May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைவில் நின்றவை..(2)

கே.ராஜு- முன்னாள் தலைவர், மூட்டா

    # 1950-களில் நான் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒன்பதாவது வகுப்பில் திரு. பி.சி. கணேசன் என்ற ஆசிரியர் எங்களுக்கு அறிவியல் வகுப்பு எடுத்தார். பாடம் நடத்துவதோடு சில பொது விஷயங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்வார். ஒரு பாட புத்தகத்தில் செல், பாட்டரி இரண்டிற்கும் வேறுபாடு என்ன கேள்விக்கு தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. உருளை வடிவத்தில் இருந்தால் செல் என்றும் அதுவே தட்டையாக இருந்தால் பாட்டரி என்றும் இருந்தது. அதைப் பற்றி அதுவே என்ற இடத்தில் சற்று நிறுத்தி, எதுவே? … அதுவே… என்று தவறான பதிலைக் கிண்டல் செய்தது இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் இருக்கிறது.

    குவி லென்ஸ் பற்றி தேர்வில் ஒரு கேள்வி. லென்சின் ஒரு பக்கம் ஒரு பொருளும் மறுபக்கத்தில் ஒரு திரையும் வைக்கப்பட்டிருக்கின்றன. பொருள் லென்சிலிருந்து ஒரு 20 செ.மீ. தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. திரையை எந்த இடத்தில் வைத்தால் பிம்பம் திரையின் மீது விழும் என்பது கேள்வி. கேள்வித்தாளில் ஒரு அச்சுப் பிழை. திரை என்பதற்குப் பதில் குதிரை என்று அச்சாகிவிட்டது. குவி சென்சுக்கும் குதிரைக்கும் என்ன சம்பந்தம் என்று குழப்பம் அடைந்த மாணவர்கள் அந்தக் கேள்விக்கு விடை அளிக்கவில்லை. ஒரேயொரு புத்திசாலி மாணவன் அதை அச்சுப்பிழை என்று புரிந்து கொண்டு சரியான விடையைக் கணக்கிட்டு பதில் அளித்திருந்தான் என்றார் கணேசன்.

    காமெடி இனிதான் இருக்கிறது. அந்த மாணவன் தனது விடைக்குக் கீழே ஆசிரியருக்கு ஒரு பின்குறிப்பு எழுதியிருந்தான். என்ன தெரியுமா? “திரை இருக்கும் இடத்தில் குதிரை இருந்தால் குதிரையின் மீதும் பிம்பம் விழும்” என்று..!

    பின்னர் விருதுநகர் கல்லூரியில் பி.யு.சி. மாணவர்களுக்கு நான் பாடம் நடத்தியபோது இந்த நிகழ்வைக் கூறினேன். மாணவர்கள் சிரித்தார்கள். ஒரு மாணவன் “அந்த புத்திசாலி மாணவன் நீங்களா சார்?” என்று என்னைக் கிண்டல் செய்தான். “அட அது நான் இல்லைப்பா.. நான் புத்திசாலியாக இருந்தா உங்க கிட்ட வந்து மாட்டியிருப்பேனா?” என்று பதில் அளித்தேன்.

(பி,சி, கணேசன் திமுக தலைவர் அறிஞர் அண்ணாவுக்கு நெருக்கமானவர். வகுப்பில் தி.மு.க.வின் அரசியலையும் பேசுவார். பின்னர் ஒரு கட்டத்தில் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு முழுநேர அரசியலுக்கு சென்று விட்டார். அரசியலுக்கு அது நல்ல வரவாக இருந்திருக்கலாம். ஆனால் மாணவர்களுக்கு நிச்சயம் அது ஒரு இழப்புதான்).

     # ஒரு கூட்டத்தில் பேசும்போது பள்ளிப் படிப்பு சில மாணவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது என்று சொல்ல விரும்பினேன். அதற்கு முன்னாள் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பாடிய ஒரு பாடலைத் துணைக்கு அழைத்துக் கொண்டேன். படக் கதாநாயகியாக நடித்த பத்மினியை இவர் ஒரு தலையாகக் காதலிப்பார். அவரது போட்டோவைக் கையில் வைத்துக் கொண்டு “உனக்காக கண்ணே உனக்காக..” என்று பாடுவார். “துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா.. பைத்தியம் போல் பாடி ஆடி நடிக்கணுமா..” என்று காதலிக்காக என்னவெல்லாம் செய்வார் என்று பட்டியல் போடுவார்.

அந்தப் பட்டியலில் “பள்ளியில இன்னுமொரு தரம் படிக்கணுமா.. ” என்ற ஒரு வரி இருக்கும். அதாவது “காதலி கிடைப்பார் என்றால் பள்ளியில் இன்னொரு தடவை படிக்க வேண்டும் என்றாலும், படித்துத் தொலைக்கிறேன்” என்று பொருள் கூறியதும் பார்வையாளர்கள் சிரிப்பார்கள்.

    # மரத்தடியில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. ஆசிரியருக்குப் பின்னால் ஒரு கழுதை வந்து நின்றது. ஆசிரியர் அதைக் கவனிக்கவில்லை. ஒரு குறும்புக்கார மாணவன் “சார்.. உங்களைப் பார்க்க உங்க பிரண்ட் வந்திருக்கார் சார்” என்றான். திரும்பிப் பார்த்தால் கழுதை! “அது என் பிரண்ட் இல்லேப்பா.. நியூ அட்மிஷன். கூப்பிட்டு உன் பக்கத்திலே உட்கார வச்சுக்கோ” என்றார் ஆசிரியர்!

     # ஒருவருக்கு அயல்நாட்டு மோகம். நாய் வாங்குவதாக இருந்தாலும் அயல்நாட்டு நாய்தான் வாங்குவார். நல்ல விலை கொடுத்து ஒரு நாயை வாங்கி “ரிச்சர்ட்“ என்று பெயரிட்டு, கூப்பிடும்போது அதை “ரிச்சீ” என்று செல்லமாக அழைப்பார். நாய் விற்றவன் அயல்நாட்டு நாய் என்று சொல்லி ஒரு உள்நாட்டு நாயை இவரை ஏமாற்றி விற்றுவிட்டுப் போய்விட்டான்.

“அப்புறம் என்ன செஞ்சே..? ” என்று நண்பர் கேட்டார்.

“அப்புறம் என்ன செய்ய? ரிச்சீ என்ற பெயரை முனுசாமின்னு மாத்தி வச்சுட்டேன்” என்றார் நாய் அபிமானி.   

Spread the love