September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நிறத்தைத் தாண்டிய நேசம்..கறுப்பின ஆசிரியர் வெள்ளை மாணவர்களின் மனங்களை வென்ற கதை

ம.கதிரேசன்
கல்வியாளர் பேரா. ச. மாடசாமி அவர்களின் கூடி ளுசை, றுiவா டுடிஎந என்ற ஆங்கில புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் தான் “நிறத்தைத் தாண்டிய நேசம்”. இது அவரது வாசிப்பனுபவ புத்தக வரிசையில் மூன்றாவதாகும். கூடி ளுசை, றுiவா டுடிஎந புத்தக ஆசிரியர் ரிக்கி பிரைத்வைட் என்ற கறுப்பரின் சுயசரிதை. சந்தர்ப்பவசத்தால் ஆசிரியரான அவர் வெள்ளை மாணவர்களின் மனங்களை வென்ற கதை.
பிரைத்வைட் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பிரிட்டிஷ் கயானாவில் பிறந்தவர். இன்ஜினியர்.இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் விமானப் படையில் சேர்ந்து போரிடுகிறார். உலகப் போர் முடிந்ததும் படைகள் கலைக்கப்படுகின்றன. வேலையிழக்கிறார். பண்பாட்டிலும், நாகரிகத்திலும் தான் பெரிதும் மதிக்கும் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும் என்று நம்புகிறார். ஆனால் இங்கிலாந்தின் நிறத்தின் அடிப்படையிலான பாரபட்சத்தால் செல்லுமிடமெல்லாம் நிராகரிக்கப்படுகிறார். இறுதியாக லண்டனின் சேரிப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்கிறார்.
கிரீன்ஸ்லேடு உயர்நிலைப் பள்ளி- பணிபுரிய யாரும் தயங்கும் பள்ளி. ஆசிரியர் பணியே அவர் நேசிக்கும் பணியல்ல. அதிலும் சேரிப் பகுதியில், சமாளிப்பதற்கு கடினமான பள்ளியில் வாழ்க்கைப்பாட்டிற்காக பணியில் சேர்கிறார். அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண் ஆசிரியர்கள்தான். மாணவர்களை சமாளிப்பது பெரும் பாடாக இருக்கிறது. பொதுவாக ஆண் ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் நீடிக்க முடிவதில்லை.
அவரது நல்வாய்ப்பு, ஊக்கமும் ஆலோசனைகளும் வழங்கிய பள்ளியின் தலைமையாசிரியர் புளோரியனும் சக பெண் ஆசிரியர்களும்தான். புளோரியன் எளிமையானவர். வழக்கமான பள்ளியாக இல்லாமல் ஒழுங்குபடுத்தப்பட்ட சுதந்திரத்துடன் புதிய முயற்சிகளுடன் பள்ளியை நடத்துபவர். பசியுடன் வரும் மாணவர்களைப் புரிந்தவர். பல்வேறு இன, மத மாணவர்கள் படிப்பதால் அசெம்பிளியில் கூட குறிப்பிட்ட கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் மதிய உணவை உண்கின்றனர். பாடம், ஆசிரியர், விளையாட்டு பற்றிய மாணவர்களின் வெளிப்படையான வாராந்திர அறிக்கை-மதியம் இசை-நடனம்-ஆண்டுப் பேரவை- அதில் கற்றுக்கொண்டவைகளை மாணவர்களே வெளிப்படுத்துதல்-ஆசிரியர்களுடன் மாணவர்களின் கேள்விகள்… என்று பல புதுமையான முயற்சிகளை பின்பற்றுகிறார் புளோரியன்.
பிரைத்வைட் உயர் வகுப்பு ஆசிரியர். அவர் கனவு கண்ட வகுப்பறையல்ல இது. அசுத்தமான வகுப்பறை. அழுக்கான உடைகள். அவரது முதல் வகுப்பு இறுக்கத்துடன் முடிகிறது. தொடர்ச்சியான வகுப்புகளிலும் கசப்பும் பகைமையும் மிஞ்சுகிறது. பேருந்து, பொதுவெளி எங்கும் நிலவும் நிறபேதம் சமூகத்தின் தாக்கத்தால் மாணவர்களிடமும் ஒரு ஆண் ஆசிரியரிடம் கூட வெளிப்படுகிறது. பிரைத்வைட் பொங்கி எழுவதில்லை. கறுப்புத் தோலுடன் மரியாதையாக வாழ்வது எப்படி என்று அவமதிப்புகளை நிதானமாக கடக்கிறார்.
மாணவர்களின் ஒத்துழைக்காத மௌனம், வகுப்பறை சத்தம், கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் மெல்ல மெல்ல மாற்றுகிறார். மாணவர்களின் மனங்களை அன்பால் வெல்கிறார். ஏழை மாணவர்களான அவர்கள் பள்ளி உயர் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லக் கூடியவர்கள் அல்ல. உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தை தாங்கும் நிலையில் உள்ளவர்கள்.
இதையே பிரைத்வைட் கற்பித்தல் ஆயுதமாக பிரயோகிக்கிறார்.
நீங்கள் குழந்தைகளல்ல; சீனியர்..வேலைக்கு போகும் இடங்களில் இதெல்லாம் வேண்டியிருக்கும் என்று சொல்லியே மாணவர்களை வழிக்குக் கொண்டு வருகிறார். சமமாக நடத்துகிறார். அவர்களிடம் உரையாடல் நடத்த பெரிதும் மெனக்கெடுகிறார். மாணவர்கள் எதைக் கேட்டாலும் அவரிடம் பதில் இருக்கிறது. மியூசியத்திற்கு அழைத்துச் செல்வது போன்று பொதுவெளியிலும் கற்றலுக்கு வாய்ப்பு ஏற்படுத்துகிறார். இப்போது அவரது டேபிளைச் சுற்றி எந்நேரமும் மாணவர்கள்!
வீடுகளிலிருந்து ஆசிரியருக்கு பூங்கொத்தும், கேக்கும் கொண்டு வருகிறார்கள். எங்க சார்.. எங்க சார் என்று கொண்டாடுகிறார்கள். மாணவர்களின் குடும்பப் பின்னணி நெகிழ வைக்கும். அம்மாவின் பிரசவத்தின்போது தலைமாட்டில் உடனாளாக இருந்த ஒரு மாணவி. மருத்துவமனையில் அம்மா சிகிச்சை பெற்றபோது குடும்பத்தையே தாயாக பார்த்துக்கொண்ட மாணவி. மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள்தான்!
விளையாட்டுச் சண்டையில் பள்ளிக்கு வெளியே ஒரு மாணவனுக்கு கத்திக் காயம்பட, கத்தியை வைத்திருந்த மாணவன் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்போது தண்டனையின்றி அந்த மாணவன் வெளிவருவதற்கு பிரைத்வைட் உதவுகிறார். இளம் விதவையான அம்மா, அவரது மகள் மனக்கசப்பைப் போக்க தலையிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது. பள்ளி அவரோடு மிகவும் நெருக்கமாகிறது. தள்ளுவண்டியில் சாமான்கள் வாங்கும்போது அவருக்கு தனி முன்வரிசை. இவர் என் மகளின் / மகனின் ஆசிரியர் என்ற பெருமை!
கறுப்பர் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுத்த பெண்மணி மகளின் கோபத்தால் மனம் வருந்தி வீடு வாடகைக்கு விட முன்வருகிறார். அன்பு மட்டுமல்ல; மாணவர்களின் அத்துமீறல்களின் போதும் உரியவாறு தலையிடுகிறார் பிரைத்வைட்.
ஆண்டுப் பேரவை! பிரைத்வைட்டின் மாணவர்கள் உலகெங்கும் நாடு இழந்து வாடும் மக்கள் பற்றி- நாடு இனம் கடந்து மனிதர்கள் அனைவரும் ஒன்று – நிறபேதமற்ற இங்கிலாந்து என்றெல்லாம் பேசுகின்றனர். பிரைத்வைட்டின் முயற்சிகள் வீண் போகவில்லை!
முடிவில் மாணவர்கள் அன்புக்குரிய ஆசிரியரிடம் சொல்வது முக்கியமானது.
” உங்களால் வளர்ந்தோம். பொறுப்புள்ள இளைஞர்களாக நடத்தினீர்கள். உங்களுக்கு எங்களின் இந்த சிறு பரிசு” என்று எழுதி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர். இவ்வளவும் ஓராண்டுக்குள் சாதித்துள்ளார் என்பதுதான் பிரைத்வைட்டின் பெருமை!
மாணவர்களிடம் நிறத்தை தாண்டிய நேசம் வெற்றி பெறுகிறது.
இந்தப் புத்தக அனுபவம் பற்றி எஸ். எம். கூறும்போது பிரைத்வைட்டின் மீதான அன்பால் புத்தகத்தை கையில் எடுத்ததாகவும், அனுபவத்தை எழுதி முடித்தபோது பிரைத்வைட்டுடன் கூடவே தலைமையாசிரியர் புளோரியனும் மாணவி பமீலாவும் தனது மனதில் நிறைந்ததாகக் கூறுகிறார். மாணவர்களை நேசித்து தன்னுடன் பயணித்த சக ஆசிரியர்களும் உடன் நின்ற உயிருக்குயிரான மாணவர்களும் இந்த புத்தக வாசிப்பின் போது மீண்டும் மீண்டும் நினைவில் வந்தார்கள் என்கிறார்.
ஆசிரியர்கள் அவசியம் படித்து உள்வாங்க வேண்டிய புத்தகம் இது.
புத்தக வெளியீடு- வாசல் பதிப்பகம்- விலை : ரூ.120
(98421 [email protected])

Spread the love