August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தேனீக்களுக்கு லாக் டவுன்

சிதம்பரம் இரவிச்சந்திரன்.


ஆஸ்திரேலியா தேனீக்களுக்கு லாக் டவுன் அறிவித்துள்ளது. நியூ சவுத் வேல்ஸில் ‘வரோவா’ என்ற ஒட்டுண்ணித் தொற்று பரவுவது கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேனீக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேனீக்கள், தேனீ வளர்ப்புப் பெட்டிகளை விவசாயிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பரவும் ‘வரோவா’
இத்தொற்றை ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா நாட்டைவிட்டே விரட்டியிருந்தது. ஆனால் சமீபத்தில் இது சிட்னிக்கு அருகில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூறு கிலோமீட்டர் தொலைவு வரை இவை பரவியுள்ளன. உலகம் முழுவதும் தேனீக்களை அழிக்கும் முக்கியத் தொற்று இது.
ஆஸ்திரேலியாவில் தேனீ வளர்ப்பவர்களுக்கு இடையில் இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுண்ணிகள் தேனீக்களின் உடலில் நுழைந்து உடல் திரவங்களை உறிஞ்சிக்குடித்து அவற்றை அழிக்கின்றன. தேன் உற்பத்தி, அதன் வணிகத்தில் ‘வரோவா’ பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க வேறு வழி இல்லாததால் இலட்சக்கணக்கான தேனீக்கள் லாக் டவுனிற்கு சமமான சூழலில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கடுகை விட சிறியதாக இருக்கும் ‘வரோவா’ மனிதனை முடக்கிப் போட்டு ஆட்டிப் படைத்து வருகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து மனிதன் மீண்டுவருவது போல தேனீக்களால் முடியவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. இவற்றை சில இடங்களில் கொல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
நமக்கு மட்டுமே ‘லாக் டவுன்’ என்று நினைப்பது தவறு என்பதையே தேனீக்களுக்கான இந்த ‘லாக் டவுன்’ எடுத்துக்காட்டுகிறது

(73390 89961 – [email protected])

Spread the love