September 28, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நம்பிக்கைப் பிடிகயிறு

ம. மணிமாறன்
ஊர்கள் தங்களை விரித்து வைத்து வெம்பரப்பாகக் காத்திருக்கின்றன. ஆளற்ற நகரத்து தார்ச்சாலைகள் கொடும்பகலிலும் இருள் அப்பிக் கிடக்கின்றன. சாலையோரக் காடுகளில் பதுங்கியிருக்கும் காவல் தெய்வங்களின் பீடங்கள் எண்ணெய்ப் பிசுக்கற்று வறள்கின்றன. மனித குலத்தின் கடைசி நம்பிக்கையாக இன்றும் நம்பப்படுகிற தெய்வங்களைக் கூட எதுவும் செய்ய லாயக்கற்றவர்களாக சுருட்டிப் போட்டிருக்கிறது காலம். பூட்டிய கதவுகளுக்குள் மனிதர்களும், தெய்வங்களும் உறைந்து கிடக்கின்றனர்..எப்போது திறக்கும், எப்போது உடையும் இந்த சூட்சுமச் சங்கிலி என பூமிப் பந்தே காத்திருக்கிறது.. இருட்டு வீட்டிற்குள் எத்தனை நாள்தான் வெளிச்சம் எப்போ வரும், ஒளி விழும் நிழல் எங்கே எனத் தேடிக் கொண்டே அலைவது.. அகல்விளக்கினை ஏற்றிட ஒரு சின்ன தீக்குச்சியாவது கையகப்படாதா என துழாவுகிறது மனம். திசா, திசைகளின் பாதைகளில் தப்பிப் பயணிக்கும் மனதிற்குள் விதவிதமான காலத்தின் காட்சிகள் தோன்றுகின்றன. உருமாறுகின்றன. நான் கவனித்தவற்றை வரிசைப்படுத்துகிறேன்..
என் மனதின் காட்சிகளை நீங்களும் பின்தொடருங்கள்.. இரவு, பகல் என ஒவ்வொரு நாளும் எப்படி தன்னை உருமாற்றி புரண்டு நகர்கிறது! இதனை எளிமையாகப் புரிய வைப்பதற்காக எப்போதோ குழந்தைகளோடு விளையாடிய விளையாட்டு இப்போது நினைவிற்கு வருகிறது. இது நடந்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம்.
குழந்தைகள் விளையாடுகிறார்கள். எல்லாக் குழந்தைகளும் பத்து வயதிற்கு உட்பட்ட பள்ளிக் கூடம் போகும் குழந்தைகள். குழந்தைகள் மனதில் எப்போதும் வீடும், பள்ளிக்கூடமும் பிரம்மாண்டமாக எழுந்து உருப்பெறவே செய்யும். விளையாட்டிலும் கூட குழந்தைகள் மனம் அன்று மட்டுமல்ல இன்றுவரையிலும் பள்ளிக்கூடத்தையும் வீட்டையுமே சுற்றி சுற்றி வருகிறது.
“தம்பி எந்திரி பொழுது விடிஞ்சிருச்சு…பள்ளிக்கூடம் போகணுமில்ல?”
அம்மாவாக நடித்த குழந்தை, மகன் குழந்தையை உசுப்புகிறது..சோம்பலை முறிப்பதாக பாவனை செய்தபடி பையன் குழந்தையும், பெண்குழந்தையும் பல் விளக்குகிறார்கள், குளிக்கிறார்கள்..புத்தகப் பைகளைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடம் கிளம்புகிறார்கள்
அம்மா குழந்தை சமையல் செய்கிறது.. அப்பா குழந்தை ஆபீஸ் கிளம்புகிறது. பள்ளிக்கூடக் காட்சிகளை பாவனையாக குழந்தைகள் உருவாக்குகிறார்கள்..
“வீட்டுப் பாடத்தக் காட்டு. வீட்டுப் பாட நோட்ட எடு, கைய நீட்டு.. சள்,சள்,சளார்.. ஆசிரியையாக நடிக்கும் குழந்தையின் முகம் சற்று முன் இலகுவாக இருந்ததைப் போல இப்போது இல்லை. பள்ளிக்கூடக் காட்சிகளாக மகிழ்ச்சியை விட வன்முறையும், தண்டனைகளுமே குழந்தைகளின் ஆழ்மனதில் பதிந்திருப்பதை நான் கவனித்தேன்.
விளையாட்டின் நடுவில் புகுந்து “ஏன் டீச்சர்னா அடிக்க மட்டும்தான் செய்வாங்களா?..”
விளையாட்டின் தீவிரத்தில் என் சொல் எதுவும் அவர்களுடைய காதுகளை எட்டவில்லை.. மணியடிக்கிறது. ஹோவென சப்தமிட்டபடி அவரவர் டிபன் பாக்ஸை பாவனையாகவே திறக்கிறார்கள்..
“எங்க வீட்டுல புளியோதரை.நானு தயிர்ச்சாதம்”.. இப்படி ஒருவர் டப்பாவின் உணவு அடுத்தவருக்கு என இடம் மாறுகிறது. தமிழ்க் கிராம வாழ்க்கையின் பண்பாட்டு அடையாளமான கூட்டாஞ்சோறு மிச்சமாக தங்கியிருப்பது பள்ளிக் கூட வளாகங்களில்தான் என்பதும் விளையாட்டின் வழியே வெளிவரத் துவங்கியது. அடுத்த மணியில் எல்லோரும் வீட்டுக்கு வந்து விட்டார்கள்..
ஏண்டா இன்னைக்கு என்ன வீட்டுப்பாடம்.. காலு கையக் கழுவிட்டு எடுத்துப்படி..
எம்மா பசிக்கும்மா பண்டம் குடு..படில்ல முதல்ல,அப்புறம் திங்கலாம்..
குழந்தைகள் அநாயாசமாக காலத்தை காட்சிப் படுத்திக் கொண்டிருந்தார்கள். அந்த குறைந்த ஒளியில் நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன்.
சில்வண்டுச் சத்தம் வந்த நொடியில் இரவாகி விட்டது. அவ்வளவுதான் எல்லோரும் சொல்லி வைத்ததைப் போல கொட்டாவி விட்டார்கள். கண்களை மூடி தூங்கத் துவங்கினார்கள். ஒட்டு மொத்த விளையாட்டும் ஒரு தெருவிளக்கிற்கு கீழேதான் நடக்கிறது. ஆனாலும் குழந்தைகள் இரவையும் பகலாக்கும் வித்தை கற்றவர்கள்..அவர்கள் நினைத்தால் இங்கே மலை எழும்,கடல் பொங்கி ஊரை நிறைக்கும்..அண்டா முழுக்க பணமாகக் கிடக்கும்..ஐஸ் கட்டி மழை மட்டுமே நமக்கு தெரியும்.ஆனால் அவர்கள் விளையாட்டில் புரோட்டா மழை பொழியும்..சுவாரஸ்யமாக நகரும் இந்த விளையாட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும். விளையாட்டின் கிளைமாக்ஸ் லைட் அணைவதுதான்.. இருட்டிடுச்சு, எல்லோரும் போய் தூங்குங்க ..என்பதுதான்!
இந்தக் கடைசிச் சொல்லை மட்டும் குழந்தைகள் விரும்புவதேயில்லை.. அதன் பிறகும் விளையாட்டைத் தொடர விரும்பும் மாணவர்களின் மனநிலையை அறிந்த நான்
சரி, சரி.. சூரியன் உதிச்சுருச்சு. விடிஞ்சிருச்சு. எல்லோரும் எந்திரிங்க என்றேன்.
என்னுடைய நோக்கம் விளையாட்டை முதலில் இருந்து துவக்குவது மட்டுமே..அப்போது படுத்துக்கிடந்த குழந்தைகளில் ஒருத்தி `நிலா மறைஞ்சா தான சூரியன் உதிக்கும்? நிலாதான் நல்லா பளீர்னு அடிக்கில்ல? பேசாம படுங்க’ என உரத்துக் கட்டளையிட்டாள். அவ்வளவுதான் கூட்டத்தில் இருந்து பொட்டுச் சத்தம் கூட எழவில்லை. இரவும் பகலும் ஒரு நாளின் இரண்டு பக்கங்கள். சூரியனும்,சந்திரனும் அதன் சாட்சிகள் எனும் எளிய உண்மையை குழந்தைகள் தங்களுடைய விளையாட்டின் வழியாகவே வெளிப்படுத்தினர்.
துடிப்புடன் விளையாட்டை நடத்திக் கொண்டிருந்த பெண் எழுந்தாள். தலையை மட்டும் லேசாக தூக்கிய மற்றவர்கள், அவளுடைய வாயையே கவனித்தனர்..அவள்தான் விளையாட்டை நடத்துகிறவள். அகஸ்தோ போல் எனும் நாடக மேதை ஐnஎளைiடெந வாநயவசந எனும் நாடக முறைமையை உருவாக்கியிருப்பார்.. பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள் என்று எந்த பேதமும் அற்ற நாடகங்களை சிலியில் நிகழ்த்தியவர் அவர்.. இப்போது நானும் அகஸ்தோ போலின் கட்புலனாகா அரங்கின் நடிகனைப் போல விளையாட்டில் ஒருவனாக ஆகினேன். நிற்கும் பெண் குழந்தையின் வாயசைவினை எதிர் நோக்கி குழந்தைகளோடு நானும் காத்திருக்கிறேன்.
எல்லோரும் நல்லா கவனிங்க. சூரியனுக்கு காலையில உதிக்கணுங்கிறது மறந்தே போச்சு, என்ன ஆகும்?
அது எப்படிப்பா மறக்கும்?
ஆங் படிச்சதெல்லாம்தான் பரிட்சையப்ப மறக்கறதில்ல.. அதுமாதிரின்னு வச்சிக்கோயேன். என்ன ஆகும்?
கீழேயிருந்து பல குரல்கள்.
ஹை ஜாலி, எந்திரிக்க வேண்டியதே இல்ல..பசிக்கவே பசிக்காது.. எங்க அம்மா திட்டாது.. எல்லோரும் கோரஸாக பள்ளிக்கூடம் திறக்கமாட்டாங்க!
ஆமா நிசந்தான்.. பள்ளிக்கூடம் திறக்காது..பரீட்சையும் கிடையாது..
கூச்சலும், கும்மாளமுமாக குழந்தைகள் உருண்டு புரண்டனர்..
மெதுவாக ஒரு குழந்தை எழுந்து நின்றாள்..ஒரு நாளு, ரெண்டு நாளுன்னா பரவாயில்லப்பா….பள்ளிக்கூடமே திறக்கலேன்னா, என்ன ஆவோம்?
ஆண்டு பலவாகிய பிறகும் எனக்குள் `பள்ளிக்கூடம் திறக்கவேயில்லேன்னா நாம என்ன ஆவோம்’ எனும் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது..
காலம் மகா அரக்கன். இரக்கமேயில்லாமல் காலத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த கொடுங்கனவை எப்படி கடத்திக் கொண்டிருக்கிறார்கள் நம்முடைய குழந்தைகள்..பேசிப்பார்த்தீர்களா? அவர்களுடைய மனதின் குரலை அறிய முயற்சித்தோமா?..கேட்டுப் பாருங்கள்.
தாங்கவே முடியாத அந்த துயரக் காட்சிகளால் மனம் நிம்மதியற்று பதறுகிறது. குழந்தைத் தொழிலாளிகளாகிப் போன அவர்களுடைய நிலையை எப்படி சரிசெய்யப் போகிறோம்? நம்பிக்கை பிடிகயிறுகள் கைநழுவிச் செல்கிறதோ என மனம் தடுமாறுகிறது..
எல்லாம் சரியாகி..ஆமாம் எல்லாமும் சரியாகி இறுகிக் கிடக்கும் கதவுகளை காலம் அகல திறக்கட்டும்.
(தொடரும்..)

(9443620183 – [email protected])

Spread the love