September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைவில் நின்றவை..(9)

# கவிஞர் பாரதிதாசன் “குயில்” என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார்.

வேறொரு ஊருக்குப் போயிருந்தபோது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் “இங்கெல்லாம் குயில் கிடைக்குதா?” என்று கேட்டார்.

“குயில் எங்கே கிடைக்குது? காடை, கவுதாரிதான் கிடைக்குது” என்றார் ஒரு நண்பர்!

நொந்தே போனார் பாவேந்தர்!

# புதிய ஆசிரியன் இதழ் தொடங்கிய புதிதில் நிதிப் பிரச்சினை காரணமாக அடிக்கடி நின்று போகும். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்துப் போனாலும் தபால் அலுவலகத்தில் வாங்கிக் கொண்டு அனுப்பி வைப்பார்கள்.

அடிக்கடி நின்று போனாலும் ஆயுள் சந்தா வாங்குவதில் குறை வைக்க மாட்டோம், வாங்குவோம். ஒரு கூட்டத்தில் “ஆயுள் சந்தா வாங்கறீங்களே.. பத்திரிகை ஆயுள் முழுக்க வருமா? ”  என்று ஒருவர் கேட்டார்.

“வரும்.. உங்க ஆயுள் வரை, அல்லது பத்திரிகையின் ஆயுள் வரை..”  என்று பதில் அளித்தேன்! “Which will be earlier I don’t know” என்று இணைப்பாக ஒரு பதில் சேர்த்தேன்!

இப்போதும் நிதிப் பிரச்சினை தொடர்கிறது. சில நண்பர்கள் வளர்ச்சி நிதி என்ற பெயரில் நன்கொடை கொடுத்து உதவுவதால், சமாளித்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் தபால் அலுவலகத்தில் நிலைமை மாறிவிட்டது. அவர்கள் கொடுத்திருக்கிற தேதியில் கொண்டுபோகவில்லையெனில், இதழ்களை வாங்க மறுக்கிறார்கள். எனவே எப்பாடுபட்டாவது இதழ்களை குறிப்பிட்ட தேதியில் கொண்டுபோக வேண்டியிருக்கிறது.

# சிரமப்பட்டு பத்திரிகை கொண்டு வந்தாலும் அதெல்லாம் வாசகர்களுக்குத் தெரியாது. “புதிய ஆசிரியன் படிக்கிறீங்களா?” என்று கேட்டால் வீட்டிலே படிக்கறாங்க என்று பதில் சொல்வோர் உண்டு.

சந்தா முடிந்ததும் பெரும்பாலோர் அவர்களாகவே புதுப்பிக்க மாட்டார்கள். யாராவது போய்க் கேட்டால்தான் புதுப்பிப்பார்கள்.

“நீங்கள் சந்தா கேட்டால் தருவார்கள்.. கேட்டால்தான் தருவார்கள்” என்று கூட்டங்களில் ஆர்வலர்களிடம் சொல்வேன்.

இதழ் தபாலில் வரவில்லையெனில் அதை நிர்வாக ஆசிரியர் கவனத்திற்குக் கொண்டுவருவதிலும் இன்னும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. எப்படியோ, 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதழ் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் எங்களில் பலருக்கு மகிழ்ச்சிதான்.

# நான் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தாம்பரம் – கடற்கரை ரயில் நிலையங்களில் உள்ள புத்தகக் கடைகளில் இதழை உதிரி விற்பனைக்குக் கொடுக்க ஆரம்பித்தோம். “புதிய ஆசிரியன் வாங்குங்கள்” என்று தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய போஸ்டரையும் ஒட்டுவோம்.

என்னுடைய மகளுக்கு ஒரு சந்தேகம். “உங்க பத்திரிகையில  பரபரப்பா ஒண்ணும் இல்லையே… அப்புறம் எப்படிப்பா வாங்குவாங்க? ” என்று கேட்டார்.

அதற்கு தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா ஆச்சி சொன்ன வசனத்தை எடுத்துவிடுவேன். “அவுக ஆட்டத்தைப் பார்க்க 1000 பேர் கூடினா என் ஆட்டத்தைப் பார்க்க 100 பேர் வராம வராமயா போயிடுவாக? ” என்பார் மனோரமா. அது மாதிரி ஆனந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளை 1000 பேர் வாங்கினா எங்க பத்திரிகையை 10 பேர் வாங்காமயா போயிடுவாங்க என்பேன்.

உண்மைதான். புதிய ஆசிரியன் பத்திரிகை வாங்கவும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சில பேர் இருந்தார்கள்.

ஸ்வச் பாரத் திட்டத்தில் போஸ்டர் ஒட்டக் கூடாது என்று தடை கொண்டு வந்தார்கள். கடைகளுக்கு வாடகையை உயர்த்தியதால் பலர் கடையை தற்காலிகமாக மூடினார்கள். இதழைக் கடைகளில் கொண்டுபோய்க் கொடுப்பது அப்போது நின்று போனது.  

#  நம் நாட்டில் ரயில்கள் தாமதமாக வருவதும் சமயங்களில் மிகத் தாமதமாக வருவதும் நமக்குத் தெரியும். பயணிகள் கவலைப்பட மாட்டார்கள். போர்வையை விரித்து பிளாட்பாரத்தில் படுத்துவிடுவார்கள்.

“ஜப்பானில் சரியான நேரத்திற்கு ரயில் வந்துவிடும். ஒரு ஸ்டேஷனுக்கு 5.43-க்கு வரணும் என்றால் சரியாக 5.43-க்கு வந்துவிடும். கடிகாரம் பார்த்து நீங்கள் ரயிலில் இருந்து கீழே இறங்கலாம். இங்கே கடிகாரம் பார்த்து இறங்கினால் என்ன ஆகும்? 5.43-க்கு திண்டுக்கல் போக வேண்டும். அந்த நேரத்திற்கு ரயில் விழுப்புரத்தில் இருக்கும். அதனால் அதெல்லாம் இந்தியாவுக்கு சரிப்பட்டு வராது” என்று ஒரு பயணி விளக்கம் கொடுத்தார்!

(ஆசிரியர் கேடயம் செப்டம்பர் இதழில் வெளியானது)

Spread the love