June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைவில் நின்றவை..

எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் ரசித்த அனுபவங்கள்.. நகைச்சுவைத் துணுக்குகள் (சில நான் கூறியவை, வேறு சில மற்றவர் கூறக் கேட்டவை) அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பி இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.

# நங்கநல்லூரில் நான் இருந்தபோது எனக்குப் பழக்கமானதொரு சாலையோர டெய்லர் இருந்தார். பெயர் துரை. பெயர்தான் துரை. வறுமைப்பிடியில் உள்ளவர்தான். பழைய புடவை, பிளவுஸ், காற்சட்டை, தலையணை உறை போன்றவற்றை இவரிடம் கொணர்ந்து தைத்து வாங்கிப் போவார்கள். மழை பெய்தால் தையல் மெஷினையும் துணிகளையும் ஒரு தார்ப்பாலின் போட்டு மூடிவிட்டு, தான் நனையாமல் இருக்க அருகில் உள்ள வீட்டிற்கு ஓடுவார். பின்னர் கிடைத்த காசில் மிச்சம் பிடித்து எப்படியோ பாதையோரத்தில் ஒரு பெட்டிக் கடை அமைத்துக் கொண்டார். இனி மழை பெய்தால் நனைய வேண்டாம், ஒதுங்க ஒரு இடம் இருக்கிறது என்பதை நினைத்து அவருக்கு ஒரே சந்தோஷம். மும்பயில் 27 மாடிக் கட்டடம் ஒன்றை எழுப்பி அதில் குடிபுகுந்த முகேஷ் அம்பானி கூட அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டார்.

எளிய மனிதர்கள் திருப்திப்பட அவர்களுக்கு அதிக செல்வம் தேவையில்லை.. கொஞ்சம் போதும் .. சரிதானே..?

# நாடக வசனம், திரைவசனம் ஆகியவற்றை எழுதிய பிரபல நாடகாசிரியர் கிரேசி மோகனிடம் ஒருவர் பழைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை காணாமல் போனது குறித்து ஒருவர் வருத்தப்பட்டார். அவரிடம் “இதற்காக ரொம்ப வருத்தப்படாதீங்க சார்.. இப்பவும் கூட்டுக் குடும்பம் ஒண்ணும் காணாம போயிடலை.. கணவனும், மனைவியும் ஒரே வீட்டிலே சண்டை போடாம இருந்தாங்கன்னா அது கூட்டுக் குடும்பம்தான்” என்றார் மோகன்!  

# 1970-களில் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த தனியார் கல்லூரிகளில் மாதச்சம்பளத்தை சரிவரத் தராத பல கல்லூரிகள் உண்டு. அப்போதெல்லாம் சுயநிதிக் கல்லூரிகள், பள்ளிகள் கிடையாது. அரசு மானியம் பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என்றும் மானியம் பெறும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் என்றும் அழைக்கப்பட்டன. விடைத்தாள்களை வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்த பல்கலைக்கழகம், அதில் ஊழல் நடப்பதைத் தடுப்பதற்காக Central Valuation என்ற ஒரு மாற்று ஏற்பாட்டைக் கொணர்ந்தது. ஓரிடத்தை ஏற்பாடு செய்து மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்த எங்களை அங்கு வரச் சொன்னது. அந்த மையத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக் சொள்ளும் விரிவுரையாளர்கள் (கவனியுங்கள்.. ஆண்களும் கூட) “உங்களுக்கு எவ்வளவு மாசம்.. உங்களுக்கு எவ்வளவு மாசம்?” என்று கேட்டுக் கொள்வார்கள். “உங்களுக்கு எவ்வளவு மாசம் என்று கேட்டால் உங்களுக்கு எவ்வளவு மாச சம்பள பாக்கி?” என்று அர்த்தம்! இதை அன்று குமுதம் இதழ் எடுத்துப் போட்டு கிண்டல் செய்தது!

# இம்மாதிரி நிலையில் உள்ள ஒரு விரிவுரைரையாளர் வேறு வேலைக்குப் போய்விடலாம் என்று ஒரு கம்பெனிக்கு விண்ணப்பித்தார். அவருக்கு ஒரு படிவம் கொடுத்து நிரப்பச் சொன்னார்கள். பெயர், படித்த படிப்பு எல்லாம் நிரப்பிய பிறகு, Salary Wanted என்று ஒரு பத்தி இருந்தது. அதற்கு “இங்கே எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று அர்த்தம். ஆனால் நம்ம ஆளு இதை வேறு விதமாகப் புரிந்து கொண்டார். சம்பளம் வேணுமா, வேண்டாமா என்று கேட்கிறார்கள் போலிருக்கிறது.. என்று புரிந்து கொண்டார்! “இப்ப வேலை பார்க்கிற இடத்திலேதான் சம்பளம் வரலை.. போற இடத்திலும் அந்தக் கொடுமையா.. இதை அனுமதிக்கவே முடியாது” என்று முடிவு செய்தவர் அந்தப் பத்தியில் சம்பளம் கண்டிப்பாக வேண்டும் என்ற பொருள் வர Yes என்று நிரப்பிக் கொடுத்தார்!  

# மாதச் சம்பளம் சரியாக வரவில்லை.. பார்க்கிற அந்த வேலைக்கும் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் ஒரு கட்டத்தில் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல் என்று போராட ஆரம்பித்தோம்.

அதுவரை எங்கள் உதவிக்கு வராத ஊடகங்கள் “ஆசிரியர்கள் தெருவுக்கு வரலாமா?” என்று எழுதி ஆசிரியர்கள் மீது குற்றம் கூறின.

அப்போது எங்கள் மூட்டா சங்கத்திற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவரான கவிஞர் மீரா “நாங்கள் ஏற்கனவே தெருவில்தான் இருக்கிறோம். எங்களுக்குரிய சம்பளத்தைக் கொடுத்து எங்களை வகுப்பறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்” என்று அவற்றுக்கு பதிலடி கொடுத்தார்!

-பேரா. கே.ராஜு

முன்னாள் தலைவர், மூட்டா

ஆசிரியர், புதிய ஆசிரியன்

Spread the love