June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைவில் நின்றவை..(5)

கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா

# மூட்டா மாநாட்டில் பேச ஒரு தொழிற்சங்கத் தலைவரை அழைத்திருந்தோம்.

மதியம் 12 மணிக்குப் பேசத் தொடங்கினார். “எவ்வளவு நேரம் பேசலாம் என்று உங்கள் தலைவரிடம் கேட்டேன். நீங்க எவ்வளவு நேரம் வேணாலும் பேசுங்க.. ஆனா நாங்க 12-30 மணிக்கு சாப்பிடப் போயிடுவோம்” என்று பேச்சைத் தொடங்கினார் அந்தப் பேச்சாளர்!

# 1970-களில் அரசு மானியம் பெறும் தனியார் கல்லூரிகளில் மாதாமாதம் சம்பளம், பணிப்பாதுகாப்பு. மருத்துவ விடுப்பு, மகளிருக்கு மகப்பேறு விடுப்பு இல்லாத நிலை இருந்ததைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் “அவசியம் பிள்ளை பெத்துக்கணும்னா கோடை விடுமுறையில பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சுற்றறிக்கை அனுப்பியதாக

நண்பர்கள் சொல்வார்கள்..!

அக்கல்லூரியில் பணி புரிந்துவிட்டு பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியில் பணியாற்ற வந்த ஒரு முதல்வர் 1980-களில் அந்த விதியை பள்ளத்தூரிலும் கொணர்ந்தார்!  

# 1975 ஜுன் 25 நள்ளிரவில் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்தார். 1976- பிப்ரவரியில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி மதுரை வந்த போது அவருக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில்  புயல் நிவாரண நிதி அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஆசிரியர்களது கோரிக்கைகளை விளக்கி மூட்டா பொதுச்செயலாளர் பி.கே.ராஜன் பேசினார். ஆளுநர் ஆசிரியர்களுக்கு சாதகமாக கோரிக்கைகள் பற்றி ஏதாவது பேசுவார் என்று ஆசிரியர்கள் காத்திருந்தனர். ஆளுநர் இரண்டே வரிகள்தான் பேசினார். “God is in Heaven.. All is well with the world” என்பதுதான்! ஆசிரியர்களது ஏமாற்றம் ஒரு பலத்த கேலிச் சிரிப்பாக வெளிப்பட்டது! ஆளுநரும் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

# தூத்துக்குடி அன்னம்மாள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரிந்து வந்த ஸ்டெல்லா ஜெயராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டதே ஒரு வினோதமான வரலாறு. அக்கல்லூரி தாளாளர் 5-2.1977 அன்று ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். அங்கு நடந்த விவாதத்தில் வெறுத்துப்போன ஸ்டெல்லா ஜெயராஜ் “இம்மாதிரி கல்லூரியில்வேலை பார்ப்பதைவிட வேலையை விட்டுப் போய்விடலாம்” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது “வாய்மொழி ராஜிநாமா” ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறி அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்! இத்தனைக்கும் ஸ்டெல்லா ஜெயராஜ் அக்கல்லூரியில் 14 ஆண்டுகள் பணி புரிந்தவர்.

# 1970-களில் போனஸ் என்பது “கொடுபடா ஊதியம்” என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு அளித்தது. ஊதியத்தைக் கொடுப்பதுபோல போனசையும் கொடுக்க வேண்டும் என்பது அதன் பொருள். அந்தக் கட்டத்தில் பல கல்லூரிகளில் மாத ஊதியம் சரிவர வராத நிலை இருந்தது. “ எங்களுக்கு ஊதியமே கொடுபடாத ஊதியம்தான்… போனசைப் பற்றி நாங்க என்னத்தைப் பேச” என்று கிண்டல் செய்து கொள்வோம்.

# கொடி மரத்தின் உயரத்தை அளக்க அதில் சிரமப்பட்டு ஏறிக் கொண்டிருந்தார் ஒரு அரசியல் தொண்டர்.

“கம்பத்தை நடும் முன்னேயே கம்பத்தைப் படுக்க வச்சு அளந்திருக்கலாமே?” என்று அவரிடம் ஒருவர் கேட்டார்.

“நீங்க நீளத்தைச் சொல்றீங்க.. நான் உயரத்தை அளக்கிறேன். புரியாம பேசாதீங்க..” என்று அவரிடம் வாக்குவாதம் செய்தார் தொண்டர்.

கட்சித் தலைவரிடம் “கட்சியிலே இப்படிப்பட்ட தொண்டர்களையெல்லாம் வச்சிருக்கீங்களே..?” என்று கேட்ட போது “இந்த மாதிரித் தொண்டர்கள் இருக்கும்வரைதான் நான் தலைவராக இருக்க முடியும்” என்று விளக்கம் சொன்னார் தலைவர்!

# ஹாலில் இருந்த கணவர் சமையல் அறையில் இருந்த மனைவியை செல்பேசியில் அழைத்தார். “நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்..” என்று பதில் வந்தது!

(நினைவுகள் தொடரும்)

Spread the love