September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைவில் நின்றவை..(3)

கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா

   # உலகை வேகமாகச் சுற்றி வந்தவர் யார்.. என்று சில வருடங்களுக்கு முன் நான் எடுத்த ஒரு அரசியல் வகுப்பில் கேட்டேன்.

எம்பெருமான் முருகப் பெருமான்” என்றார் ஒருவர்.

இல்லையில்லை.. “விநாயகப் பெருமான்” என்றார் இன்னொருவர்,

இதெல்லாம் சினிமா வசனத்தில் வந்திருக்கலாம். இன்று இதற்கு சரியான பதில் “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான்” என்றேன் நான்!

    # மூட்டா நடத்திய ஒரு பயிற்சி முகாம் வகுப்பில் உலகத்தில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கூறிவிட்டு அவர்களில் யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதை இறுதியில் குறிப்பிட்டேன். 

First, He who knows not and knows not that he knows not .. He is a fool. Just ignore him.

Second, He who knows not but knows that he knows not .. He is ignorant. Teach him.

Third, He who knows but knows not  that he knows  .. He lacks confidence. Inspire him and give him confidence.

Fourth, He who knows and knows that he knows .. He is a Leader. Follow him.

    # ஒரு பள்ளி வகுப்பில் ஆசிரியரிடம் ஒரு மாணவன் நீங்க 100 தாய்க்குச் சமம் சார் என்றான்.

ஆசிரியருக்கு ஏக மகிழ்ச்சி.

எப்படிப்பா சொல்றே என்று அவனிடம் கேட்டார்.

ஒரு தாய் ஒரு நேரத்தில ஒரு குழந்தையைத்தான் தூங்கப் பண்ணுவாங்க.. ஆனா நீங்க ஒரே நேரத்தில 100 பேரைத் தூங்க வச்சிருவீங்களே சார் என்றான் மாணவன்!

     # சில வருடங்களுக்கு முன் எடுத்த ஒரு இன்னொரு அரசியல் வகுப்பில், வகுப்பு முடிந்ததும் ஒரு தோழர் வந்து “உங்க வகுப்பு சூப்பர் தோழர்” என்ற பாராட்டினார்.

நான் அகமகிழ்ந்து போவதற்குள் அவரே “ஆனா நான் தூங்கிட்டேன்..” என்றார்..

“அப்புறம் சூப்பர்னு எப்படி தெரிஞ்சுது?” என்று கேட்டேன்.

“அப்பப்ப கொஞ்சம் காதிலே விழுந்திச்சுல்ல?” என்றார் அந்தத் தோழர்!

    # வகுப்பில் தூங்கிக் கொண்டிருந்தான் ஒரு மாணவன்.

“ஏய்.. அவனை எழுப்பிவிடு” என்று சத்தமிட்ட ஆசிரியர் “அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று பிற மாணவர்களைக் கேட்டார்.

“இப்ப நடத்தின பாடத்தையே மறுபடி நடத்துங்க சார்.. வகுப்பிலே தூங்கினாலும் தப்பிக்க முடியாதுன்னு அவன் தெரிஞ்சுக்கட்டும்” என்றான் ஒரு மாணவன்!

     # தமிழாசிரியர் ஒருவர் வறண்ட பாலைவனம் போன்ற ஒரு நிலப்பகுதியில் நடந்து சென்றபோது அங்கிருந்த ஒரு பாழுங்கிணற்றில் விழுந்துவிட்டார். கூப்பிடு தூரத்தில் யாரும் இல்லை. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் கிணற்றை எட்டிப் பார்த்தபோது இவரைப் பார்த்துவிட்டான். காப்பாற்ற எண்ணி நான் போய் வாரேன்.. ஒரு கயத்தை எடுக்க என்றான்.

தமிழாசிரியர் அல்லவா? பிழைதிருத்தும் குணம் அந்த சிக்கலான நேரத்திலும் அவரை விடவில்லை. 

“கயத்தைன்னு சொல்லக் கூடாது.. கயிற்றைன்னு சொல்லணும்.

நான் போய் ஒரு கயிற்றை எடுத்து வருகிறேன்”னு சொல்லணும் என்ற அவனுக்கு சரியான தமிழில் எப்படிப் பேசணும் என்பதை கற்றுக் கொடுத்தார் ஆசிரியர்.

“சரி சாமி.. நான் தமிழை ஒயுங்காக் கத்துட்டு அப்பாலே வாரேன்”  என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் அந்தச் சிறுவன்!

     # முயல்-ஆமை கதையை நிர்வாகவியல் வகுப்பில் சற்று  மாற்றி சொல்லித் தருவார்கள்.  

எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் வழக்கமாகச் சொல்லும் கதையை நான் சொல்லாமல் விடுகிறேன். கதை முடியும் இடத்திலிருந்து ஆரம்பிக்கிறேன்.

ஓட்டப் பந்தயத்தில் தோற்றதும் முயலுக்கு அதை அப்படியே விட மனதில்லை. “நான்தானே வேகமாக ஓடுவேன்.. பந்தயத்தில் ஆமை எப்படி என்னை ஜெயிக்கலாம்” என்று யோசித்தது.

ஆமையை மீண்டும் போட்டிக்கு அழைத்தது. இன்னொரு முறை ஓடிப் பார்ப்பமா என்று கூப்பிட்டது. ஆமையும் ஒத்துக் கொண்டது.

இந்த முறை முயல் கவனமாக ஓடி பந்தயத்தில் ஜெயித்தது.

கதை இத்துடன் முடியவில்லை.

இப்ப ஆமை அழைத்தது. ஆனால் ஒரு நிபந்தனை விதித்தது. நான் சொல்லும் வழியில்தான் பந்தயம் நடக்கும் என்றது.

ஓகே என்றது முயல்.

இரண்டும் ஓட ஆரம்பித்தன. வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. முயலுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நின்றுவிட்டது. சாவகாசமாக நடந்து வந்த ஆமை முயலை வெற்றிகரமாகப் பார்த்துக் கொண்டே ஆற்றில் நீந்தி கரையைக் கடந்து போட்டியில் வென்று விட்டது.

கதை இன்னும் முடியவில்லை.

ஆமையும் முயலும் சேர்ந்து யோசித்தன. “வேகமாக ஓடுவது முயலின் திறமை.. தண்ணீரில் நீந்த முடிவது ஆமையின் திறமை. இரண்டு திறமைகளையும் ஒருங்கிணைத்தால்..” என்று யோசித்தன.

அவை இரண்டும் எடுத்த முடிவின்படி, முதலில் ஆமை முயலின் முதுகில் ஏறிக் கொண்டது. நதிக்கரை வந்ததும் ஆமை இறங்கிக் கொண்டது. தற்போது ஆமையின் முதுகின் மேல் முயல் ஏறிக் கொண்டது. முயலைச் சுமந்த ஆமை நதியைக் கடந்தது. இரண்டும் மிகக் குறைந்த நேரத்தில் வின்னிங் போஸ்டை அடைந்தன.

இதில் ஒரு படிப்பினை இருக்கிறது. ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த அங்கு பணிபுரிபவர்கள் அனைவரின்  திறமைகளும்  வேண்டும். அவரவருக்குரிய திறமையை நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அது. 

உதாரணமாக, பேச்சுத் திறமை உள்ளவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்த வேண்டும். கணக்கில் புலி கணக்கு வழக்குகளைப் பார்க்க வேண்டும். மற்றவர்களுடன் பழகுவதில் கெட்டிக்காரர் பொருளை சந்தையில் விற்பதில் அத்திறமையைக் காட்ட வேண்டும்..

என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த மாதம் நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். 

(ஆசிரியர் கேடயம் மார்ச் இதழில் வந்த கட்டுரை) 

Spread the love