September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைவில் நின்றவை..(4)

கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா

# What is evaporation? .. என்பது கேள்வி. எவாபரேஷன் கடினமான வார்த்தை. அதோட ஸ்பெல்லிங்க சரியா படிச்சுட்டுப் போங்க என்றார் ஆசிரியர்.

“அதான் Question paper-லேயே இருக்கும்ல மிஸ்?” என்று கேட்டான் ஒரு மாணவன்!

# நேத்து தலைவலின்னு ஒரு நாள் லீவு கேட்டே.. இன்னிக்கு கால்வலிக்கு ரெண்டு நாள் லீவு கேக்கறே..

தலை ஒண்ணுதான், கால் ரெண்டு இருக்கும்ல சார்?

“பல்வலி வராம பார்த்துக்கோ ” என்றார் ஆசிரியர்!  

# கவலைப்படாதீங்க நான் இருக்கேன் என்பார் டாக்டர்.

“நீங்க இருப்பீங்க டாக்டர்.. நான் இருப்பேனா? ” என்று கேட்பார் நடிகர் விவேக் ஒரு படத்தில்.

# இந்த வீட்டில வேலை வேணாண்ணே, உங்களுக்கு கப்பல்லே நான் வேலை வாங்கித் தரேன்னு செந்தில் சொன்னதும் அந்த வீட்டில் வேலை கொடுத்தவர்களை கண்டபடி ஏசிவிட்டு வேலையை விட்டுவிட்டு வந்துவிடுவார் கவுண்டமணி.

பின்னர் “கப்பல்லே வேலை இருக்குன்னு சொன்னியே, அது என்ன வேலை ?” என்று செநிதிலிடம் கவுண்டமணி கேட்பார்.

“அது ஒண்ணுமில்லண்ணே… நடுக்கடல்லே கப்பல் நின்னு போச்சுன்னா, இறங்கித் தள்ளணும்ணே.. ” என்று கூலாகச் சொல்வார் செந்தில்!

பிறகு, தான் வேலை பார்த்த வீட்டுக்கே போய் கவுண்டமணி மீண்டும் வேலை கேட்டுக் கெஞ்சுவது தனிக் கதை.. 

# சபாபதி என்ற பழைய சினிமாவில் ஒரு காட்சி

வகுப்பில் ரயிலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொல்லியிருப்பார்கள்.

ஒரு பக்கம் பூராவும் “குப்..குப்..குப்.. தடக்.. தடக்.. குப்..குப்..குப்”

என்று எழுதி வைத்திருப்பார் நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்!

குப்.. குப்.. குப் சரி… அதென்ன நடுவிலே தடக்.. தடக் என்று கேட்பார் உடன் நடித்த காளி என்.ரத்தினம்

“நடுவில பாலம் வரும்ல? அதுதான் தடக் தடக்” என்பார் ராமச்சந்திரன்!

# டெங் சியோ பிங் ஒரு முறை கூறியது ..

“முதலாளித்துவத்தை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் ஒரு உண்மையை நீங்கள் மறந்துவிடக் கூடாது. சோசலிசத்தின் கீழ் ஏழைகளாக இருக்கவும் நாங்கள் விரும்பவில்லை.

பலரின் சிந்தனைகள் இறுகிப் போய்க் கிடக்கின்றன. கட்சியின் ஊழியர்களும் தலைவர்களும் தங்களது மனங்களைப் பூட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. பிறர் சொல்வதைத் திறந்த மனதுடன் கேட்க வேண்டும்” என்றார். 

மாவோவின் கொள்கைகளைக் கைவிட்டு, பொருளாதாரத்தில் தாராளமயப் பாதையைத் தேர்ந்தெடுத்தார் டெங் சியோ பிங். சீனாவின் மனித வளத்தைப் பயன்படுத்தி நாட்டைத் தொழில்மயமாக்கினார்.  

மக்கள் போராட்டத்தை ஒடுக்கினார் என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு.

யாராக இருந்தாலும் அவரிடம் ஏற்கக் கூடிய அம்சங்கள் இருந்தால் அவற்றை ஏற்பது, ஏற்க முடியாதவை இருந்தால் அவற்றை நிராகரிப்பது என்ற படிப்பினை முக்கியமானது என்று  கருதுகிறேன்.

# இரவு நேரத்தில் முன்கூட்டியே சொல்லாமல் திடீரென ஒரு வீட்டிற்கு விருந்தாளி வந்தார்.

இரண்டு தோசைகளுக்குத்தான் மாவு இருந்தது.

என்ன செய்வது என்று கவலையுடன் கணவரிடம் கேட்டார் மனைவி.

நீ ஒண்ணும் கவலைப்படாதே.. நீ தோசையைக் கொண்டுவா, நான்  பார்த்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

இருவருக்கும் ஆளுக்கு ஒரு தோசை பரிமாறப்பட்டது.

அதைச் சாப்பிட்டு எழுந்த கணவர் “ராத்திரி நேரத்தில ஒரு தோசைக்கு மேலே மனுஷன் சாப்பிடுவானா.. சாருக்கு வேணும்னா இன்னொரு தோசை கொண்டு வா” என்று மனைவியிடம் சத்தமாகக் கூறிவிட்டு கைகழுவப் போனார்.

அதற்கு மேல் தட்டின் எதிரில் உட்கார்ந்திருக்க வந்தவருக்கு பைத்தியமா என்ன?

(இப்போது மாதிரி உணவை உடனே வெளியிலிருந்து வரவரழைக்கும் Swiggy, Zomato வசதியோ அருகில் ஓட்டலோ இல்லாத காலம்)

# முன்னர் ஒரு சில கூட்டங்களில் நான் பேசியது :

“விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்” என்று ஒரு பாடலில் எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

ராத்திரி முழுக்க கண்முழிச்சு சீட்டு வெளையாடறவங்கள்லாம் விழித்துக் கொண்டோர் பட்டியல்ல வரமாட்டாங்க.. விழிப்புணவர்வு உள்ள மக்களைத்தான் விழித்துக் கொண்டோர்னு குறிப்பிட்டார் பட்டுக்கோட்டை என்றேன்.

# விருதுநகர் கல்லூரியில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மாணவர்கள் என்.சி.சி. காம்ப் போய்விட்டு வந்தார்கள். அங்கே ஓய்வு நேரத்தில் நாடகம் போட்டதாக அவர்கள் கூறியதும் வகுப்பில் அதை நடித்துக் காட்டச் சொன்னேன்.

என்.சி.சி.-யில் கொடுக்கும் பாண்ட் இடுப்பில் நிற்காமல் தொளதொளவென்று இருக்கும். அதை ஒரு மாதிரியாக இறுக்கிக் கட்டிக் கொண்டு சமாளிப்பார்கள் மாணவர்கள்.

நாடகத்தில் அதை இப்படி கிண்டல் அடித்திருக்கிறார்கள்…

“இந்த பாண்ட் இருக்கே.. எங்க அப்பா போட்டது இந்த பாண்ட்தான்.. அதுக்கு முன்னால எங்க தாத்தா போட்டதும் இந்தப் பாண்ட்தான்.. இதைத் தோய்க்கவே வேண்டாம்.. அப்படியே போட்டுக்கலாம்”  என்று வசனம் எழுதி நடித்திருந்தார்கள்!

(முன்னர் ஹார்லிக்ஸ் விளம்பரங்களில் பவுடரை கரைச்சுச் சாப்பிட வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் என்று வரும். அதை மாடலாக வைத்தே மாணவர்கள் வசனம் எழுதியிருந்தார்கள்)

(நினைவுகள் தொடரும்)

(TNPTF ஆசிரியர் கேடயம் ஏப்ரல் மாத இதழில் நான் எழுதிய கட்டுரை)

Spread the love