September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நம்பிக்கைப் பிடிகயிறு..(தொடர்ச்சி)

ம. மணிமாறன்


இன்று நாளை எனும் குரல்கள் கேட்கத் துவங்கிவிட்டன. நாளையாவது நடந்தால் நன்றாக இருக்குமே என எல்லோரும் நினைக்கிறார்கள். திறக்க மாட்டீங்களா?.. எப்ப சார் திறப்பீங்க?.. சார் எப்பிடியாவது திறந்துருங்க சார்.. எனும் குரல்களைக் கேட்டுத்தான் என்னுடைய தினசரிகளின் காலைகள் விடிகின்றன. எல்லாவற்றையும் தலைகுப்புறக் கவிழ்த்திவிட்டது காலம். ஒரு காலத்தில் சனி, ஞாயிறு எப்போது வரும். லீவு எப்போது விடுவார்கள் என ஏக்கத்துடன் காத்திருந்தவர்களின் குரல்தான் அது.
அது எப்படி திறக்காம இருக்க முடியும்.. நிச்சயமா இன்றோ, நாளையோ திறந்திடும் என்று சொல்ல முடியாமல் தடுமாறுகிறது மனம்.. இதுநாள்வரை ஒருபிடியும் கிடைக்கவில்லை. பயம்தான் இப்போது எல்லாவற்றையும் இயக்குகிறது. அடுத்த அலை குறித்த அச்சத்துடனே விடிகின்றன தினசரிகள். இந்த சொற்றொடரை டைப் செய்துகொண்டிருக்கும்போது, கைபேசி அழைக்கிறது. தங்கப்பாண்டியா.. அல்லது முத்துராஜா.. அழைத்தது ரவிதான். கடைசியாக என்னைப் பார்க்க கூச்சப்பட்டுப் பதுங்கிய ரவி. சார், இந்த மாதமும் திறக்கலையாம் சார்.. ரவி லேசாக அழுவதைப் போலக் கேட்டது. பயப்படாதடா, அதான் ஆன்லைன் கிளாஸ் இருக்குல்ல. அங்க படிச்சிக்கிடலாம் என்றேன். போன் கட் ஆகிவிட்டதா அல்லது எரிச்சலில் ஆஃப் பண்ணிட்டானான்னு தெரியவில்லை. ஒருவேளை அவனுடைய புதிய செல்ஃபோனில் என்னை அழைத்திருக்கிறானா? அன்று பள்ளிக்கூடம் தேடிவந்து “சார் எப்பிடியும் புது ஃபோன் வாங்கிருவேன் என்று சொல்லி விட்டுத்தானே போனான்? அல்லது பழைய பட்டன் போனில் கூப்பிட்டு வேறு எதுவும் கேட்க அழைத்தானா?.. என் கண்திரைக்குள் காட்சிகள் நகருகின்றன. விதவிதமான காட்சிகள். எல்லா காட்சிகளுக்குள்ளும் சொல்லி வைத்ததுபோல மாணவ, மாணவியர் பெரும் சோகத்துடன் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருக்கின்றனர். இப்போது பள்ளிக்கூட வளாகத்தில் மெதுவாக காற்றைப் போல நுழைகின்றனர் மாணவர்கள். புத்தகம் வாங்க, அடுத்த வகுப்பிற்கு, அட்மிஷனுக்கு என நுழைந்த காற்று சட்டென வெளியேறுகிறது. அதன்பிறகு வருடம் கடந்தும் நீடித்திருக்கும் அதே அமைதி. ஏதாவது செய்து இந்த குரூர அமைதியைக் கலைக்கத்தான் வேண்டும். இந்த ஆன்லைன் வகுப்புகள் ஒரு சின்ன ஆசுவாசம். மாணவர்களின் முகம் பார்த்து பேசலாம் அல்லவா?.. மாணவர்களும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள். ஆனால் அதற்கு ஃபோன் வாங்கணுமே.. இன்றுவரையிலும் கூட ஃபோன் வாங்க முடியாத பலர் இருக்கிறார்கள். ஒருநாள் காலை கலங்கிய கண்களுடன் ரவி பள்ளிக்கூடம் வந்தான். கூடவே அவனுடைய அம்மாவும். என்னடா ரவி ஆன்லைன் வகுப்பிற்கே வரல என்று கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் கலங்கியபடியே நின்றான். சுற்றி நிற்கும் சிலரைப் பார்த்தான். ஏதோ சொல்லத் தயங்குவது அவன் முகத்தில் தெளிவாகத் தெரிய, மெதுவாக எழுந்து போய் என்ன ரவி, எதுனாலும் சொல்லு..என்றேன். அவ்வளவுதான்..அவனுடைய தோளைத் தொட்ட மறுநொடியில் அழத் துவங்கிவிட்டான். அவனோடு சேர்ந்து அவனுடைய அம்மாவும் கலங்கி நின்றார்கள். ” சார் எவ்வளவு சிரமத்துக்கு நடுவில, இந்த போன் வாங்கினோம்னு உங்களுக்கே தெரியும்? அத நேத்து இவுக அப்பன் தூக்கிக் கீழ போட்டு உடைச்சிருச்சு சார். இப்ப என்ன செய்யிறதுன்னே தெரியலே.” கண்ணீரை அடக்கிக் கொண்டு தழுதழுத்த குரலில் நடுங்கிடும் அந்த அம்மா கேட்க நினைத்து தயக்கத்தில் கேட்காத பல கேள்விகள் எனக்குள் வரிசையாக ஓடத்துவங்கின. ரவியை இதே பெருந்தொற்றுக் காலத்தின் முதல் அலையின் தீவிரம் வடியத்துவங்கிய நாளில் நான் பார்த்தேன். சாலையோர புரோட்டா கடையில் பார்சல் கட்டிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் பதுங்கினான். எனக்கும் கூட ரவிதானா என்ற சந்தேகம் துளிர்க்கத்துவங்கியது. இருந்தாலும் ரவி,ரவீ.. என நான் கூப்பிட்ட நொடியில் திரும்பினான். காலம் நிகழ்த்திய விசித்திரத்தின் சாட்சியாகி நின்றான் ரவி. “என்னடா ஆச்சு. ஏன் இப்பிடி எண்ணைப் பிசுக்கோட நிக்கிற, வேலைக்கு சேர்ந்திருக்கியா?”.
“ஆமா சார். அப்பா ஒரே குடி. அம்மாவுக்கும் பெருசா வேலை இல்லை. என்ன செய்யிறதுன்னு தெரியல. இங்க வேலை செஞ்சா சாப்பிட்டுக்கிடலாம். அதோட போகும்போது எங்க அம்மாவுக்கும் எடுத்துட்டுப் போயிரலாம்” என்றான்.
வாழ்க்கை எப்படி சட்டென இந்த சின்ன பையனை உருமாற்றிவிட்டது என நினைத்தவாறே மெதுவாக நகர்ந்தேன். அவ்வளவு துடிப்பானவன் ரவி. வகுப்பில் பாடங்களை கவனிப்பதிலிருந்து, புரிந்து கொள்வது, மற்ற மாணவர்களுக்கு சொல்லித்தருவது, உதவிகள் செய்வது வரையிலும் ரவியின் செயல்பாடுகளை பாராட்டாத ஆசிரியர்களே இல்லை.
அப்போது ரவி அழைத்தான். “சார்..இந்தக் கடையில வேலை பார்க்கிறேன்ல, அண்ணாச்சி இன்னும் ரெண்டு நாள்ல செல்போன் வாங்கித் தந்திருவேன்னு சொல்லிருக்காரு. சம்பளத்துல கழிச்சுக்கிருவாராம். முக்கியமா, இந்த ஆன்லைன் கிளாசுக்காகத்தான் சார் நான் புரோட்டாக்கடை வேலைக்கே வந்தேன்”.
ஒரு நிமிடம் எனக்குப் பகீர் என்றது மனம். இப்படி உதிரிப் பாட்டாளிகளாக, இளம் பிள்ளைகளை உருமாற்றியிருக்கிறது பெருந்தொற்று. என்னுடைய நினைவை சமகாலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினேன்.
தயங்கித் தயங்கி அந்த அம்மா சார்.. என்றவுடன் “நான் வேணும்னா, ஃபோனுக்கு ஏற்பாடு செய்யட்டுமா” என்றேன். சே..சே.. அதெல்லாம் வேண்டாம் சார் என சட்டென கூறுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. மத்தியதர வர்க்க மனதிற்கு உழைப்பாளி மக்களின் சுயமரியாதையின் உயரத்தைக் காட்டிய நிமிடம் இது. தயங்கியபடி மறுபடியும் அவரே பேசினார். “சார், எங்க ரவி நல்லா, விரசா, படிச்சுக்கிடுவான். மத்த பிள்ளைகளுக்கு ஒரு மணி நேரம்னா, இவனுக்கு பத்து நிமிசம் போதும் சார். எப்பிடியாவது இவனோட பட்டன் போனுக்கு கூப்பிட்டு அரை மணி நேரம் பாடத்தை சொல்லிக்கொடுங்க சார்” துண்டுக்காகிதத்தில் ரவியின் நம்பர் காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது.. எனக்குள் ‘எப்பா ஏதாவது செஞ்சு பள்ளிக்கூடத்த திறங்க சாமிகளா..’ எனும் குரல் ஒலிக்கத் துவங்கியது. பார்க்கலாம்..
(9443620183 – [email protected])

படம் : Manimaran

Spread the love