September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைவு கூர்வோம்!

பேரா. ஆர்.சந்திரா
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, மார்ச் மாதம் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1857-ம் ஆண்டு பணி நேரத்தைக் குறைக்க கோரியும், ஊதிய உயர்வு மற்றும் வாக்குரிமை கோரியும் நியூயார்க் நகரில் உள்ள நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிகளில் இறங்கி போராடி, போலீசாரின் தாக்குதலை எதிர்கொண்டனர். 1908-ம் ஆண்டு டென்மார்க் நகரில் நடைபெற்ற இரண்டாவது சோஷலிஸ அகில உலக மாநாட்டில் அப்பெண்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில், சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜெர்மனியின் பிரபல மார்க்சீய சிந்தனையாளரான கிளாரா ஜெட்கின் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அலெக்சான்ட்ரா கொலன்தாய் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து மார்ச் 8 நாள் உலக உழைக்கும் மகளிர் தினமாக பெண்கள் தங்களுடைய உரிமைகளை முன்வைத்து அனுசரிக்கப்பட்டு வருகிறது. லாரென்ஸ் நெசவாலைப் பெண்கள் முன்வைத்த ‘பிரெட் அண்ட் ரோசெஸ்’ என்ற கோஷம் பிரபலமாகியது.
இன்று மார்ச் 8 உலக மகளிர் தினமாக ஆகி வணிகமயமாகியும் மாறிவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்கள், ஒரே மாதிரி புடவை அணிவது, பெண்களுக்கு கோலப் போட்டி, சமையல் போட்டி, நகைக்கு தள்ளுபடி என்று மாறி, மீண்டும் பெண்களை புடவை, நகை, சமையல் என்ற அந்த வளையத்திற்குள் கொண்டுவந்துவிட்டது. மருத்துவமனைகளும் விதிவிலக்கல்ல. பெண்களுக்கு சில பரிசோதனைகள் இலவசம் என்று அறிவிக்கின்றன. மகளிர் தினம் ஒரு சடங்காக மாறிக்கொண்டு வருவதைக் காண முடிகிறது. இந்த சூழலில், இந்த தினத்திற்கு வித்திட்டவர்கள் பற்றியும், சர்வதேச, தேசீய மற்றும் மாநில அளவில் உழைக்கும் மகளிரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்களை நினைவு கூர்வது அவசியம்.
‘ஃபேமஸ் பைவ் என்று அழைக்கப்படும் கனடா நாட்டைச் சேர்ந்த ஐந்து பெண்களான எமிலி மர்ஃபி , ஹென்றிடா எட்வர்ட், நெல்லி மேக்ளங், லூயி மேகின்னே, ஐரேன் பார்பி ஆகிய ஐந்து பேர்களும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் ஒரு வினோதமான வழக்கை தொடர்ந்தனர். பெண்கள் மனிதர்களா.. என்ற கேள்விதான் வழக்கின் சாராம்சம். இல்லை என நீதிபதி தீர்ப்பு வழங்கியும் விடாமல் மேல்முறையீடு செய்து, இறுதியில் ‘பெண்கள் மனிதர்களே’ என்ற தீர்ப்பை பெற்றுத் தந்தனர். அவர்கள் அப்படி போராடக் காரணம், பெண்கள் கனடாவின் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதாகும். பொது வெளி என்பதும் அரசியல் என்பதும் இன்னமும் ஏராளமான பெண்களுக்கு எட்டாத ஒன்றாகத்தான் இருக்கிறது.
கிளாரா ஜெட்கின்: ஜெர்மனியை சேர்ந்த மார்க்சீய சிந்தனையாளர். பெண்ணுரிமைப் போராளி. அடுப்படியிலேயே கிடக்கும் பெண்களுக்கு நாட்டில், சமூகத்தில், குடும்பத்தில் தங்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது பற்றிக் கூட தெரிவதில்லை. அவர்களுக்கு அந்த உரிமைகளை உணர்த்தி, ஒருங்கிணைத்து, போராட வேண்டுமென வலியுறுத்தி போராடியவர். இந்த தினத்திற்கு அடித்தளமிட்டவர்.
அலெக்சான்ட்ரா கொலந்தாய்: மாஸ்கோ நகரில் ஏராளமான தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்திய பிரபல பெண் தொழிற்சங்கத் தலைவர். பெண்களுக்கென முதல் முதலில் ஷ்ழநுசூடீகூனுநுடு 1919 என்ற ஒரு தனி துறையை உருவாக்கி என்ற சோவியத் யூனியனில் அதன் தலைவராக செயல்பட்டவர். “நமது முன்னேற்றம் நமது கைகளில்” என்று கூறி பெண்களை ஒன்றிணைத்தவர்.– இந்த தினத்திற்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர்.
ரேடியம் பெண்கள்: அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் கைக்கடிகாரங்களுக்கு டயலில் ரேடியம் பூசுகின்ற வேலையை இளம் பெண்கள் செய்து வந்தனர். சில ஆண்டுகளில் அவர்களின் தாடை, பற்கள் உடைந்து சிலர் இறந்தும் போனார்கள். அவர்களுக்கு புற்றுநோய் என்று தெரிந்தும் நிர்வாகம் பொறுப்பேற்க மறுத்தது. அவர்களின் வழக்கை எடுக்க வக்கீல்கள் தயாராக இல்லை. 1927-ல் றேமன் பெரி என்ற இளம் வக்கீல் இந்த வழக்கை எடுத்தார். பணம் கொடுத்து சமாளிக்க நிர்வாகம் முயன்று தோற்றது. இறுதியில், இந்த வழக்கின் தீர்ப்பில், பணியாளர்களின் உடல்நலம் குறித்த பொறுப்பை நிர்வாகம் ஏற்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கின் பின்னர் அமெரிக்க தொழிலாளர் சட்டம் திருத்தப்பட்டது. உழைக்கும் மக்களுக்கு, அவர்களின் வேலைக்கேற்ப, முகக் கவசம் கையுறைகள் போன்ற பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டுமென சட்டம் இயற்றப்பட்டது.
ஜெயாபென் தேசாய்: லண்டனில் க்ரான்விக் என்ற போட்டோ பிலிம் ஆலையில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் சர்வதேச தொழிற்சங்க வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற பெண்மணி. ஆசிய நாடுகளில் இருந்து குடி பெயர்ந்த தொழிலாளர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்டித்து மாபெரும் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திய பெண். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உரிமைகள் உண்டு , அவர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென போராடிய இவர் தனது நிறுவன மேலாளர் மால்கம் அல்தேனை நோக்கி கூறிய வார்த்தைகள் மறக்க இயலாதவை. “நீங்கள் நடத்துவது ஒரு தொழிற்சாலை அல்ல. மிருகக் காட்சி சாலை. அதில் நிறைய வகை மிருகங்கள் உண்டு. குரங்குகள் உங்கள் இசைக்கு ஏற்ப நடனமாடலாம். ஆனால், சிங்கங்கள் உங்கள் தலைகளைக் கடித்துக் குதறும். நாங்கள் குரங்குகள் அல்ல, சிங்கங்கள்” என கர்ஜித்தார் (1976). பிரிட்டிஷ் தொழிற்சங்க வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெயாபென்.
சொஜெர்னர் ட்ரூத்:மேறில்லாவை சேர்ந்த இவர் பெண் உரிமைகளுக்கான முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பெண்கள் தங்கள் உரிமைகளை உணர வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்திய கறுப்பினப் பெண். அடிமைத்தனம் ஒழிய உரக்க குரலெழுப்பியவர். ஆனால் இன்றும் நிற அடிப்படையில் பாகுபாடு தொடர்கிறது.
இந்தியாவில்…
இந்தியாவில், இன்றைய தினத்தில் நினைவில் கொள்ளத்தக்க பெண்கள் நிறைய பேர் உள்ளனர். விடுதலைப் போராட்டத்தில் மட்டுமின்றி, உழைக்கும் மக்களை, பெண்களை ஒன்று திரட்டிய வீரம் மிகுந்த பெண்கள் இடதுசாரி இயக்க தலைவர்களாகவும் செயல்பட்டவர்கள் . மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கோதாவரி பருலேகர் ஆதிவாசி மக்களின் நில உரிமைகளுக்கு குரல் கொடுத்தவர். அதே மாநிலத்தைச் சேர்ந்த விமல் ரணதிவே உழைக்கும் பெண்களின் குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர். அவர்களை ஒன்றிணைத்து அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம். தெலுங்கானா நிலப் போராட்டத்தில், பெண்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்த மொட்டூரி உதயம், சஸ்வராஜ்யம், மேற்கு வங்கப் போராளிகள் கல்பனா தத், பினா தாஸ், மற்றும் பலர். கேரளத்தில் கயிறு திரிக்கும் பெண்களை ஒன்றிணைத்து போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட சுசீலா கோபாலன், அ.இ.ஜ.மாதர் சங்கத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். கேப்டன் லட்சுமி நேதாஜியின் படைத்தலைவராக மட்டுமின்றி, கான்பூர் நகரத் தொழிலாளர்களை ஒன்றிணைத்து பல போராட்டங்கள் நடத்தியவர். .
தமிழகத்தில், நினைவில் நிறுத்தி போற்றப்பட வேண்டிய பெண் போராளிகளின் நீண்ட பட்டியலில் மிக முக்கியமான சிலரை குறிப்பிடலாம்: விடுதலை போராட்ட வீராங்கனையும் ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜானகி அம்மா மாதர் இயக்கத்தில் மட்டுமின்றி பஞ்சாலை மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் குத்தகை விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களில் தலைமைப் பங்கு ஆற்றியவர். திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திய பாப்பா உமாநாத், அத்தை அம்மாள், இந்த தினத்தில் நினைவு கூரத்தக்கவர்கள். கூட்டம் போட, பேச அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில், பொன்மலை ரயில்வே காலனி வீடுகளின் முன்பு வாசலில் கோலங்கள் மூலம் போராட்டச் செய்திகளைச் சொல்லி மக்களை ஒன்று திரட்டிய பெருமை பொன்மலை பாப்பா உமாநாத்திற்குச் சேரும். இந்தியத் தொழிற்சங்க மையத்தின் தமிழக தலைவர்களில் ஒருவராகவும் அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் ஜனநாயக மாதர் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் மைதிலி சிவராமன் புதிய தடம் பதித்த போராளி. திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராடிய ஆக்னஸ் மேரி, மதுரையில் குடிநீருக்காகப் போராடியதற்காக கொல்லப்பட்ட லீலாவதி என இந்த தினத்தில் நினைவுகூர ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள். வரலாற்றில் பதிவு செய்யப்படாத முகம் தெரியாத வீரம் செறிந்த ஏராளமான போராளிகளையும் இத்தருணத்தில் நாம் நினைவு கூர்வோம்.
சர்வதேச மகளிர் தினம் ஒரு சடங்கு அல்ல. இனிப்புகள் வழங்கி பெண் விடுதலை பற்றி பேசிவிட்டு பின் மறந்து விடும் தினம் அல்ல. பெண்கள், பெண்களாக, உழைப்பவர்களாக, ஒரு நாட்டின் குடிமக்களாக, முக்கியப் பங்கை ஆற்றுவதை உணர்த்த வேண்டிய நாள். வீட்டில் யார் என்ற கேள்விக்கு கதவைக் கூடத் திறக்காமல், யாரும் இல்லை என்று தனக்கென ஒரு அடையாளம் இருப்பதைக் கூட அறியாத நிலையில் இருந்த பெண்கள் இன்று நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை மறுக்க இயலாது. இருப்பினும் நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, நமக்கு முன்னோடிகளாக திகழ்ந்த பெண்களை இந்த தினத்தில் நினைவு கூர்வதே மகளிர் தினத்தை நன்கு அனுசரிப்பதாகும்.
( [email protected])

Spread the love