August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தேசத்துரோகச் சட்டம் இனியும் இருக்கலாமா?

கடலூர் சுகுமாரன்


தேசத்துரோக சட்டத்தின் கீழ் புதிய வழக்குகளுக்கு தடை விதிக்கும் ஒரு உத்தரவை கடந்த மே 11 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
“தேசத்துரோக வழக்குகள் தவறாக கையாளப்படுகின்றன. ஒன்றிய அரசிடமிருந்து ஒரு தெளிவான விளக்கத்தை நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அதுவரை ஒன்றிய, மாநில அரசுகள் பிரிவு 124-ன் கீழ் புதிய வழக்குகள் பதிவதை நிறுத்த வேண்டும்” என்ற கருத்தையும் தெரிவித்தனர்.


அரசாங்கங்களை விமர்சனம் செய்வது தேசத்துரோகம் அல்ல என நீதிமன்றங்கள் அடிக்கடி நினைவூட்டுகின்றன. ஆனாலும் மனித உரிமைக் காவலர்களை அரசு வேட்டையாடுவது தொடர்ந்து நடக்கிறது.


ஒரே ஒரு முகநூல் பதிவு ஊடகவியலாளர் கிஷோர் சந்திர வாங்க்செம்சாவின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது. அவரது மாநிலமான மணிப்பூர் அரசின் முதலமைச்சரையும் ஆர்எஸ்எஸ்ஸையும் விமரிசித்ததுதான் அவர் செய்த தவறு. இதற்காக தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 140 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதுள்ள வேறொரு ‘தேசத்துரோக’ வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.


அதுபோல டெல்லியில் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடந்து முடிந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய், மிருனாள் பாண்டே, வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது தேச துரோக வழக்கு.. காலநிலை ஆர்வலர் திஷா ரவி 5 நாட்கள் சிறையில் அடைப்பு.. இதே போல கன்னையா குமார், உமர் காலித், எழுத்தாளர் அருந்ததி ராய், பத்திரிகையாளர் வினோத் துவா, சித்திக் கப்பன் ஆகியோர் மீதும் கடந்த காலங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.


காலனியச் சட்டம்
இந்திய தண்டனைச் சட்டத்தில் (ஐபிசி) 1870-ம் ஆண்டில் தேசத்துரோகப்பிரிவு சொருகப்பட்டது. கனன்று எரிந்த தேசிய விடுதலைப் போராட்டத் தீயை அணைக்கவும், இந்திய சுதந்திரப் போராளிகள் மற்றும் புரட்சியாளர்களை அடக்கி ஒடுக்கவும்தான் அது கொண்டுவரப்பட்டது. காந்தி, திலகர் என எண்ணற்றோர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டனர். 152 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட அரசாங்கத்தை விமர்சனம் செய்பவர்களை கேள்வி ஏதும் இல்லாமல் சிறையில் அடைத்திட அந்தக் காலனியச் சட்டம் ஆட்சியாளர்களுக்கு கைகொடுக்கிறது.


இருண்ட தசாப்தம்
குறிப்பாக நரேந்திர மோடி பிரதமர் ஆனபிறகு, அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளதாக,

பெங்களூருவில் இருந்து வெளிவரும் ஆர்டிகிள் 14 என்ற இணையதள செய்தி நிறுவனம் அண்மையில் புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 11 ஆயிரம் நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு வழக்குப் பதிவின் வேகம் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாம். ஹ னுநஉயனந டிக னுயசமநேளள என்று கடந்த 10 ஆண்டுகளை அந்த செய்தி நிறுவனம் அழைக்கிறது.
405 பேர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இதில் 98 சதவீத வழக்குகள் மோடி அரசு பதவிக்கு வந்தபின் போடப்பட்டவை. இதில் 126 பேர் மீது விசாரணை முடிவடைந்த நிலையில் 98 பேர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த விடுதலைக்கான பயணம் துன்பங்கள் நிறைந்தது. வருமானம் இழந்து, வாழ்க்கையை இழந்து, அரைகுறையாய் அவர்கள் உயிர் வாழ்கின்றனர். சிலர் இறந்து விட்டனர்.. பலர் மெல்ல இறக்கின்றனர்.


தேசத்துரோகப் பிரிவு நீக்கப்பட்டாலும் அந்த மகிழ்ச்சி நிலைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஏனெனில் அரசிடம் உபா, என்எஸ்ஏ போன்ற கருப்பு சட்டங்கள் கைவசம் உள்ளன. ஆனாலும் தேசத்துரோகச் சட்டம் ஒழிந்தால் அந்த வெற்றியை குறைத்து மதிப்பிட்டு விடவும் கூடாது. தங்களிடம் உள்ள சட்டங்களை எல்லாம் ஆயுதமயமாக்கும் அரசுக்கு எதிரான அந்த வெற்றி ஒரு சிறிய துவக்கம் மட்டுமே. பயங்கரவாத தடுப்புச் சட்டங்களுக்குப் பதிலாக அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் ஆக்கபூர்வமான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
அதற்காக நாம் குரல் கொடுப்போம்.. போராடுவோம்!

(94437 [email protected])

Spread the love