August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தொடரும் ஜனநாயகப் படுகொலை!

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பாஜக சதித்திட்டம் தீட்டிக் கவிழ்ந்து தனது குதிரை பேரத்தால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கைப்பாவை அரசை வெற்றி பெற வைத்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் அநாகரீகம். பணத்தைக் கொண்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் அயோக்கியத்தனம். இது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் தார்மீக தோல்வி.   

தேர்தல்களில் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள் ஆட்சி அமைக்கிக்கின்றனர். ஆனால் பாசிச வெறி கொண்ட பாஜக அதனை ஏற்க மறுக்கிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 11 அரசு களைக் கவிழ்த்து, மிகக்கேவலமாகக் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 2016-ல் அருணாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில், வெறும் 11 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக, அப்பட்டமாகக் குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜகவை நம்பி களம் இறங்கிய கலிகோபுல் தற்கொலை செய்து கொண்டதுதான் மிச்சம்.  

2017ல் மணிப்பூர் மற்றும் கோவாவில் அதிக இடங்களைப் பிடித்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் வீழ்த்தி விலைக்கு வாங்கியதுடன், பல சிறுகட்சி எம்எல்ஏக்க ளையும் பேரம் பேசி ஆட்சியைக் கைப்பற்றியது.  2017-ல் பீகாரிலும் இது போன்ற தில்லுமுல்லு வேலையில் ஈடுபட்டே பாஜக ஆட்சி அமைத்தது. 

2018ல் மேகாலயாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும் குறுக்குவழியில் ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது. அதே ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தைச் சட்டவிரோதமாகக் கலைத்து ஆளுநர் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 

2019-ல் சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜகவை மக்கள் ஏற்கவில்லை. ஆனால் பாஜக அதிகார வெறி கொண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி,  சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.  இதே மோசடி வேலைகளால் 2019-ல் கர்நாடகாவிலும், 2020ல் மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சி அதிகாரத்தை பாஜக கைப்பற்றியது.

2021-ல் புதுச்சேரியில் மக்கள் பாஜவை நிராகரித்த நிலையில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்களை கொண்டும் ரங்கசாமியை மிரட்டியும் வளைத்தும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக.  

இப்படி மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே 11 முறை மாநிலங்களில் பாஜக ஆட்சி  

அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. பாஜகவின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தை மக்கள் தூக்கி எறியும் காலமும் வரும்!

-ஜுலை 5 தீக்கதிர் தலையங்கம்

Spread the love