September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

நடக்கவோ… பறக்கவோ..

ம. மணிமாறன்
எல்லாம் சரியாகத்தான் போகிறது. பழுதில்லை.. முன்ன பின்ன இல்லாமலா இருக்கும்? .. அப்படியே இருந்தாலும் சரியாகிவிடும்.. என்ன கொஞ்சம் காலம் எடுக்கும்..அவ்வளவுதான். எப்டியாவது இந்தச் சக்கரம் சுற்றிவிடும். பிறகு அததன் போக்கில் நகரத் துவங்கிவிடும். நாமும் உடன் பயணிக்கலாம். எப்படியாயினும் இந்த வண்டியில்தானே நம் பயணம்? சிக்கிக் கிடக்கும் சக்கரச் சுழற்சியை சரிசெய்திட தயங்கிக் கிடப்பதிலோ, அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது.. இனி சரி செய்திட வாய்ப்பில்லை என புறம் ஒதுக்கி போவதிலோ எந்த பயனும் விளையப்போவதில்லை. ஏதாவது செய்யத்தான் வேண்டும்.
ஏதாவது செய்யணும்னு தோணுது. ஆனா என்ன செய்யிறதுங்கிறது மட்டும் பிடிபட மறுக்கிறது. இந்த மனநிலை கலந்து உருமாறி வேறு ஒரு சொல்லாகி எல்லா ஆசிரியர்களுக்குள்ளும் வரத் துவங்கிவிட்டது. எல்லோருக்குள்ளும் ஒருவித வெறுமை புகுந்து அச்சம் சூழ்ந்திட நித்தத்தைக் கடக்கிறோம். அச்சப்படத் தேவையில்லை. நிஜத்தில் இது தீர்க்க சாத்தியமான சிக்கல்தான். சின்னச் சின்ன முயற்சிகளும் விடாப்பிடியான நம்பிக்கையும் மட்டுமே இப்போது நம் யாவருக்கும் தேவைப்படுகிறது.
அவரவர் வகுப்பறைகளின் தினசரியை மனதிற்குள் திரைப்படத்தின் பின்னோட்டம் போல ஓடவிட்டுப் பார்த்தால் ஒரு சித்திரம் பிடிபடும். காலையில் மாணவ மாணவியர் மிகுந்த உற்சாகத்தோடுதான் பள்ளிக்கு வருகிறார்கள். வரும்போது இருந்த மகிழ்ச்சி சட்டென வடிந்து விடுகிறது. அவர்களால் ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் தன்னிடத்தில் உட்காரவே முடியவில்லை. ஆசிரியர் பாடம் நடத்துகிறபோது மாணவர்கள் செய்யும் சேட்டைகள் இதுவரை கண்டிராதவையாக இருக்கின்றன. பாடம் நடக்கிறபோதே வகுப்பிற்குள் நடந்து போகிறார்கள். திடீரென குபீரென சிரிக்கிறார்கள். நானும் கூட இதே மாதிரியான விதவிதமான வகுப்பறைச் சிக்கல்களைக் கடந்தே நாட்களை எதிர்கொள்கிறேன். இப்படி இருந்தவர்களிலேயே நம்முடைய செல்லங்கள்.. என்னதான் ஆச்சு இவர்களுக்கு எனும் கேள்வி, நித்தமும் முட்டி மோதிக் கொண்டேயிருக்கிறது..
கொஞ்சம் மாணவர்களோடு நெருங்கிப் பேசவேண்டும் எனும் யோசனையில் மூன்று மாணவர்களை அழைத்து பேசத்துவங்கினேன். என்னப்பா ஆச்சு..ஆறுமாசம் முடியப்போகுது…அரசுத் தேர்வு வேற வருது. எப்பிடியாவது தேர்வு எழுதித்தான ஆகணும்? அதுக்கு நாம கொஞ்சமாவது படிக்கணுமில்ல? பாடங்கள கவனித்தால்தானே படிக்கலாம்? பிறகு தேர்வுக்கு தயாராகலாம்…
கேட்ட மறுநொடியில் ஒரு மாணவன் சொன்னான்.
“அதுதான் சார் சிக்கலே. பள்ளிக்கூடம் திறந்த மறுநாளே பரீட்சை. அதுக்கு தயார் செய்யணும். வீட்டுப்பாடம். ஆளாளுக்கு செய்ய வேண்டிய வேலைகள எல்லா ஆசிரியர்களும் அடுக்கினா..எங்களுக்கு எப்பிடி சார் முடியும்? கையில பேனாவப் பிடிச்சாலே வழுக்கிட்டு ஓடுது. பேப்பரையும்,நோட்டையும் பார்த்தா ஏதோ எங்களப் பிடிக்க வந்த பிசாசு மாதிரியே தெரியுது சார். எங்களால ஒரு நாளக் கடத்துறதே பெரும்பாடாப் போகுது..”
இப்பிடி ஒரு மாணவன் சொன்ன மறுநொடியில் உடன் இருந்த இருவரும் இதே மனநிலையிலான வார்த்தைகளை தயங்கித் தயங்கி வெளிப்படுத்தினர். முதலில் இந்த நூற்றாண்டு கால தயக்கத்தை பள்ளிக்கூடங்களை விட்டு அகற்ற வேண்டும். முதலில் பேசுங்கப்பா, எல்லாத்தையும் சரி செய்யலாம் என்றேன்.
‘அப்ப சரி சார்.. நீங்க எல்லார்ட்டையும் கேளுங்க..’
சுளீர்னு என்னைய யாரோ சாட்டையால அடிச்ச மாதிரி இருந்துது. அட ஆமா.. எப்பிடி மூணு பேர்ட்ட பேசி முப்பது பேரு மனநிலையை அறிய முடியும்? இப்பிடி வகுப்பறைகளுக்குள் நாம் அறியாமலே உருவாகி நிலைத்திருக்கும் விசயங்கள் ஒன்றல்ல.. இது போல அடுக்கித் தொடரும் சிக்கல்கள் இருக்கின்றன. முதலில் இதிலிருந்து விலகிப் பயணிக்கும் பக்குவம் நமக்குள் வளர வேண்டும். வெறும் கற்றல், கற்பித்தல், அதன்பிறகு அதனை மதிப்பிடத் தேர்வுகள் எனும் சக்கரவட்ட சுழற்சியிலான நடைமுறைகள் மட்டும் போதா..
முதலில் இயல்பான மனநிலைக்கு மாணவர்களைக் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சி எடுக்க வேண்டும். அது நடப்பதற்குள் நம்முடைய மூளை முழுக்க தேர்வு குறித்த பதட்டம் நிறைந்துவிட்டது. கடந்த பத்தாண்டுகளாக நாம் பழகியிருந்த மனநிலைக்கு சட்டென தாவி குதித்து ஓகேப்பா.. நீங்க இனி பாடத்துல கவனத்த செலுத்துங்கன்னு சொல்லத் துவங்கி ..சிலிப் டெஸ்ட்.. மாதத் தேர்வு, திருப்புதல் தேர்வு.. நெக்ஸ்ட், நெக்ஸ்ட் என நகரத் துவங்கிவிட்டோம். நமக்கு மிகவும் பழக்கமான பாதை. ஆனால் மாணவர்கள் நம்மோடு வரவில்லை. அச்சம் சூழ கிளம்பிய இடத்திலேயே நின்றுவிட்டார்கள்.
நாம் திரும்பிப் பார்க்காமலே சடசடவென ஓடிக்கொண்டேயிருக்கிறோம். இத்தனை தூரம் தேர்வுகளைக் குறித்த பயத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடாது. வார்த்தைகள் வசப்படாது தடுமாறிக் கிடப்பவர்களிடம் நாம் இன்னும் கொஞ்சம் கருணையோடும், மிகுந்த அன்போடும் வகுப்பறைகளை லகுவாக்கிட வேண்டும். பொதுவான விஷயங்கள் குறித்த உரையாடல்களை வகுப்பறையில் நாம் நடத்த வேண்டும். பாடப்புத்தங்கள் தவிர வேறு நூல்களைப் படிக்கும் பழக்கத்தை அவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். உலகப் புத்தக தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். நூலகம், விளையாட்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைந்ததாக வகுப்பறைகளை மாற்ற வேண்டும். அதற்கான சின்னச்சின்ன செயல் திட்டங்களை கல்வியாளர்களோடு இணைந்து உருவாக்கலாம். கனிவும், கருணையுமே இப்போது நம் கையிலிருக்கும் சிறு கருவி
(9443620183 – [email protected])

Spread the love