September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நினைக்கப்படுவோர் நிலைப்பர்

ஜனநேசன்
கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனைவி கானாமிருதம் பொழிந்தாள் : ‘என்னங்க சாப்பிடற நேரத்தில செல்லை நோண்ட ஆரம்பிச்சிட்டீங்க.. சாப்பாடு ரெடியாயிருச்சு. சாப்பிட்டதுக்கு அப்புறம் செல்லைத் தொடுங்க.’
வாழ்க்கை ஓட்டத்தில் புதிய புதிய நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு தொடர்புகொள்ள தொடர்பு எண்களைக் கைப்பேசியில் சேமிக்க முயன்றால் காலியிடம் இல்லை என்று கைபேசி எச்சரித்தது. முன்புபோல் மனதில் நிறுத்திக் கொள்ளும் திறனையும் , நாட்குறிப்பில் குறித்துக் கொள்ளும் வழக்கத்தையும் மின்சாதனங்கள் விழுங்கி மூளைச் சோம்பேறிகளாக்கி விட்டன. ‘உய்வுண்டு உடல் சோம்பினால்; உய்வில்லை மூளைச் சோம்பலுற்ற மகற்கு’ என்று புதுக்குறள் வலியுறுத்துவதை மனசு எங்கே கேட்குது. ?
குறுஞ்செய்தி மூலம் பெற்ற புதிய நண்பரின் எண்ணைப் பதியும் பொருட்டு உட்கார்ந்தேன். புதியது புகவேண்டுமெனில் பழையதைக் கழிக்கவேண்டும் .ஒரே பெயரில் உள்ள இரண்டு தொடர்பு எண்களை அழிக்க வேண்டும். இதற்குமுன், இறந்தவர்களின்எண்களை நீக்குவதே இயற்கைநியதி என்று தொடர்பாளர்களை அகரவரிசையில் நகர்த்தினேன்.
‘காஷ்யப சியாமளன்’ ஒளிர்ந்தார். அடடா, அருமையான மனுசர்; நாடகம் , கதை ,கட்டுரை, மற்றும் இயக்கப்பணிகளில் சாதித்தவர் ; தான் பிறந்த சமூகத்தின் சனாதனப் பிடிகளை உதறி கடைசிமூச்சு வரை கொள்கைவழி பிறழாது வாழ்ந்தவர். பணிஓய்வுக்குப்பின் நாக்பூரில் குடிபுக நேர்ந்தாலும் அடுத்த தலைமுறையினரிடம் இயக்க வரலாற்றைப் பகிர்ந்தவர். நாக்பூருக்கு என் போன்றவர்கள் போக நேர்ந்தபோது தமிழ்நாட்டு உணவு வகைகளைச் செய்து கணவனும், மனைவியும் அன்பொழுகப் பரிமாறியவர்கள். முதுமைத் தளர்வைப் புறந்தள்ளி எழுத்தாளர்கள் சங்கத்தின் ஒவ்வொரு மாநாட்டுக்கும் தன் மனைவியோடு வந்து பங்கேற்றவராயிற்றே..? அவரது தொடர்பு எண்ணையா நீக்குவது…? நோ..நோ!
அடுத்தவர் கழனியூரன்; ஆகா! சேக் அப்துல் காதர் என்னும் இயற்பெயரில் நெல்லைமாவட்டவீரசோழனில் ஒரு தனியார் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே நாட்டுப்புறக்கதைகள், பாடல்கள், சொலவடைகள், கால்நடை மருத்துவ அனுபவங்களைக் கிராமங்களில் அலைந்து சேகரித்து கி.ரா.வின் பொக்கிஷத்தில் சேர்த்தவர். .இத்தனைக்கும் மேலே வல்லிக்கண்ணன். தி.க.சி., கி.ரா. போன்ற இலக்கிய ஆளுமைகளுக்கு ஒரு மகனைப் போல் துணையாக செயல்பட்டவர். காரைக்குடியில் படித்த மகனை, மகளைப் பார்க்க வரும்போதெல்லாம் தன் தோட்டத்தில் விளைந்த காய்கனிகள், தேங்காய், மாங்காய் என ஒரு சுமையோடு வந்து எங்களைத் தாக்கியவர்.அவரது பிள்ளைகள் இருவரும் சித்தப்பா, சித்தி என்று இன்றும் எங்களைச் சுற்றி வருகிறார்களே. இவர் பெயரையா நீக்குவது…? நகர்த்தினேன்.
கி.ராஜநாராயணன் ‘வாங்கோ! ஜனநேசன்’ என்றார். ஆகா, இவர் ஒருவகையில் என் ஞானத் தந்தை ஆயிற்றே.! அவரது ஐம்பது வருஷக் கடிதங்களை என்னைத் தொகுக்கச் செய்து அழகு பார்த்தவராச்சே; இன்னும் இறவாமல் மனதோடு உறவாடிக் கொண்டிருப்பவராயிற்றே…,இவர் பெயரை நீக்குவது பற்றி நினைத்தே பார்க்க முடியாதே…!
மூ.ச.சு. என்னும் மூங்கில் தோட்டம் சண்முகம் சுப்பிரமணியன் புன்னகை பூத்தார். குன்றக்குடி அடிகளாரின் ஆதரவில் தமிழ்ப் புலவராகப் பணியினைத் தொடங்கி, இறைமறுப்பாளராக, மார்க்சியவாதியாக மலர்ந்தவர். மணம் செய்துகொள்ளாமல் ஊதியத்தில் பெரும்பகுதியை இயக்கங்களுக்கும், புத்தகங்களுக்கும் செலவிட்டவர். தனது ஓய்வூதியத் திரள் தொகையில் கணிசமான தொகையை தனக்கு உணர்வூட்டிய தீக்கதிர், புதிய ஆசிரியன் பத்திரிகைகளுக்கு கொடுத்தவர். மூ.ச.சு. உடல்நிலை தளர்ந்தபோதும் தளராத நம்பிக்கையோடு நடமாடும் இயக்கமாகத் திரிந்தவர். சேமித்த ஐயாயிரம் நூல்களைக் கட்சி நூலகத்துக்கும், தனது உடலை மருத்துவமனைக்கும் கொடுத்தவர் ; இவரை மனதிலிருந்து நீக்கமுடியுமா…
சம்சாரிகளின் வாழ்க்கைப்பாடுகளை இலக்கியமாக்கிய மேலாண்மை பொன்னுசாமி, காவிரி வடிநிலப்பகுதி மக்களின் வாழ்வியலை படைத்த சோலை சுந்தரபெருமாள், தோல்பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வியல் போராட்டங்களைக் காவியமாக்கிய டி.செல்வராஜ்.. இப்படி பட்டியல் நீள்கிறது.
இதில்லாமல் கைபேசி காலத்துக்கு முந்திய சு.சமுத்திரம், கந்தர்வன், வல்லிக்கண்ணன், தி.க.சி. போன்றவர்களின் தொலைபேசி எண்கள் எல்லாம் இன்னும் நினைவில் நிற்கின்றன. கைபேசி காலத்து எண்கள் கைபேசியிலாவது இருந்திட்டுப் போகட்டும். அந்த எண்களைக் கடக்கும்போது அவர்கள் நினைவு ஒரு சிலிர்ப்பைத் தருமில்ல.. என்ற சிந்தனை மனதில் கவிந்திருந்தபோது ஒரு மின்னல் வெட்டி சிரித்தது.
ஒரு தொடர்பு எண் ஆறுமாதங்களாக பயன்படுத்தாமல் இருந்தால் அந்த எண்ணை அத்தொலைபேசி நிறுவனம் வேறு ஒரு வாடிக்கையாளருக்கு ஒதுக்கிவிடும் நடைமுறை இருக்கிறது. இந்நிலையில் அந்த எண்கள் நம்மிடம் இருப்பதில் அர்த்தமில்லையே.? அர்த்தமில்லைன்னு தள்ளிற முடியாது. அந்த எண்கள் கண்ணில் பட்டவுடன் அவை கிளர்த்தும் நினைவுகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டல்லவா… நினைக்கப்படுபவர்களே நிலைப்பர். அதனால் அவை கைபேசியில் இருந்தபடி இறவாத நினைவுகளைப் பேசட்டுமே…!
‘ஏங்க, சாப்பாடு ரெடியாயிருச்சுன்னு கூப்பிட்டுகிட்டே இருக்கேன். காதில விழலையா?’ மனைவி சொல் காதைக் கிள்ளியது.
இதோ வந்திட்டேன் என்றபடி ஒரே நபருக்கு இரண்டு தொடர்பெண்கள் உள்ளவர்களைத் தேடினேன். இவர்களில் வாட்ஸ்-அப் இணைப்புள்ள எண்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை நீக்கிக் கொண்டிருந்தேன்.
‘ஏங்க, காலாகாலத்தில் வந்து சாப்பிட்டா எனக்கு ஒருவேலை முடிஞ்சிரும்; நானும் சாப்பிட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பேனில்ல..?’ என்று மனைவி பக்கத்தில் வந்து கைபேசியைப் பிடுங்காத குறையாக நின்றாள். அப்படியே கைபேசியை வைத்துவிட்டு கைகழுவ எழுந்தேன்.
இருபது வருசத்துக்கு பின்னோக்கிய நினைவில் விழுந்தேன்; அப்பா படுத்தபடி இருந்தார் ; அம்மா கெஞ்சினாள் “ ஏங்க உங்களுக்குப் பிடிச்சமாதிரி புதினா, மல்லி, புளி, வெள்ளைப்பூடு, வெல்லம் சேர்த்து துவையல் அரைச்சிருக்கிறேன்; மெல்ல எந்திருச்சு ரெண்டு டம்ளர் கஞ்சியைக் குடிங்க; உடம்புக்கு தெம்பு குடுக்கும். மெல்ல நடந்து கொடுங்க; பேரப்பிள்ளைக உங்க கையைப் பிடிச்சு நடக்கிற வரைக்காவது நாம நடமாடித் திரியணுமில்ல.. நம்ம அனுபவங்களை அடுத்த தலைமுறைகிட்ட கொடுத்துட்டுப் போகணுமில்லை.. கஞ்சி குடிக்காட்டா ஆளை முடக்கிருமின்னு உங்களுக்குத் தெரியாததா… எந்திரிங்க ராசா” .. என்று அம்மா கெஞ்சியது கண்முன் தோன்றியது.
(94422 83668 – [email protected])

Spread the love