September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நலம் நலமடைய ஆவல்

சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது?
இல.சண்முகசுந்தரம்
வயிற்றில் ஏற்படும் தொந்தரவுகள் குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிட்டோம். எதைச் சுற்றி எப்படி வந்தாலும் வந்து நிற்கும் இடம் என்னவோ பசியெனும் ஒரே இடம்தான். ஏனெனில், பசிதான் ஆரோக்கியமுள்ள உடலுக்கான ஒரே
ஆதாரமாகும்.

ஆரோக்கியத்தைத் தக்கவைக்க மட்டுமல்ல, நோயிலிருந்து ஒருவரை மீட்டெடுக்கவும் பசியே அவசியத் தேவையாகும். இயல்பான பசி ஒருவருக்கு ஏற்பட்டுவிடின் அவர் நோயிலிருந்து மீளத் துவங்கிவிட்டாரென்றே அர்த்தம். பசித்துச் சாப்பிடுவதன்
மூலம் உடலை வளர்த்து உயிரை வளர்க்கலாமென்றால், பசியைப் பொருட்படுத்தாமல் சாப்பிட்டால் குடலை விரியச்செய்கிறோமென்று அர்த்தம். குடல் விரிய விரிய தொந்தி பெருகி நோய் அதனுள் வளர்ந்து குடி கொண்டுவிடுகிறது. ருசியை ஒருவர் எவ்வளவு விரும்பினாலும் சரி, பசிக்கேற்றவாறே ருசியையும் விரும்பிட வேண்டும். பசியை மீறி ருசியை மட்டுமே ஒருவர் விரும்புவாரெனில் அவர் நோயை வளர்க்கிறார் என்றே பொருள்.

நோயாளியாய் அவர் மாறிய பின்பே, நோயின் தீவிரத்தை உடல் காட்டும். அதுவரை அவரால் நோயை உணர முடியவில்லையெனில், அவர் உணவின் அடிமைபோல் இருந்திருக்கிறாரென்றே அர்த்தம்.

பசிதான் நம்மைக் காக்கும் ஒரே பெரு மந்திரமாகும். பசித்துப் புசியென்பதை ஒவ்வொரு வேளைக்கும் கடைப்பிடிக்காததன் காரணமே சர்க்கரை நோய் போன்ற பல நோய்களுக்கு முக்கியக் காரணமாகும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் சில நிமிடங்கள் தாமதமானால் போதும், வீட்டையே ரணகளமாக்கிவிடுவார்கள். பசி அத்தனைக்கொடூரமானதல்ல. ஆனால், பசி தாங்க முடியாத மனநிலை இருக்கிறதே அது நிச்சயம் அத்தனைக் கொடூரமானதாகும்.
இத்தனை மணிக்கு சாப்பிட்டே ஆகவேண்டுமென்ற இறுக்கமான மனநிலையை தளரவிட்டு, பசியின் பின்னால் பொறுமையாய் நடப்பதே ஆரோக்கிய வாழ்விற்கு ஒரே வழித்தடமாகும்.

உணவுதான் நமக்கு சத்துக்களை தருகிறது, உயிரைக் காக்கிறதென நாம் நினைக்கிறோம். மறுக்கமுடியாத உண்மைதான்.ஆனால், பசியின் காரணமாகத்தான் அந்த உணவை மனிதன் கண்டடைந்தான் என்பதே பேருண்மையாகும். மனிதன்
மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் பசியின் வழி வாழ்வதே ஆகும். பசியைப் பராமரித்து வாழும் கலையை மனிதன் தவிர எந்த உயிரினமும் இன்றும் மறக்கவில்லை. ஆறறிவு இருப்பதாலோ என்னவோ மனிதன் அந்தப் பேருண்மையை மறந்துபோய்விட்டான். ருசி பல கண்டறிந்தவன் இன்று அந்த ருசிக்கே தன்
உடல்நலத்தையும் பலியிட்டுக்கொள்கிறான்.

ஒரே வரியில் சொல்வதென்றால், பசி இல்லையெனில் மனிதகுலம் இன்றைய எந்த முன்னேற்றத்தையும் நிச்சயம் அடைந்திருக்காதென நாம் அறுதியிட்டுக் கூறமுடியும்.
ஆம். மனிதகுல வரலாற்றை முன் தள்ளிய அச்சாணியே பசிதான். பசி மட்டும் மனிதர்களுக்கு ஏற்படவில்லையெனில், ஆதிமனிதர்கள் உணவு உற்பத்திக்கும், வேட்டைக்கான கருவி செய்வதற்கும் முயற்சித்திருப்பார்களா? கல், இரும்பு என ஆயுதம் தேடியிருப்பார்களா? விலங்குகளை வேட்டையாடியிருப்பார்களா? விவசாயம் உருவாகவில்லையெனில் இன்றைய நமது வாழ்வு இப்படியாக மாறிப்போயிருக்குமா?
நேரத்துக்கு சரியா சாப்பிட்டுறணும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சாப்பிடும் நேரம் எது என்பதில்தான் நம்மில் பலருக்கும் பல குழப்பங்கள். சிலர் மூன்று வேளைக்கும் நேரம் குறித்து அதை நிமிடம் பிசகாமல் கடைப்பிடித்துவருகின்றனர். சிலர் குறிப்பிட்ட நேரம் இல்லையெனினும் மூன்று வேளையும் சாப்பிடுவதில் மட்டும் உறுதியுடன் இருப்பர்.

இரவில் வீட்டுக்குத் திரும்பிவரும் நேரம் சிலருக்கு பத்து மணி முதல் 12 மணிவரை ஆகிவிடுகிறது. அந்த நேரத்துக்கு வந்து வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுத் தூங்குவோரின் நம்பிக்கை என்னவெனில், இரவில் வயிறு காலியாக இருந்தால் தூக்கம் வராது, தூங்கமுடியாது என்பதே ஆகும். இதுவும் பசி குறித்த ஒரு நம்பிக்கையே ஆகும். உண்மையல்ல.

சரியான நேரத்துக்கு சாப்பிடுவது சரிதான். ஆனால், பசியெடுக்கும் நேரம் எதுவோ அதுவே சாப்பிடுவதற்கான சரியான நேரமாகும். பசி வந்த நேரத்தை விட்டு கிடைக்கும் நேரத்தில் சாப்பிட்டோமெனில் நோயை நோக்கி நாம் பயணத்தைத்
துவக்குகிறோமென்றே பொருள். அதிலும், இரவில் வயிற்றை நிரப்புகிறோமெனில் ஜெட் வேகத்தில் நோயின் தேசத்திற்கு பயணிக்கிறோமென அர்த்தம்.

ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டலில் முதன்மையானது பசித்துப் புசிப்பதே ஆகும்.

(இத்தொடருக்கு ஒரு இடைவேளை விட்டு, பின்னர் தொடர்வோம்)
([email protected] 8248529749 )

 

Spread the love