September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நம்பிக்கை அளிக்கும் மக்கள் எழுச்சி!


நாடெங்கிலும் பாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கும் புதிய வேளாண் சட்டங்களை விலக்கக் கோரியும், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, பெகாசஸ் உளவு விவகாரம், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சீரழிவு ஆகிய பிரச்சனைகளை முன்னிறுத்தியும் 19 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செப்டம்பர் 20 முதல் 30 தேதி வரை நாடு முழுதும் போராட்டங்களை நடத்தியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் இப்போராட்டத்தைத் திட்டமிட்டு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் பல்வேறு மையங்களில் ஆவேசமாக நடத்தியுள்ளன. அகில இந்திய விவசாயிகள் சங்கம் விடுத்த அறைகூவலை ஏற்று நடத்தப்பட்ட நாடு தழுவிய வேலை நிறுத்தமும் செப்டம்பர் 27அன்று வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பாஜக தலைவர்களை அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகள் நல்குவது பகிரங்கமாகவே நடக்கிறது. ஆனால் நாங்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடுவது இல்லை என்று மோகன் பகவத் சிறிதளவும் கூச்சமின்றி அறிக்கை விடுவார். ஒன்றிய அரசுக்கு ஆர்எஸ்எஸ் தலைமைப் பீடமான நாக்பூரிலிருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஓட்டுநர் இருக்கையில் மோடி அமர்ந்திருந்தாலும் காரை ஓட்டிச் செல்வது என்னவோ ஆர்எஸ்எஸ்-தான். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கல்வி குறித்த கண்ணோட்டத்தையே தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் பாஜக அரசு அமல்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்கவும் அதே கஸ்தூரிரங்கன் தலைமையில்தான் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்துத்துவா அடிப்படையிலேயே தேசிய குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்தியா இந்துக்களுக்கான நாடு; சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவர் என்பதில் பாஜக அரசு தெளிவாக இருக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இருப்பதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம்தான். இருள் சூழ்ந்துள்ள இன்றைய அரசியல் வெளியில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும், மக்களின் எழுச்சிமிகு போராட்டங்களும் நம்பிக்கை ஒளியின் கீற்றுகளாகப் புலப்படுகின்றன. இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்குத் தயாராவோம். -ஆசிரியர் குழு

Spread the love