September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பும்-அமலாக்கமும்

தேசிய கல்விக் கொள்கை குறித்த ஆழ்ந்த விவாதம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடெங்கிலும் நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த அளவுக்கு விவாதமும், எதிர்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. கல்வியில் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது இதற்கான காரணமாக இருக்கக்கூடும். ஆனால் எதிர்ப்புகளையும் மீறி தமிழ்நாட்டில் தே.க.கொ. அமலாகி வருவது கண்கூடாகத் தெரிகிறது. கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு தே.க.கொ. இந்தியா முழுவதும் திணிக்க முயலுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசின் கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று மேடைகள்தோறும் பொய்யுரை செய்கிறார். தமிழக ஆளுநர் தன்னுடைய நிர்வாக எல்லைகளை மீறி தமிழகத்தில் தே.க.கொ. அமல்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகள் எடுத்து நிழல் நிர்வாகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் மட்டுமே கல்வி வளர்ச்சி சாத்தியமாகும் என்பதே தமிழக அரசின் கருத்தாக இருப்பதால் மாநில அரசின் கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு வல்லுனர் குழுவை நியமித்துள்ளது. குழு உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முழுமையானதொரு அறிக்கையைச் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். புதிய ஆசிரியன் இதழும் இரண்டு இணையவழிக் கருத்தரங்குகள் நடத்தி நமது பரிந்துரைகளைத் திரட்டி குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளது. பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் நேரடியாகத் தொடர்புள்ளவர்கள் இக்கருத்தரங்கில் அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கல்வி சார்ந்த விவாதம் அனைத்து மட்டங்களிலும் நடந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
இதுவரை பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளை பல்கலைக் கழகக் கல்விக்குழுக்கள் விவாதத்துக்கு உட்படுத்தியுள்ளன. பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் நல்லவைகளை ஏற்றுக்கொண்டும் அல்லவைகளை விட்டுவிட்டுமே உயர்கல்வியை முன்னெடுத்துச் சென்றுள்ளன. இத்தகு நெகிழ்வுத் தன்மையும், ஜனநாயகப்பூர்வமான செயல்பாடுமே கல்வி வளர்ச்சிக்கு உதவிடும். கல்விப்புலத்தில் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கும் விமர்சனப் பார்வை அவசியமாகும். தேசிய கல்விக் கொள்கைக்கு நமது உறுதியான எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்வோம்.
-ஆசிரியர் குழு

Spread the love