September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

*தோழர் நன்மாறன் மறைவு* *நல்மைந்தனை இழந்தது மதுரை*

எளிமை

நேர்மை

அர்ப்பணிப்பு

மக்கள் நேசம்

இத்தகைய பண்புகளை ஒரே வரியில் செல்வதானால் “நன்மாறன்” என்று சொல்லி விடலாம். இராமலிங்கம் அவர் இயற்பெயர். மக்களும் மதுரையும் இயக்கமும் தந்த பெயர் நன்மாறன்.

அவரும் நானும் 15 ஆண்டுகளுக்கு முன்பு  ஒரு நள்ளிரவில் குமுளியில் அரசு பேருந்து ஏறினபோது அவரது சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டையை பார்த்த நடத்துநர் நம்பாமல் அதை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டே இருந்தார்.

*”இந்த காலத்தில் எந்த எம்.எல். ஏ சார் பஸ்ஸில் வருகிறார்”* என்று சொல்லி விட்டு பெரிய கும்பிடு போட்டு நகர்ந்தார். 

*ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டிற்கு* அருகில்தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது குடியிருந்தார். ஒரே அறை… அதன் ஓரம் சீலை மறைக்கப்பட்டு சமையலறையாக இருக்கும். ஒரு கட்டில் ஒன்று இந்த ஓரத்தில் கிடக்கும். *”தவம்”* என்பது துறவிகளுக்கான வார்த்தை என்றாலும் எந்த துறவிகள் இப்படி இருக்கிறார்கள்? உலகமயம், நுகர்வியம், பணபல அரசியல்… இவற்றுக்கு மத்தியில் இப்படி வாழ்ந்ததை விட பெரிய “தவம்” ஏது?

எல்லிஸ் நகர் கட்சி அலுவலகத்தில் கூட்டங்கள் முடிந்தவுடன் *யாராவது ஒரு தோழரின் இரு சக்கர வாகனத்தில்* பின்னால் அமர்ந்து பயணித்த காட்சி. கட்சி கொடுத்த *டி. வி.எஸ் 50 வாகனத்திலேயே* மதுரை மாநகரின் மடிப்பு கலையா வெளி, சித்திரை, ஆவணி மூல  வீதிகளில் அவர் வலம் வந்தது அரசியல் கலாச்சாரத்தின் அழகு. 

“எல்லோரும் நல்லவரே” என அவர் பழகுவார். எல்லோருக்கும் நல்லவராக அவரும் இருந்தார். ஆனாலும் அரசியல் எதிரிகளின் வன்முறைக்கு ஆளானதும் உண்டு.  

*மீனாட்சி அம்மன் கோவில் ஆடி வீதிகளின்* சொற்பொழிவுகளில் அவர் அமர்ந்திருப்பார்.

மதுரை தெருக்களின் வரலாறை சுவையாக சொல்வார். அவர் சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து *மாரியம்மன் தெப்பக் குளத்தில்* அங்கப் பிரதட்சணம் செய்ய பாதை செம்மை செய்து கொடுத்தார். கம்யூனிஸ்டுகள் கடவுள் வழிபாட்டை ஊக்குவிக்கலாமா? என்ற விமர்சனம் வந்தபோது *உருள்பவர் எங்கள் உழைப்பாளி தோழர் அல்லவா? கல்லும் மண்ணும் குத்தாமல் உருளட்டுமே!* என்று எல்லோரையும் நெகிழ செய்தார். *வறட்டுத்தனம் என்பதே அவரிடம் கிடையாது. எப்போதும் ஈரம்…ஈரம்… ஈரம்… இதுதான் அவரது நெஞ்சம்.* 

ஆனால் தத்துவ விசாரங்களில் சமரசம் செய்ய மாட்டார். மக்கள் பிரச்சினைகளில் முன் நிற்பார். மக்கள் மொழியில் கனமான விசயங்களை உரையாடுவார். *இராமநாதபுரத்தில்* 1986 இல் ஒரு பொதுக் கூட்டத்தில் பேச வந்திருந்தார். கையில் குளோப் (Globe) தீப்பெட்டியை வைத்துக் கொண்டு உலக அரசியலை எளிமையாக பேசினார். 1989 இல் *நெல்சன் மாண்டேலா விடுதலையை* கொண்டாட மதுரை மாநகர வீதிகளில் நடைபெற்ற மாபெரும் பேரணியின் இறுதியில் கட்டபொம்மன் சிலை அருகே அவர் ஆற்றிய எழுச்சி மிக்க உரையின் ஒவ்வொரு வரிக்கும் கரவொலி. சர்வதேச நிகழ்வு ஒன்றை அவர் சாமானிய மக்களின் இதயத்தோடு இணைத்த பாங்கு வியக்க வைத்தது. 

*இன்சூரன்ஸ் தனியார்மயத்தை எதிர்த்து* அவர் நிறைய வீதிமுனைக் கூட்டங்களில் பேசி இருக்கிறார். பெத்தானியாபுரம், ஜீவா நகர், புதூர் பேருந்து நிலையம், கீழ மாசி வீதி தந்தி அலுவலகம், தத்தனேரி… இப்படி எத்தனை இடங்கள்! தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு மாநாடு மதுரையில் நடைபெற்றபோது 2008 இல் தமுக்கம் அருகே காவல் துறை கெடுபிடிகளை மீறி பேரணியை துவக்கி வைத்தார்.  

குறுகிய அடையாளங்கள் கடந்த சிந்தனை, உணர்வு, செயல்பாடுகளுக்கு அவர் உதாரணம். உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பற்றிய திரு கார்த்திகேயன் அவர்களின் இந்து ஆங்கில நாளிதழ் செய்தியை சட்ட மன்ற கூட்டத் தொடரில் 2008 இல் முதன் முதலாக அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் கவனத்திற்கு கொண்டு சென்றவர். *”என்ன நன்மாறன், பெர்லின் சுவர் மாதிரி சொல்றீங்க”* என்று கலைஞர் காட்டிய உடனடி ரியாக்சன்தான் அடுத்தடுத்த நகர்வுகளின் துவக்கம். 

மேடைக் கலைவாணர் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர். மேல மாசி வீதி – வடக்கு மாசி வீதி சந்திப்பில் எத்தனை முறை அவரின் குரல் மக்களை ஈர்த்திருக்கிறது! குன்றக்குடி பெரிய அடிகளார், தமிழருவி மணியன், மாயாண்டி பாரதி, விடுதலை விரும்பி… இப்படிப்பட்ட பெரும் ஆளுமைகள் மத்தியில் ஒரே மேடையில் பேச *நன்மாறன் எழுந்தால் கூட்டம் ஆரவாரிக்கும். பட்டிமன்றத்தின் போக்கை அவர் பேச்சு மாற்றிவிடும்.* இரவு 2 மணியைக் கடந்து ஆயிரக்கணக்கில் மக்கள் உட்கார்ந்திருப்பார்கள்.

*அவரது பயணம் நீண்டது. நெடியது.* வாலிபர் சங்க தலைவராக, இலக்கிய உரை வீச்சாளர் ஆக, மார்க்சிஸ்ட் தலைவராக, மக்கள் பிரதிநிதியாக பன்முகப் பரிமாணத்தில் சிறந்த பங்களிப்பை நல்கியவர். 

நன்மாறன், நீங்கள் மதுரையின் அடையாளம். கம்யூனிச பண்புகளின் அடையாளம். அரசியல் விழுமியங்களின் அடையாளம்.

என்றும் உங்களை நாம் மறவோம். 

*கண்கள் கசிய வழி அனுப்புகிறோம்.*

*க.சுவாமிநாதன்*

Spread the love