்தனை பெரிய வன்முறை என்பதை நாம் உணர்வதில்லை. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைப் பாராட்ட சொற்கள் இல்லை.
(வாழ்க்கையின் வண்ணங்கள் தொடரும்)
-94452 59691 – [email protected]

Spread the love