September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நாகரீக சமுதாயத்தின் அடையாளம்-போர் அல்ல, அமைதி !

உக்ரைன், ரஷ்யா நாடுகளிடையிலான போர் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. போர் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையிலேதான் என்றாலும் போருக்குப் பின்னணியில் அனைத்தையும் இயக்கிக் கொண்டிருப்பது அமெரிக்க வல்லரசுதான் என்பதில் ஐயமில்லை. நேட்டோ எனும் ராணுவ அமைப்பை விரிவாக்கும் அதன் முயற்சியே இப்போருக்கான முழுமுதற் காரணம். சோவியத் யூனியனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முதலாளித்துவ நாடுகளின் அச்சத்தில் பிறந்ததே நேட்டோ. சோவியத் யூனியனின் சிதைவுக்குப்பின் நேட்டோவைக் கலைத்திருக்க வேண்டும். ஆனால் நேட்டோ அமைப்பை மேலும் விரிவாக்கி ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகளை எல்லாம் இணைத்துக் கொண்டே சென்றதோடு உக்ரைனையும் உசுப்பிவிட்டு ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா திருப்பியதாலேயே இன்று போர் வெடித்துள்ளது. நாம் இப்படிச் சொல்வதாலேயே ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திவிட முடியாது. போரை உடனே நிறுத்திவிட்டு பிரச்சனைகளை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க வேண்டிய பொறுப்பு பிரதானமாக ரஷ்யாவின் வசமே இருக்கிறது.
போர் விளைவிக்கும் கொடூரங்கள் சொல்லித் தீராதது. போரினால் பெரிதும் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே. ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர். ஈராக், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் எல்லாம் அமெரிக்கா குண்டு மழை பொழிந்தபோது மௌனம் காத்த நாடுகள் எல்லாம் இன்று கூக்குரலிடுகின்றன. இனம், மொழி, நிறம். மதம் கடந்து நாடுகள் ஒன்றாக இருக்க இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்ட உருவான ஐக்கிய நாடுகள் சபை வலுவிழந்துள்ளது. அதன் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வீட்டோ அதிகாரம் விலக்கப்பட வேண்டும். இவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஐந்து நாடுகளும் சமாதானத்திற்கான எந்தவொரு முடிவையும் எடுக்கவிடாமல் தடுக்கின்றன. இந்நிலைமாறி ஐநா சபையை ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே உலக நாடுகளிடையே அமைதியை உருவாக்க முடியும். போரில் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்பதையுணர்ந்து ரஷ்யாவும், உக்ரைனும் உடனடியாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முனைய வேண்டும். -ஆசிரியர் குழு

Spread the love