August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

தீ பிடிக்கும் திராட்சைத் தோட்டங்கள்

சிதம்பரம் இரவிச்சந்திரன்,


பிரான்சில் பர்கண்டி பிரதேசத்தில் சாப்லிஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் திராட்சைத் தோட்டங்களுக்குச் சென்றால் அங்கு உங்களுக்கு ஒரு அபூர்வக் காட்சி காத்திருக்கும். தோட்டமே தீ பற்றி எரிவது போலிருக்கும். கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அவை ராட்சச மெழுகுவர்த்திகள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தோட்டத்திற்கு நடுவில் இருக்கும் வழியெங்கும் பெரிய பெரிய மெழுகுவர்த்திகள் பிரகாசத்துடன் எரிந்துகொண்டிருக்கும். கடும் குளிரில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஆணிவேராக இருக்கும் திராட்சைச் செடிகளைக் காப்பாற்ற அங்கு விவசாயிகள் இவ்வாறு மெழுகுவர்த்தி ஏற்றுகின்றனர். நீண்ட வெப்பமான கோடைகாலத்திற்குப் பிறகு திடீரென்று வந்த கடும் குளிர் விவசாயிகளைப் பிரச்சனைக்குள் தள்ளியது.
மேற்கு ஐரோப்பாவில்
மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் பழத்தோட்டங்கள் இதன் மூலம் பரவலாக பாதிக்கப்படுகின்றன. மார்ச்சில் 20 டிகிரி செல்சியர்ஸ் என்ற வெப்பநிலை ஏப்ரல் ஆனவுடன் 5 டிகிரியாகக் குறைந்தது. கொடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு பழச்செடி மற்றும் மரங்களில் அரும்பி இருக்கும் பூ மொட்டுகளை அழிக்கின்றது. இதைத் தடுக்கவே விவசாயிகள் தோட்டங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கின்றனர். 2021-ல் இதேபோல் நடந்தபோது பிரான்சில் மட்டும் இதனால் 300 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது. சில விவசாயிகள் மெழுகுவர்த்திகளுக்குப் பதிலாக மின்சாரத்தைப் பயன்படுத்தி தங்கள் பண்ணைகளை வெப்பமூட்டுகின்றனர்.
குளிரில் நடுங்கும் திராட்சைக்கொடிகள்
இத்தகைய முறைகள் மூலம் 20 சதவீத இழப்பைத் தடுக்கமுடியும் என்று கருதப்படுகிறது. நகரும் வெப்பமூட்டும் கோபுரங்களை (அடிbடைந hநயவiபே வடிறநசள) தோட்டங்களில் நிறுவ முயற்சிகள் நடக்கின்றன. சிலர் அரும்பு விடும் இளம் பூக்களில் நீர் தெளிக்கின்றனர். இந்த நீர் சிறிய பனித்துளியாக மாறி கொடுமையான குளிரில் இருந்து இளம் மொட்டுகளை காப்பாற்றும் என்று விவசாயிகள் நம்புகின்றனர். பிரான்ஸ் திராட்சைத் தோட்டங்கள் மட்டும் அல்ல, பெல்ஜியம், நெதர்லாந்திள் ஆப்பிள் மற்றும் பிற பழத்தோட்டங்களும் இதே நிலையில் பிரச்சனையைச் சந்தித்துவருகின்றன.
புவி வெப்ப உயர்வே வில்லன்
உலக வானிலை பண்பு (றுடிசடன றுநயவாநச ஹவவசiரெவiடிn) என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் பிரான்சில் ஷாம்பைன், லூர், பர்கண்டி பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இதற்குக் காரணம் புவி வெப்ப உயர்வே என்று அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொழிற்சாலை மாசுகள், மற்றவற்றின் மூலம் உயரும் புவியின் வெப்பநிலையால் செடிகள் பருவத்திற்கும் முன்பே பூக்கத் தொடங்குகின்றன. ஆனால் சாதகமற்ற காலநிலை உடனே ஏற்படுவதால் அவை அழிந்து அது பெரும் இழப்புகளுக்குக் காரணமாகிறது.
வெப்பக்காற்று வீசும்
அட்லாண்டிக் பகுதியில் இருந்து வெப்பக்காற்று வீசும். அது மேற்கு ஐரோப்பாவில் நிலவும் கடும் குளிரை முடிவுக்குக் கொண்டுவரும் என்று வானிலை ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதனால் தங்கள் திராட்சைத் தோட்டங்கள் குளிரின் பிடியில் இருந்து மீண்டு எதிர்பார்க்கும் விளைச்சலைத் தரும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். நம்பிக்கைகள் நனவாகட்டும்.
(73390 89961 – [email protected])

Spread the love