September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நியாயம்தானா, நீதிபதி அவர்களே!

மதுக்கடைகளை மூடச் சொல்லி, வழக்குத் தொடுத்தவருக்கு அபராதம் விதித்தீர்கள்.. பிளாஸ்டிக் ஆலைகளை மூடச் சொல்லி வழக்குத் தொடுத்தவரின் வழக்கை தள்ளுபடி செய்தீர்கள்.. இரண்டுமே தவறு எனத் தெரிந்தும் நீங்கள் செய்தீர்கள்…
உங்களிடம் ஒரு கேள்வி : ஆசிரியர்கள் குறித்து உங்களால் எப்படி பொதுவெளியில் அவதூறு கூறமுடிந்தது? உங்களுக்குப் பாடம் போதித்த ஆசிரியர்கள் இந்த தீர்ப்பைக் கண்டிருந்தால் கண்ணீர் வடித்திருப்பார்கள்.
ஒரு லட்சம் ஊதியம் வாங்கும் முதுகலை ஆசிரியர் எனச் சொல்லி இருக்கின்றீர்கள். உண்மைதான்.. எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.எட்., எம்.ஃபில்., பி.எச்.டி. எனப் பட்டங்களைப் பெற்று, 30 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் இணைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றினால் மட்டுமே, இந்த ஊதியத்திற்கு அருகில் வர முடியும். அதை உணராமல் பொறுப்பற்று நீங்கள் பேசியுள்ளீர்கள்.
இன்றைக்கு எவரும் பிரபலமடைய வேண்டுமென்றால், ஆசிரியர்களையோ அரசு ஊழியர்களையோ அவதூறாகப் பேசுவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது.
எங்களிடம் படித்த மாணவர்கள் எந்த நிலைக்கு உயர்ந்தாலும், அதிக மகிழ்ச்சி அடைவது ஆசிரியர்கள்தான் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்..
தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஊதியமா? இது உங்கள் கேள்வி..
எல்லா ஆசிரியர்களுமா தவறு செய்தார்கள்? தவறு செய்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.
ஆனால் எல்லா ஆசிரியர்களையும் குற்றவாளிகள் என்று விசாரணை இல்லாமலே தீர்ப்பு சொல்வது குருநிந்தனை அல்லவா?
ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை, இன்னொரு நீதிபதி மாற்றுகிறார். இதில் யார் சரி? யார் தவறு?
தவறான தீர்ப்புக்கு தண்டனை உண்டா?
20 வருடம் பணியாற்றி ஒரு லட்சம் ஊதியம் ஓர் ஆசிரியர் வாங்குவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே.. எவ்வித கல்வித் தகுதியும் இல்லாமல், முதல் மாதத்திலேயே லட்சம் ரூபாயைக் கடந்து சம்பளம் பெறும் எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் குறித்து உங்களால் வாய்திறக்க முடியுமா?
வாக்குறுதிகளைத் தந்துவிட்டு வெற்றிபெற்ற பின், நிறைவேற்றாமல் ஏமாற்றும் அரசியல்வாதிகளை உங்களால் தகுதியிழப்பு செய்ய முடியுமா?
முடிந்தால் டாஸ்மாக்-ஐ மூடச் சொல்லி ஒரு தீர்ப்பு வழங்குங்கள்.
ஆசிரியர்கள் அத்தனை பேரும் உங்களைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
சிகரம் சதிஷ்-எழுத்தாளர்-ஆசிரியர்

Spread the love