August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தென் அமெரிக்காவில் சிவப்பலை!

கியூபா, வெனிசுலா, நிகரகுவா, ஹோண்டுராஸ், சிலி, பெரு, பொலிவியா, அர்ஜென்டினா, மெக்சிகோ, கொலம்பியா ஆகிய லத்தின் அமெரிக்க நாடுகளில் நடந்துள்ள இடதுசாரி மாற்றம் நம் கவனத்திற்குரியது. விரைவில் பிரேசில் நாடும் இந்த பட்டியலில் இடம்பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கொலம்பியாவில் முதன் முறையாக ஹியுமன் கொலம்பியா என்ற இடதுசாரி கட்சியின் முன்னாள் கொரில்லா படைத்தளபதி குஸ்தவோ பெட்ரோ நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து நின்ற மில்லியனர் தொழிலதிபரை ஏழு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். கடும் வறுமை, கொடூர வன்முறைகள், போதை வியாபாரம் என்று சீரழிந்து வரும் நாட்டில் இனி நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். மார்க்சிஸ்டான சால்வடார் அலெண்டே சிஐஏ சதியின் மூலம் படுகொலை செய்யப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு சிலியில் இடதுசாரி ஆட்சி மலர்ந்துள்ளது. சமூக ஒருங்கிணைப்புக் கட்சியின் தலைவர் கேப்ரியல் போரிக் பொறுப்பேற்கிறார். ஹோண்டுராஸ் நாட்டில் நவம்பர் 2021-ல் நடந்த தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த சியோமாரா காஸ்ட்ரோ என்ற பெண்மணி வெற்றி பெற்றுள்ளார். நிகரகுவாவில் அமெரிக்க அரசு ஏவிய பொருளாதாரத் தடைகளை மீறி தொடர்ச்சியாக நான்காவது முறையாக சாண்டினிஸ்டா முன்னணியின் டேனியல் ஓர்டேகா வெற்றி பெற்றுள்ளார். மெக்சிகோவில் இடதுசாரி வேட்பாளர் லோபஸ் ஒப்ரடோர் வெற்றி பெற்றுள்ளார். இது மெக்சிகோவின் 49 ஆண்டுகால வரலாற்றில் இடதுசாரிகளின் முதல் வெற்றியாகும். பெரு, அர்ஜெண்டினா, பொலிவியா ஆகிய நாடுகளிலும் சோசலிசக் கட்சிகள் பதவிக்கு வந்துள்ளன. கியூபாவில் 1959 முதல் கம்யூனிஸ்ட் கட்சியும், வெனிசுலாவில் 1999 முதல் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும் ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. தென் அமெரிக்காவில் தனக்குச் சாதகமாக இல்லாத அரசுகளை தேர்தல் சதி போன்ற ஜனநாயகப் படுகொலைகளைச் செய்து ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கமாகும். கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல சிஐஏ எண்ணற்ற முயற்சிகள் மேற்கொண்டதை உலகறியும். தங்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத தென் அமெரிக்க நாடுகளை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது. தனக்கு சவால் விடும் நாடுகளை ஒடுக்க ராணுவத்தை இறக்கிவிடும்.. அல்லது பணம் கொடுத்து நாட்டில் கலவரத்தைத் தூண்டிவிடும். இவற்றையெல்லாம் முறியடித்தே தென் அமெரிக்க நாடுகளில் சிவப்பு வசந்தம் வீசுகிறது. இந்த நாட்டு மக்களுக்கும் தலைவர்களுக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவிப்போம் !
-ஆசிரியர் குழு

Spread the love